வடக்கை மிரட்டும் ரயில் விபத்துக்கள்!

வடபகுதியில் கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட சிவிலியன் உயிரிழப்புகளிலும் பார்க்க புகையிரத கடவைகளில் நிகழும் விபத்துக்கள் ஏற்படுத்தும் உயிரிழப்புகள் அதிகமோ என்று மலைக்கும் அளவுக்கு விபத்து மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

போருக்குப் பின்னர் வடக்கில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் ரயில் விபத்துக்கள் மற்றும் வீதி விபத்துக்கள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.

எமக்கே தெரியாமல் சடுதியாக நிகழ்ந்து உடல், உளப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளைப் பொதுவாக விபத்து என்று வரைவிலக்கணம் செய்கிறோம். விபத்துக்கள் பல வடிவங்களில் நிகழ்ந்தாலும் இன்று உலகளவில் அதிகமான உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதில் பிரதான அங்கம் வகிப்பவை வீதி விபத்துகளே என ஆய்வுகள் கூறுகின்றன. இயந்திரமயமாக மாறி விட்ட எமது வாழ்க்கைச் சூழலானது, தக்கெனப் பிழைத்தல் என்ற கோட் பாட்டுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். நாம் பயணிப்பதற்கான தூரங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இறுதியாக பயணம் முடியும் முன்னரேயே எமது வாழ்வும் முடிந்து விடுகிறது. இன்ைறய நிலையில் உலகில் நிகழும் இறப்புக்களில் 2.2 வீதமானவை வீதி விபத்துக்களால் ஏற்படுகின்றன. மனிதர்களிடத்தில் அதிகமான இறப்பை ஏற்படுத்துவதற்கான காரணிகளில் வீதி விபத்துக்கள் 9ஆவது இடத்தில் இருக்கின்றன. 2030ஆம் ஆண்டளவில் இந்த நிலை அதிகரித்து 7ஆவது இடத்தினை தொட்டு விடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

ரயில் விபத்து

புகையிரத கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துக்களுக்கு எமது அலட்சியமும் காரணமாக இருப்பதுடன், புகையிரத திணைக்களத்தின் அசமந்தமும் ஒரு காரணமாக இருக்கின்றது.

அண்மைக்காலமாக வடக்கிலேயே புகையிரத விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக வவுனியா, ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் உள்ள புகையிரதக் கடவைகளில் பல விபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இப் பகுதிகளில் உள்ள பல புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்ற கடவைகளாக இருக்கின்றன. மேலும் புகையிரதக் கடவைகளில் நிரந்தரமான கடவை காப்பாளர்கள் நியமிக்கப்படுவதுமில்லை. இதனால் இதன் ஊடாக பயணிப்போர் புகையிரதத்தில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகின்றனர்.

வவுனியாவில் கடந்தவருடம் மே மாதமளவில் உழவு இயந்திரம் மோதியதில் இருவர் உரிழந்திருந்தனர். வவுனியா_ புத்தூர் சந்திக்கு அருகிலுள்ள கடவையை மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் கடக்க முற்பட்டபோது புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.

கடந்தாண்டு ஜூலை மாதமளவில் யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியில் நடைபெற்ற புகையிரத விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்கள் கடவையை கடக்க முற்பட்ட போது கொழும்பில் இருந்த யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரத்துடன் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிவிரைவு புகையிரத்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இராணுவத்தினர் காயமடைந்திருந்தனர்.

அதேவேளை, நாட்டின் பாதுக்காப்புப் படையினர் கூட இப் புகையிரதங்களின் விபத்துக்களில் இருந்து தப்பிக்கவில்லை. இதில் கடந்தாண்டு யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியில் நடைபெற்ற விபத்தில் இரு இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்தனர். புகையிரதம் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட போதும் அவதானிக்காது விரைவாக கடக்க முற்பட்டவேளை புகையிரத்துடன் மோதுண்டு சாரதி சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றைய இராணுவீரர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்திருந்தார்.

இவ் விபத்துக்கள் அனைத்திற்கும் அச்சாரமாக அமைந்தது ஒமந்தை புகையிரத விபத்து. அண்மையில் வவுனியா ஓமந்தைப் பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நடைபெற்ற புகையிரத விபத்தானது முழு நாட்டையுமே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. சுவீடனில் இருந்து தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு வருகை தந்திருந்த பெண் ஒருவர், கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் உள்ள தனது தாய் மற்றும் சகோதரியையும் அழைத்துக்கொண்டு ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள தமது உறவினரைப் பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளார். ஏ9 வீதியில் இருந்து உட்புறம் நோக்கிச் சென்ற சிறுவீதி வழியாகப் பயணித்தபோது இடையில் குறுக்கிட்ட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையைக் கடந்தே வீட்டுக்குச் செல்லவேண்டிய நிலையில் காலை 10 மணியளவில் புகையிரதக் கடவைப் பகுதியை இவர்களின் அண்மித்த வேளையில், சமநேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கடுகதி புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் காரில் பயணித்த சிறுமி உட்பட நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் வாகனத்தை விட்டு வெளியே பாய்ந்தமையால் படுகாயத்துடன் உயிர் தப்பியிருந்தனர். புகையிரதத்துடன் மோதுண்ட காரானது 300 மீற்றருக்கும் அப்பால்; இழுத்துச் செல்லப்பட்டதுடன் உள்ளே இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த காட்சியானது விபத்தை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியில் உறையச் செய்திருந்தது.

