வெடுக்குநாறி மலையில் தொல்லியல் திணைக்களம் ஆய்வு!

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைவாக வெடுக்குநாறி மலையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (10) கொழும்பிலிருந்து வந்திருக்கும் தொல்லியல் நிபுணர்கள், வவுனியா மாவட்ட தொல்லியல் திணைக்களத்தினர் வெடுக்குநாறிமலையை ஆய்வு செய்யும் நோக்கில் இன்று காலையில் அங்கு வந்திருந்தனர். காலையிலிருந்தே ஆய்விற்கு தேவையான முன்னேற்பாடுகள் இடம்பெற்றன. நெடுங்கேணி பொலிஸார், இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கினர்.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவியதையடுத்து, அங்கு சென்ற ஆலய நிர்வாகத்தினருடன், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

“நீண்டகாலமாக வெடுக்குநாறிமலையின் பிரச்சினை தொடர்கின்றது. இதனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பிரதேச மக்கள் இருக்கின்றார்கள். அடிக்கடி சர்ச்சையும் தோன்றுகிறது என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஜனாதிபதி செயலகத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகம், வெடுக்குநாறி மலையை ஆய்வு செய்து, தரவுகளை தருமாறு தொல்லியல் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது. அதற்கிணங்கவே ஆய்வுப்பணிகளை ஆரம்பித்துள்ளோம்“ என தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட ஆலய நிர்வாகம், ஆய்வு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியது.

இதையடுத்து, வெடுக்குநாறிமலையில் காணப்படும் கல்வெட்டின் எழுத்துக்களை பிரதி எடுக்கும் நடவடிக்கையில் தொல்லியல் திணைக்களத்தினர் ஈடுபட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here