சோதிடம் கூறும் ரோகம் (நோய்) பற்றிய விபரங்கள்

சி.இராசநாயகம்
சோதிட ஆலோசகர்
0776147392

ஒருவருடைய பிறந்த சாதகத்தில் ரோகஸ்தானம் எனச் சொல்லப்படும் 6 ஆம் இடம் மற்றும் 1 ஆம் இடம் தேகக் கட்டமைப்பு இக் கிரகங்களினாலேயேயும், மற்றும் 8, 12 இந்த தானத்தில் இருக்கும் கிரகங்களினாலேயும், ரோக ஸ்தான அதிபதியினாலேயும் இந்த அதிபதியுடன் சம்பந்தப்பட்டுள்ள கிரகங்களினாலேயும், நோய் பற்றிய விபரங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதனைக் கிரகங்கள் வாரியாகவும், லக்கின நிலை வாரியாகவும், இராசி நிலை வாரியாகவும், கிழே விபரிக்கப்படும் விபரங்கள் கொண்டு அறிந்து தெளிவு பெறுக.

சூரியன்:- பித்தம், உஷ்ணம், சுரதாபம், தேகதாபம், கஷம், இருதய ரோகம், கண்ணோய், தோல் சார்ந்த நோய், எலும்புகள் சம்பந்தப்படுபவை, குறித்த வியாதிகளும், அக்கினி, ஆயுதம், விஷம், விறகு இவைகளால் ஆபத்தும், சத்துரு பயமும், களத்திரம், புத்திரம், ஆகியோர்களுக்கு விபத்தும், திருடர், அரசர், தரும தேவதை கால் நடைகள், சர்ப்பங்கள் மற்றும் பேய் பிசாசு இவைகளால் மனப்பயங்கொள்ளும் நோய்களும் காணப்படும்.

சந்திரன்:- நித்திரை, ஆலஸ்யம், கபம், அதிசாரம், சிதனஜ்வரம், கொம்புள்ள ஜந்துக்கள், லம் இவற்றினால் பயமுண்டாதல், அக்கினி மாந்தம், ஸ்திரீ பீடை, மனோசாந்தி, இரைத்த விகார வியாதி, பாலக்கிரக பயம் இவை உண்டு, மேலும் துர்க்காதேவி, தருமதேவதை சர்ப்பர், இயக்கள், பகைவர், இவர்களின் பயம் கொள்ளும் தாக்கமும் காணப்படும்.

செவ்வாய்:- தாகம், இரத்த ரோகம், கோபம், பித்தம், சுரம், அக்கினி, விஷம், ஆயுதம், குஷ்டரோகம், கண்நோய், குன்மம், காக்கை வலி, இவற்றால் சம்பந்தப்படும் பயமும், அரசர், பகைவர் அவர்களால் ஏதேனும் துன்பம், சகோதரர், புத்திரர், சத்துருக்கள் இவர்களுடன் சச்சரவு உண்டாகி ஊறு விளைவித்தல், காதலர்களாயின் பிணக்கு, உண்டாகி பயங்கரமான முடிவு எட்டவும், நெஞ்சும் அதற்கு மேல் உள்ள உறுப்புக்களில் நோய்களும் ஏற்படும்.

புதன்:- மனப்பயம், பீதி. கெட்டவார்த்தைப் பியோகம், கண்வலி, கண்டத்தில் நோய், மூக்கில் நோய், காய்ச்சல், பித்தம், சிலேட்டுமம், வாதரோகம், விஷம், தோல்நோய், பாண்டுநோய், கெட்டகனவு கண்டு பீதி கொள்ளல், அக்கினி சம்பந்தப்படுதல், சிறைசெல்லும் சந்தர்ப்பம் உண்டாதல், மற்றும் காதலர்கள் பிணக்கும், அரசர்கள் இவர்களால் சில துன்ப, துயரம் சந்திக்கவும் பலன் செய்யும்.