நீண்ட காலத்தின் பின்னர் தமது உறவினர்களைப் பார்க்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பானது வடபகுதியை மட்டுமல்லாது, முழு நாட்டையுமே பெரும் சோகத்தில் தள்ளியது. குறித்த விபத்தானது தவிர்க்கப்பட்டிருக்க முடியும். மனித அலட்சியப் போக்கால் அது தவிர்க்கப்பட முடியாததாகி விட்டது.

குறித்த விபத்து நடைபெற்ற பாதையானது சட்டவிரோதமான பாதை என புகையிரத திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த கடவைக்கு அப்பால் பல குடிமனைகள் காணப்படுவதுடன் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை அந்த வீதி நீண்டு செல்கின்றது. பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்துவருவதுடன் முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தாம் குறித்த காணிகளைப் பயன்படுத்தி வருவதாகவும், அதற்கான காணி அனுமதிப் பத்திரங்களை வைத்திருப்பதாகவும் அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது தமது போக்குவரத்துத் தேவைக்காக அந்தப் பாதையையே பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

புகையிரதத் திணைக்களம் கூறுவதுபோல அந்தப் பாதை சட்டவிரோதமானதாக இருந்தால், அங்கு குடியிருக்கின்ற மக்களுக்குரிய மாற்று வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை.

வவுனியா ரயில் நிலையத்திலிருந்து மாங்குளம் வரையிலான பகுதி வரையில் பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவற்றில் குறிப்பிட்ட இடங்களில் கடவைக் காப்பாளர்கள் கடமையில் இருக்கின்றபோதும் பெரும்பாலான கடவைகளில் காவலில் ஈடுபடுவதில்லை. அத்துடன் தற்போது அமைக்கப்பட்டுள்ள புகையிரதப் பாதைகளானவை மிகவும் உயரமானதாக இருப்பதுடன் பொதுமக்கள் அதைக் கடந்து செல்வதில் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக கனகராயன்குளம், கொல்லர்புளியங்குளம் ஆகிய சில பகுதிக் கடவைகளில் பாதைகள் முற்றாக அமைக்காத நிலையில் இருக்கிறது. இதனால் புகையிரப் பாதைக்கு அப்பால் வசிக்கும் மீளக் குடியேறிய மக்கள் பயணம் செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

2017ஆம் ஆண்டின் தரவுகளின் படி நாடு முழுவதும் 685 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சின் புள்ளிவிவரங்கள் பிரிவு தெரிவித்திருக்கிறது.

அந்தக் கடவைகளில் பல வருடங்களாகப் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியர்களுக்கு புகையிரதத் திணைக்களம் நாளாந்தம் வெறும் 250 ரூபாவை மாத்திரமே வேதனமாகக் கொடுத்து வந்திருக்கிறது. மேலும் அவர்கள் பணி நிரந்தரமானதுமல்ல. வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறு 75 ஊழியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருவதாகவும், இவர்களுக்குக் காவல்துறையினரே நியமனம் வழங்கி நாட்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கி வருவதாகவும் இந்த ஊழியர்களுக்கான சங்கத்தின் தலைவர் ரொஹான் ராஜ்குமார் தெரிவிக்கின்றார்.

புகையிரதக் கடவை காப்பாளர்கள் தங்களுக்கு விளக்குகள் கூட வழங்கப்படவில்லை என்றும், அதேபோல தங்குவதற்கு கூட போதிய இடவசதி இல்லை என்றும் கூறுகின்றனர். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, வாழ்க்கைச் செலவு உயர்வு என்பவற்றுடன் இவர்களின் வேதனத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது மிகக் குறைவானதே. தமது பணி நிரத்தர நியமத்தையும் சம்பள அதிகரிப்பையும் கோரி கடவைக் காப்பாளர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையிலும் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. அதனால் குறித்த பணிகளில் இருந்து பல பணியாளர் விலகியும் செல்கின்றனர். வடக்குபகுதியில் நடைபெற்ற 90வீதமான புகையிரத விபத்துக்கள் பாதுகாப்பற்ற கடவைகளிலே நடைபெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் கூட பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் பயணித்ததனாலேயே நேர்ந்துள்ளது. குறித்த பகுதி ஊடாக பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள் எனப் பலரும் தினமும் பல நூற்றுக்கணக்கில் பயணிக்கும் நிலையில் குறித்த பகுதியில் பாதுகாப்பான புகையிரதக் கடவை ஒன்றை அமைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரி வந்திருந்தனர். மேலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருந்தன.

தற்போது பிரதான புகையிரத நிலையங்களுக்கு அருகாமையிலும் முக்கிய வீதிகளிலும் மாத்திரமே மிகவும் பாதுகாப்பான கடவைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் விபத்துக்கள் நடைபெறுவது குறைவு. இவ்வாறான ஒரு தானியங்கிக் கட்டமைப்பை அனைத்துப் பாதுகாப்பற்ற கடவைகளிலும் நிறுவமுடியும். ஆனால் அதை அமைப்பதற்கான செலவீனம், பராமரிப்புச் செலவு காரணமாக அவை அமைக்கப்படுவதில்லை. அவ்வாறான இடங்களிலேயே இன்று விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இந்த நூற்றாண்டில் விஞ்ஞான தொழில்நுட்பம் பெருமளவில் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக வீதிப் போக்குவரத்துகளில் எவ்வளவோ பாதுகாப்பு நடைமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகளை பெற்றுக்கொள்ள முடியும்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here