கம்பெரலிய+ தேர்தல்: தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குடுமிப்பிடி சண்டை!

இது தேர்தல் ஆண்டு. மூன்று தேர்தல் நடக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தந்த மட்டத்தில் உள்ளவர்கள், தமக்குரிய தேர்தல் வேலைகளில் இறங்கி விட்டார்கள். அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து, மைத்திரிபால சிறிசேன ஆளுனர் மாற்றங்களை செய்கிறாரே… அதுபோல.

இந்த மூன்று தேர்தல்களிலும், கடைசி மட்டத்திலுள்ள மாகாணசபை தேர்தலையொட்டிய செய்தி இது.

இந்த வருடம் நிச்சயம் மாகாணசபை தேர்தல் வரப் போகிறது என்பதால், வடக்கு மாகாணசபையை குறிவைத்துள்ளவர்கள் தீயாக வேலைசெய்ய ஆரம்பித்துள்ளனர். தேர்தல் என்றாலே குழப்பமும் கூடவே வரும் அல்லவா. அப்படியொரு குழப்பம் பற்றிய தகவல்களே இது.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் உள்சங்கதி ஒன்று.

கடந்த மாகாணசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் பலர் அடுத்த மாகாணசபையையும் குறிவைத்துள்ளனர். கூட்டமைப்பில் இருவர் மட்டுமே அடுத்தமுறை போட்டியிடுவதில்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். கடந்த மாகாணசபை காலத்தில் வாகன பொமிற் வழங்கப்பட்டது. ஆகக்குறைந்தது 60 இலட்சம் ரூபாவிற்கு குறையாமல் அதனை விற்பனை செய்து விட்டார்கள். அதில் ஒரு பகுதியை இம்முறை தேர்தலிற்கு அவர்கள் செலவிடவுள்ளதால், இம்முறை தேர்தல் நிச்சயம் களைகட்டும்.

காசிருந்தாலும், கூட்டங்களில் இல்லாவிட்டால் மக்கள் மறந்து விடுவார்களே…

ஆம். இதற்காகத்தான் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் ஒன்றிணைந்து அமைப்பொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் தம்மையும் அழைக்க வேண்டுமென, இணைத்தலைவர்களிற்கு கடிதமும் அனுப்பியுள்ளார்கள்.

இனி அரங்கில் இருந்தால்தான், தேர்தலில் வெல்லலாமென மாகாணசபை உறுப்பினர்கள் நினைக்கிறார்கள். அப்படி நினைக்கும் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் பற்றிய விசயமே இது.

கோப்பாய் தொகுதியில் இருக்கிறார் தமிழரசுக்கட்சி முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி.

அபிவிருத்திக்குழு தலைமை பதவிக்கு கூட்டமைப்பு எம்.பிக்கள் நியமிக்கப்பட்டபோது, ஒவ்வொரு எம்.பிக்கும் ஒவ்வொரு பிரதேசம் ஒதுக்கப்பட்டது. மாவை சேனாதிராசா வலி வடக்கு, த.சித்தார்த்தன் வலி கிழக்கு, சுமந்திரன் வடமராட்சி என அந்த பட்டியல் நீள்கிறது.

வலி கிழக்கில்- கோப்பாய் தொகுதி அபிவிருத்தி திட்டங்கள் த.சித்தார்த்தனின் ஒதுக்கீட்டிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. கம்பெரலிய திட்டத்திற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் பணம் ஒதுக்கப்பட்டபோதும், பெரும்பாலான எம்.பிக்கள் தனித்தவிலே வாசித்தார்கள். ஈ.சரவணபவன் தங்கள் கட்சிக்குள்ளே இருக்கும் பிரமுகர்களின் பரிந்துரைகளை கூட ஏற்றுக்கொள்ளவில்லை. நல்லூர் தொகுதியையும் தானே கவனிக்கிறேன் என கூறி, அங்குள்ள சீ.வீ.கே.சிவஞானத்தின் அபிவிருத்தி பரிந்துரைகளையும் ஏற்க மறுத்து விட்டார். பின்னர், மாவை சேனாதிராசா ஊடாகவே சீ.வீ.கே இன் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன. அது போல கிளிநொச்சி, வடமராட்சி, தென்மாட்சி எல்லாம் அந்தந்த எம்.பிக்களே தனித்தவில் வாசித்தார்கள்.

ஆனால், கோப்பாயில் மட்டும் த.சித்தார்த்தன் தாராளமாக நடந்திருக்கிறார். எல்லா கட்சிகளின் பரிந்துரைகளையும் வாங்கியே செயற்படுத்தியிருக்கிறார்.

இப்பொழுது கம்பெரலிய இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் பணம் ஒதுக்கப்படவுள்ளது. கூடவே, தேர்தலும் வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் எதையாவது செய்து, தேர்தலை குறிவைக்கிறார் பரஞ்சோதி. இதற்காக ஒரு பக்கா திட்டம் போட்டுள்ளார். அதாவது, கோப்பாய் தொகுதியில் ஒரு அபிவிருத்தி கலந்துரையாடல்- எல்லா எம்.பிக்களையும் அழைத்து- நடத்துவதென திட்டமிட்டுள்ளார். வரும் 12ம் திகதி கூட்டத்திற்கு திட்டமிடப்பட்டது.

மாவை சேனாதிராசாவிடம் சென்று திட்டத்தை சொல்ல, அதற்கென்ன தம்பி வைப்போம் என்றிருக்கிறார். இதையடுத்து தமிழரசுக்கட்சியின் எம்.பிக்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களிற்கு கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அதாவது, தமிழரசுக்கட்சியின் பொறுப்பிலுள்ள இதர தொகுதிகளில், அதற்கு பொறுப்பாக உள்ள எம்.பிக்கள் மட்டுமே அபிவிருத்தி பரிந்துரைகளை வழங்க, பங்காளி கட்சியொன்றின் தொகுதிக்குள் தமிழரசுக்கட்சி பங்குகேட்க ஆரம்பித்துள்ளது.

இந்த கூட்டம் பற்றிய தகவலை புளொட் தரப்பிற்கு பரஞ்சோதியே தொலைபேசியில் வழங்கியிருக்கிறார். அதற்கு, “முதலில் வட்டுக்கோட்டை, கிளிநொச்சி போன்ற மற்றைய இடங்களில் அபிவிருத்தி கூட்டங்களை வையுங்கள். வருகிறோம். இதன்பின்னர் இங்கு வைக்கலாம்“ என சூடு வைக்கப்பட்டதாக தகவல்!

எப்படியோ, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பங்காளிகள் வேட்டியை மடித்துக்கட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்பது தெரிகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here