பொட்டம்மானை உட்கார வைத்துவிட்டு ரட்ணம் மாஸ்ரர் மூலம் பிரபாகரன் செய்த ஒப்ரேஷன்

நடேசன்- பிரபாகரன்- ரட்ணம் மாஸ்டர்

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 50

பீஷ்மர்

இந்தப் பாகத்தில் இரண்டு முக்கிய விடயங்களை் பற்றிய தகவல்களை எழுதுவதாக கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். நான்காம் ஈழ யுத்தம் ஆரம்பித்த பின்னர் கடற்புலிகள் ஒரு ஆயுதக்கப்பலையும் முல்லைத்தீவிற்கு கொண்டு வரவில்லையா என்பது பற்றியும், நான்காம் ஈழ யுத்தத்தில் பிரபாகரன் மிக இரகசியமாக திட்டமிட்ட நடவடிக்கை பற்றியும் இந்த பாகத்தில் தகவல் தருவதாக குறிப்பிட்டிருந்தோம்.

கே.பியிடம் இருந்து சர்வதேச பொறுப்பாளர் என்ற பொறுப்பு பறிக்கப்பட்ட பின்னர் வன்னிக்கு ஆயுதக்கப்பல்கள் வரவில்லையென இன்று ஒரு பிரசாரம் செய்யப்படுகிறது. சூசை, கஸ்ரோவின் ஆட்கள் அனைத்தையும் குழப்பி விட்டார்கள் என்ற அந்த கருத்தை இலங்கை புலனாய்வுத்துறை திட்டமிட்டு பரப்பியது. அதாவது பிரச்சனை சூசையிடமும் கஸ்ரோவிடமுமே தவிர, வேறு எங்கும் இல்லையென்று நம்ப வைக்க இந்த முயற்சி. சி.ஐ.ஏ உள்ளிட்ட வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் இலங்கை புலனாய்வுத்துறையின் நெட்வேர்க்கிற்குள் கே.பியின் ஆட்கள் போய், அவர்களின் மூலம் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அடையாளம் காணப்பட்டதை மறைக்கவே இந்த ஏற்பாடு.

கே.பியிடம் இருந்து பொறுப்புக்கள் மாற்றப்பட்ட பின்னர் புலிகளிற்கு ஆயுதக்கப்பல்கள் வரவில்லையென்பது பிழையான தகவல். 2003 இல் விடுதலைப்புலிகளிற்கு முல்லைத்தீவுக்கு ஆயுதக்கப்பல் வந்தது. கே.பியின் ஆட்களிடமிருந்து சி.ஐ.ஏ முழு தகவலையும் எடுத்தது 2003 இன் இறுதிக்காலத்தில். அதன்பின்னர்தான் ஆயுதக்கப்பல்கள் முல்லைத்தீவிற்கு வரவில்லை.

ஆனால் ஆச்சரியமான ஒரு தகவலை இப்பொழுது சொல்கிறோம், 2009 இல் ஒரு புலிகளிற்கு ஒரு ஆயுதக்கப்பல் வந்தது!

2008 டிசம்பர் 31ம் திகதி பரந்தன் சந்தி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. பூநகரியிலிருந்து முன்னேறி வந்த 58வது டிவிசன் படையினரால் பிரதான வீதியால் நகர்ந்து பரந்தன் சந்தியை கைப்பற்ற முடியவில்லை. இராணுவத்தினர் இறுதி யுத்தத்தில் எப்படியான நகர்வுமுறையை கையாண்டார்கள் என்பதை இந்த தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை படித்தவர்களிற்கு தெரிந்திருக்கும்.

புதிய வாசகர்களிற்காக மேலோட்டமாக குறிப்பிடுகிறோம். தண்ணீரின் நகர்வுமுறைதான் இராணுவத்தின் நகர்வுமுறை. கிளிநொச்சியை கைப்பற்ற வேண்டுமெனில் ஆனையிறவில் இருந்து பிரதான வீதியால் முன்னேறுவது இராணுவத்தின் பழைய பாணி. ஜெயசிக்குறு களமுனையில் அப்படியான உத்திகளையே கைக்கொண்டார்கள். ஆனையிறவில் இருந்து கிளிநொச்சியின் அனைத்து முனைகளாலும் முயன்று பார்த்து கிடைக்கின்ற வழியால் உள்நுழைவது புதிய பாணி. தண்ணீர் ஓடிச்செல்லும்போது ஒரே முனையில் செல்வதில்லை. சற்று உயரமான பகுதியெனில் வளைந்து நெளிந்து ஓடிச்சென்று கொண்டிருக்கும். தண்ணீரின் முனைப்பகுதி இப்படி ஓடிச்சென்று கொண்டிருந்தாலும் பின்னர், ஆரம்பத்தில் தண்ணீரின் முனைப்பகுதியால் தவிர்க்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் மூழ்கிவிடும்.