வியாழன்:- குன்மம், ஜவரம், சோகம், மோகம், கபம், காதுநோய், மயக்கம் ஆகிய இவையும், தேவஸ்தானம், பொக்கிஷம், இவைகளால் மனத்துயரம் பெறுதல், பிராமணர், கின்னரர், யட்சகர், தேவர், சர்ப்பர், வித்தியாதரர், ஆகிய இவர்களது சாபகோபங்களும், மற்றும் பெரியோர், குரு இவர்களது தாபத்தாலுண்டான அபசாரமும் உண்டு.

சுக்கிரன்:- பாண்டு, சிலேஸ்மம், வாதம், ஆகிய ரோகங்களும், கோபம், மயக்கம், விபத்து இவைகளும், குய்யம், முகம் இவைகளில் நோயும் மூத்திரவியாதி, முக்கிய உறுப்பு விபத்தினால் பாதிப்பு பெறுதல், சுக்கிலம் வெளிப்படுதலும், நடத்தைப் பிறழ்வானவர்களின் தொடர்பால் தேகசோர்வும், இயங்கா நிலையும், மற்றும் சந்தோச அனுபவிப்புக்கள் நிமிர்த்தம் மனப்பயமுறுத்தல், வியாதியும், நண்பர்களால் சில விபத்துக்களில் சிக்கிக் கொள்ளல் ஆகிய இவையும் உண்டு.

சனி:- வாதம், சிலேட்டுமம், கால்நோய், வியிற்று நோய், பக்கவலி, மாரடைப்பு, சுவாசநோய், இவை உண்டாவதுடன் சோம்பல். சிரமம், பிராந்தி, சேகதுவம்சம், கால்நடைகள், இழப்பு, துயரம், இவைகளுண்டு. களத்திரம், புத்திரர் இவர்களுக்கு ஆபத்து நேர்தலுடன் மரம், கல், மற்றும் பிசாசு பயம், இவற்றினாலும் துன்பதுயரம் உண்டு. எதிர்பாராத வாகன விபத்தில் சிக்கி நோய் அனுபவிக்கவும் இடமுண்டு.

இராகு:- மார்புவலி, குஷ்டம், புத்திரப்பிரமை, விஷம் சம்பந்தப்படுதல், வாதபீடை, இவை இருக்கும். மேலும் பைசாசர், சர்ப்பர், இவர்களால் மனப்பயம் இருக்கவும் களத்திரம், புத்திரம் இவர்களுக்கு ஆபத்தும் உண்டு.

கேது:- விஷம் சம்பந்தப்படும் வியாதிகளுடன் பிராமணர் சத்திரியர் இவர்களின் விரோதமும், எதிரி பகையாளிகளால் சில துன்ப, துயரங்களும் உண்டு.

குளிகன்:- பிரேத பயம், தேகபீடை, விஷம் கொண்டவை, ஆசௌசம், இவை சம்பந்தப்படும் துன்ப, துயரம் மனக்குழப்பமும் உண்டாகும்.

பன்னிரண்டு, இரண்டு இடங்களைச் சனி அல்லது செவ்வாய் பார்த்தாலும், அந்த இடங்களில் இருந்தாலும், அல்லது சந்திரன் சூரியன், அவ் வகையில் அமையப்பெற்றாலும், கண்களில் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குரு 3, 11 ஆகிய இடங்களில் அமையப் பெற்று, சனி, செவ்வாய் இவர்களுடன் சேர்கை பெற்றாலும் அல்லது பார்வை பெற்றாலும், காதுகளில் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. 5 ஆம் இடம் பாவ சம்பந்தமானால் வயிற்றுவலி ஏற்பட வாய்ப்புண்டு. 8 ஆம், 6 ஆம் அதிபர்கள் 7 ஆம், 8 ஆம் இடங்களிலிருப்பின் குதம் உறுப்பில் நோய்க்கு இடமுண்டு. 7 ஆம், 8 ஆம் நிலைகளில் சுக்கிரன் இருப்பின் குய்யம் நோய்க்குப் பலனமையும்.

