கடத்தப்பட்ட பெண் குழந்தை மூன்று மாதத்தின் பின் கண்டுபிடிக்கப்பட்டது!

மூன்று மாதங்களுக்கு முன் மாயமான 2 வயது சிறுமி ஹரிணியை போலீசார் நேற்று மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட அந்த குழந்தை திருப்போரூர் அருகே குழந்தை இல்லாத தம்பதியிடம் இருந்தது விசாரணையில் தெரிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மானாம்பதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 25. இவரது மனைவி காளியம்மாள், 20. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு ஹரிணி, 2, என்ற பெண் குழந்தை உள்ளது.

பவுஞ்சூர் அடுத்த அணைக்கட்டு காவல் நிலையம் எதிரே தெருவில் கடந்த, செப்., 15ம் தேதி இரவு மனைவி மற்றும் குழந்தையுடன், வெங்கடேசன் உறங்கினார்.காலையில் எழுந்து பார்த்த போது அருகே படுத்திருந்த சிறுமியை காணவில்லை. அதிர்ந்து போன அவர் அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிறுமியின் பெற்றோர் மற்றும் தனிப்படை போலீசார் அந்த சிறுமியை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது குழந்தையை கடத்திய நபரின் படம் சிக்கியது.

இதற்கிடையே, மதுரையில் ஹரிணி இருப்பதாகவும் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் சிறுமியை ஒப்படைப்பதாகவும் மர்ம போன் அழைப்புகள் வந்தன; அவை, போலி என்பது பின் தெரிய வந்தது. தனிப்படை போலீசார் மும்பை, கோல்கட்டாவுக்கு சென்று குழந்தையை தேடி வந்தனர்.

இந்நிலையில், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த குழந்தையை கடத்திய மர்ம நபர் பற்றிய தகவல் போலீசாருக்கு சமீபத்தில் தெரிந்தது. அந்த நபரின் நண்பர் கல்பாக்கத்தில் இருப்பதாகவும் அவன் பெயர் பிரகாஷ் என்பதும் போலீசாருக்கு தெரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன் அவனை சுற்றி வளைத்த போலீசார் ரகசியமாக விசாரித்து வந்தனர். அப்போது, செய்யூரைச் சேர்ந்த வீரபாண்டி என்பவனோடு சேர்ந்து குழந்தையை கடத்தியதாக பிரகாஷ் ஒப்புக்கொண்டான். கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த நபர் தான் வீரபாண்டி என்பதும் தெரிந்தது.

பிரகாஷ் அளித்த தகவலின்படி திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு என்ற இடத்தில் வசிக்கும் சங்கீதா – தாஸ் தம்பதியின் வீட்டுக்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அதிரடியாக நுழைந்த போலீசார், அங்கிருந்த குழந்தை ஹரிணியை மீட்டனர். அவர்களுடன் சென்ற வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. வாரி அணைத்த அவர்கள் குழந்தையை கட்டிப் பிடித்து அழுதனர்; போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர். போலீஸ் வருவதை அறிந்த தாஸ் தப்பி ஓடிவிட்டான். அவன் மனைவி சங்கீதாவை அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சங்கீதாவும், வீரபாண்டியும் நண்பர்கள். சங்கீதா – தாஸ் தம்பதிக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை. அந்த ஏக்கத்தை தீர்க்க தெருவில் படுத்திருந்த சிறுமி ஹரிணியை கடத்தி சங்கீதாவிடம் வீரபாண்டி கொடுத்துள்ளான். தன் சொந்த மகள் போல சிறுமி ஹரிணியை, சங்கீதா மூன்று மாதங்களாக வளர்த்து வந்துள்ளாள். தலை முடியை வெட்டி, ஆடை, முக அலங்காரங்களை மாற்றி அந்த தம்பதி வளர்த்து வந்துள்ளனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்ட, எஸ்.பி சந்தோஷ், நேற்று, அணைக்கட்டு வந்து வெங்கடேசன் – காளியம்மாள் தம்பதிக்கு ஆறுதல் கூறினார்; அவரிடம், அந்த தம்பதி நன்றி தெரிவித்தது. சங்கீதாவின் கணவர் தாஸ் தப்பி ஓடி விட்டதால் அவனை போலீசார் தேடி வருகின்றனர். குழந்தையை மூன்று மாதங்களாக பறி கொடுத்திருந்த காளியம்மாள் தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.

”குழந்தை கிடைத்தது குல தெய்வமே கிடைத்தது போல் உள்ளது. கடவுளுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஹரிணி காணாமல் போனதால் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டியிருந்தேன். அவள் கிடைத்து விட்டதால் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டுகிறேன்.”

”பத்திரிகைகள், எஸ்.பி., மற்றும் தனிப்படை போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைவரும் சிரமப்பட்டு தேடியதால் தான் என் குழந்தை கிடைத்துள்ளது. இனிமேல் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். மீண்டும் ஹரிணி கிடைத்தது சந்தோஷமாக உள்ளது.”

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here