நாடு முழுவதும் வருகிறது ‘பாஸ்டேக்’ திட்டம்… பெட்ரோல் போட பணம் தேவையில்லை!

நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடிகளில் அமலில் உள்ள ‘பாஸ்டேக்’ முறை விரைவில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் அமல்படுத்தப்பட உள்ளது. பெட்ரோல் பங்க்குகளில், பெட்ரோல் அல்லது டீசல் வாங்குவோர் பணம் செலுத்துவதற்காக இனி காத்திருக்க வேண்டியதில்லை.

சுங்கச் சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறையில் பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் ஆர்.எப்.ஐ.டி எனப்படும் ரேடியோ கதிர் அலைகளை அடையாளம் காணும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் ‘பாஸ்டேக்’ எனப்படும் குறியீட்டு அட்டையை குறிப்பிட்ட தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த குறியீட்டு அட்டை பொருத்தப்பட்ட கார், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும்போது அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் ரேடியோ கதிர் அலைகளை அடையாளம் காணும் நவீன கருவி, சுங்கக் கட்டணத்தை தானாக கழித்துக் கொள்ளும்.

‘பாஸ்டேக்’ குறியீட்டு அட்டையில் பதிவேற்றப்பட்ட தொகை தீர்ந்த பின் மொபைல் போன்களுக்கு ‘ரீசார்ஜ்’ செய்வதை போல் இணையதளம் மூலம் ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ளலாம். ‘பாஸ்டேக்’ அட்டைகள் குறிப்பிட்ட சில வங்கி கிளைகளில் கிடைக்கும்.

‘பாஸ்டேக்’ முறையில் சுங்கச் சாவடிகளில் பணம் பெறப்படுவதால் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. ரொக்கம் தந்து அதற்கான சில்லரை பெற வேண்டிய சூழ்நிலையும் தவிர்க்கப்படும். இந்த திட்டத்தை பெட்ரோல் பங்க்குகளிலும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

வாகனங்களுக்கு பெட்ரோல் அல்லது டீசல் வாங்க ‘பாஸ்டேக்’ முறையில் பணம் செலுத்தும் திட்டம் தொடர்பாக ‘இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ ஆகியவற்றின் நிர்வாகிகள், சமீபத்தில் ஆலோசித்தனர்.

அந்த கூட்டத்துக்கு பின் மூன்று நிறுவனங்களும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதையடுத்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் பா.ஜ மூத்த தலைவருமான நிதின் கட்கரி, பெட்ரோல் பங்க்குகளில் ‘பாஸ்டேக்’ பட்டை முறையில் பணம் செலுத்தும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் செலுத்தவும் இந்த திட்டத்தை பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். இதற்கிடையே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ‘பாஸ்டேக்’ திட்டத்துக்காக சமீபத்தில் இரு மொபைல் ‘ஆப்’களை வெளியிட்டு உள்ளது.

வங்கி கணக்குடன் இணைப்பு:

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும், தேசிய – மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை பரவலாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த, ‘பாஸ்டேக்’ குறியீட்டு அட்டைகளை பெட்ரோல் பங்க்குகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ‘பாஸ்டேக்’ முறையை நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஐ.எச்.எம்.சி.எல் எனப்படும் இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தால் வழங்கப்படும் புதிய ‘பாஸ்டேக்’ அட்டைகள் வாகனம் வைத்திருப்போரின் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படும். வங்கி கணக்கு மூலம் ‘பாஸ்டேக்’ அட்டையில் பணம் வரவு வைக்கப்படுவதால் கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here