6 ஆம், 8 அம் நிலைகளில் சூரியன் நிற்கில் காய்ச்சல் ஏற்படலாம். செவ்வாய் அல்லது கேது நிற்பின் இரணம் ஏற்படும். குரு நிற்பின் கஷம் ஏற்படும். சனி இருப்பின் வாத ரோகம் வரலாம். இராகு செவ்வாயால் பார்க்கப் பெற்றால் பக்கப் பிளவை சனி, சந்திரன் சம்பந்தம் பெற்றால் குன்மம் மேலும் சந்திரன் பாதிப்பான நிலையில் காணப்பெற்றால் சலரோகம், கஷம், ரோகம் ஏற்படலாம். 8 ஆம் இடத்தில் பாவக்கிரகம் இருக்கப் பெற்று அதனை மற்றொரு பாவக்கிரகம் பார்த்தால் நோய் அதிகப்படவும், நீசபார்வை மற்றும் தோஷநிலைப் பார்வையைக் கொடுக்குமாயின் இயமன், எமகண்டம் நிலை ஏற்படும் என்பதை அறிந்து கொள்க.

எட்டில் சூரியன் இருப்பின் அக்கினி, உஷ்ணம், சுரம், பித்தம், ஆயுதம், இவற்றால் பயப்படும் நிலையில் ரோகம் காட்டும். எட்டில் சந்திரன் இருந்தால் வாந்திபேதி, நீர் வியாதி, கஷரோகம், என்பவை உண்டாகும். எட்டில் செவ்வாய் இருப்பின் இரத்தக் கொதிப்பு, கூத்திர அபிசாரம், ஆயுதம் என்பவற்றால் தாக்கம் பெறுவதற்கு சந்தர்ப்பமுண்டு. எட்டில் புதன் இருந்தால் பாண்டுரோகம், புத்திப்பிரமை, காய்ச்சல் போன்ற வியாதிக்கு சந்தர்ப்பமுண்டு, எட்டில் குரு இருப்பின் கப நோய் ஏற்படும். எட்டில் சுக்கிரனிருப்பின் குய்யத்தில் நோய் மற்றும் பெண்களுடன் ஏற்படும் உறவு நிலைகள் மூலம் நோய் ஏற்படும். எட்டில் சனி இருந்தால் வாதம், சன்னி, கால். கை பாதிப்பு, விபத்து மற்றும் மரணபயத்தையும் எதிர்கொள்ள நேரிடும்.

எட்டில் ராகு இருந்தால் குஷ்டம், விஷம் சம்பந்தப்படும் வைசூரி போன்ற நோய்களால் மரணத்தை தழுவ நேரிடும். எட்டில் கேது இருந்தால் துர்மரணம், சத்துரு பகை, மற்றும் பாவ நிலைகளால் மரணத்தை நோக்கிய வாழ்வு உண்டு, இதைவிட நாவாம்ச நிலைகளில் எட்டாம் இடம் பாதிக்கப்பட்டிருப்பின் தோஷம் கடுமை நிலை பெற்றிருப்பின் மரணம் சம்பவிக்கக் கூடிய நிலைகளைத் தோற்றுவிக்கும் என்க.

இராசி நிலைகளை நாவாம்ச நிலையில் அட்டமாதிபதி கொண்டு பார்க்குமிடத்து பன்னிரண்டு இராசி நிலைகளுக்கும் நோய், பிணி துயரம் பின்வருமாறு கூறிக் கொள்ள முடியும்.

