ஊழியரின் கையை காப்பாற்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான இயந்திரத்தை வெட்டிய உரிமையாளர்!


தொழிலாளியின் உயிரை காப்பாற்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான அச்சு இயந்திரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்த உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அம்பாறை நகரில் இயங்கி வரும் தரிந்து பிரிண்டர்ஸ் என்ற அச்சக நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் கை எதிர்பாராத விதமாக அந்த அச்சு இயந்திரத்திற்குள் சிக்கிவிட்டது.

இதை அறிந்ததும், அச்சக உரிமையாளர் விரைந்து வந்து கைக்கு சேதம் ஏற்படாத விதமாக இயந்திரத்தை வெட்டி, ஊழியரின் கையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். இதற்குள் அம்பாறை வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு சத்திர சிகிச்சை நிபுணர் அடங்கிய குழுவொன்றை அங்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

இதனிடையே இயந்திரத்திற்குள் அகப்பட்டிருந்த தொழிலாளியின் கையை விடுவிக்க இயந்திரத்தை பின்னோக்கி செலுத்துவோம் என்று ஏனைய தொழிலாளர்கள் கூறியபோது, அவ்வாறு செய்தால் ஊழியரின் கைக்கு உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனக் கூறிய அச்சக உரிமையாளர், தனக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான இயந்திரத்தில் ஊழியரின் கை அகப்பட்டுள்ள பகுதியை வெட்டி அகற்ற முன்வந்தார்.

இதற்காக வெல்டர்களையும் அழைத்து, அதற்கான பணியை மேற்கொண்டார். அதேசமயம், வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்த சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவருக்கும் தகவல் அனுப்பினர். அவரும் பயணத்தை இடைநிறுத்தி அங்கு வந்தார். ஊழியரின் கை பாதுகாப்பாக அகற்றும்வரை, வைத்தியரும் அங்கிருந்தார்.

வெல்டர்களின் நுட்பமான பணி, வைத்தியரின் சிகிச்சை காரணமாக ஊழியருக்கு ஆபத்தின்றி மீட்கப்பட்டார்.

தனது ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமையை பற்றி சிந்திக்காமல் ஒரு ஊழியரின் எதிர்காலம் குறித்து செயற்பட்ட அச்சக உரிமையாளர் மெத்தானந்த ரூபசிங்க, சத்திரசிகிச்சை நிபுணர் கயான் கல்பகே ஆகியோரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here