மேடராசி:- பித்தம், சுரம், உஷ்ணம், வயிற்றுப்பெருமல்.
இடபராசி:- வாதம், பித்தம், சிலேட்டுமம், மற்றும் அக்கினிப் பீடை
மிதுனராசி:- கஷம், வாதம், வயிற்றுவலி, வெப்பம்,
கடகராசி:- வாதம், வயிற்றுவலி, தலைப்பாரம்
சிம்மராசி:- சுரம், அம்மை, கால்நடை ஆபத்து, எதிரியால் ஆபத்து
கன்னிராசி:- குய்யத்தில் நோய், இடறி விழுதல்
துலாராசி:- கொடுமையான சுரம், சன்னி, உபாதை
விருட்சிகராசி:- பாண்டு ரோகம், கிரகணி
தனுசுராசி:- மரம், விறகு, ஜலம் மற்றும் ஆயுத பாதிப்பு.
மகரராசி:- வயிற்றுவலி, அன்னத்துஷேம், புத்திப்பிரமை.
கும்பராசி:- காசநோய், சுரம், சளி இருமல்
மீனராசி:- ஜலத்தால் ஆபத்து, சலரோகம்.

மேலும் கிரகநிலை அமைப்பில் அட்டமஸ்தானத்தில் பாபக்கிரகங்கள் இருந்து அவ் அதிபதியும், பாபராசியில் இருந்தால் ஆயுதம், அக்கினி, துஷ்ட மிருகத்தால் ஆபத்து, சர்ப்பம் இவைகளால் பீடை துயரம், உண்டு. இரண்டு பாபக்கிகங்கள் கேந்திரங்களில் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்தால் உயரதிகாரிகளால் கெடுதி நேர்தல், அம்புவில்லுகளால் தாக்கம், விஷம், அக்கினி இவற்றால் நோய் பிணி துயரம் முடிவுகளையும் காட்டும்.

சோதிடம் தரும் ஆயுள் நிலை விளக்கம் பின்வருமாறு.

ஒரு பிள்ளை பிறந்த முதல் நான்கு வருடங்களுக்குள் மாதா செய்த செய்த பாபகர்மத்தாலும், அதன் மேல் நான்கு வருடங்களுக்குள் பிதா செய்துள்ள பாப கருமங்களாலும், அதன் மேல் நான்கு வருடங்களுக்குள் தானே முன் செய்துள்ள பாப கரும காரணங்களாலும், மரணத்தை தழுவுவார். இதன் கருத்தை மேலும் நோக்கினால் 12 வருடம் கடந்து விட்டால் முன்னர் குறிப்பிட்டது போன்று 6, 8 ஆம் நிலைகள் மூலம் ஆயுள் பலம் உத்தமம், மத்திமம், ஆதமம், என்றவாறு நீடிக்கும் என்க.

ஆயுள் பலம் பெறுவதற்கு ஒவ்வொரு வருடமும் பிறந்த வயது நட்சத்திர தினத்தன்று வழிபாடும், ஹோம வழிபாடும் 12 வயது முடிவு வரை செய்வது நன்று.


வாரம் ஒரு தகவல்.

எம கண்ட வேளையைக் கண்டுபிடிக்க சுலபமான வழிகள்.

ஶ்ரீ மகாலட்சுமிக்கு உரிய நாள் வெள்ளிக்கிழமை. அன்று பகல் 3 மணிக்கு ஆரம்பித்து 4.30 மணிவரை எம கண்டம வேளை ஆகும். இதை ஆரம்பமாகக் கொண்டு முறையே அடுத்து வரும் கிழமைகளில் வரிசையாக 1.30 மணி வீதம் குறைத்துக் கொண்டே வந்தால் அன்றைய தினத்து எம கண்ட வேளையை அறியலாம்.

வெள்ளி பகல் 3.00 – 4.30
சனி பகல் 1.30 – 3.00
ஞாயிறு பகல் 12.00 – 1.30
திங்கள் பகல் 10.30 – 12.00
செவ்வாய் பகல் 9.00 – 10.30
புதன் பகல் – 7.30 – 9.00
வியாழன் பகல் 6.00 – 7.30

இவ் எம கண்ட வேளையில் சுபகருமங்கள் செய்யலாகாது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here