பிரதான வீதியால் பரந்தன் சந்தியை அடைய முடியாதென்பதை தெரிந்ததும், காட்டிற்குள் இறங்கி குடமுருட்டி ஆற்றிற்குள்ளால் நகர்ந்து, பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் ஏ9 வீதியில் இராணுவம் ஏறியது. பரந்தன் சந்தியில் புலிகள் நிலைகொண்டிருந்தனர். பூநகரி பக்கமாகவும், ஏ9 வீதியில் கரடிப்போக்கு பக்கமாகவும் இராணுவத்தினர் ஒரு வளைந்த வடிவத்தில் புலிகளை நெருங்கினர். இறுதியில், புலிகள் பரந்தன் சந்தியிலிருந்து பின்வாங்கினார்கள்.

பரந்தன் சந்தி இராணுவத்திடம் வீழ்ந்த பின்னர் முகமாலை புலிகளின் முன்னரணிற்கு தரைவழி தொடர்பு கிடையாது. வடமராட்சி கிழக்கு வழியாக செல்லலாம் என்றாலும் அப்பொழுது கடுமையான மழை பெய்திருந்ததால் சுண்டிக்குளம் தொடுவாய் தண்ணீர் நிரம்பியிருந்தது. சுண்டிக்குளம் தொடுவாயில் படகுகளின் பயணத்தை விமானப்படை தடுத்தால், முகமாலைக்கு சப்ளை இல்லாமல் போகும்.

ஆனால் முகமாலை முன்னரணை யாழ்ப்பாண முனையினால் இராணுவத்தால் உடைக்க முடியாது. பரந்தனில் இருந்து முன்னேறும் இராணுவத்திற்கு ஆனையிறவு வெட்டைவெளியை கடப்பது சிக்கல். இதனால் புலிகள் முகமாலையில் தங்கியிருந்திருக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் புலிகளின் சில தளபதிகளிடம் இருந்தது. ஆனால் முகமாலையில் புலிகள் தங்கியிருந்திருந்தால், பரந்தன் சந்தியிலிருந்து முன்னேறிய இராணுவத்தினர் விசுவமடுவை அடைந்து சுண்டிக்குளம் வரை சென்று ஒரு பெரிய பெட்டி (box) அடித்திருப்பார்கள். அந்த பெட்டிக்குள் மக்களை கொண்டு செல்வது புலிகளிற்கு சாத்தியமேயில்லை. புதுக்குடியிருப்பு பக்கமே மக்கள் தப்பி செல்வார்கள். புலிகள் மட்டும் முகமாலைக்குள் நின்றிருந்தால் யுத்தம் பெப்ரவரி அல்லது மார்ச் தொடக்கத்திற்குள் முடிந்திருக்கும்.

முகமாலைக்குள் ஒரு அணியை விட்டுவிட்டு, இன்னொரு அணியை மக்களுடன் சேர்ந்து புதுக்குடியிருப்பு நோக்கி செல்ல வைக்க முடியாது. ஏனெனில் புலிகளிடம் அவ்வளவு ஆட்பலம் கிடையாது. இப்பொழுது நான் சொல்லப்போகும் விசயம் உங்களிற்கு தலைசுற்றும். ஆனால் உண்மை அதுதான்.

2009 இல் புலிகளின் ஆட்பலம் என்ன தெரியுமா?

முழுமையாக பயிற்சியெடுத்த, தாக்குதலணியில் இருந்தவர்கள் வெறும் 950 பேர்தான். மிகுதி அனைவரும் புதிய போராளிகள். முகமாலை முன்னரணில் நின்ற 475 பேரில் 200 பேர்தான் அனுபவம்மிக்க போராளிகள்.

இதையெல்லாம் கூட்டிக்கழித்து பார்த்து, முகமாலையிலிருந்து பின்வாங்குவதென பிரபாகரன் முடிவெடுத்தார். ஆனால் 31ம் திகதியே பின்வாங்கவில்லை. 03ம் திகதிதான் பின்வாங்கினார்கள். ஏன்?

ஜனவரி 2ம் திகதி சுண்டிக்குள தொடுவாயில் மிக் விமானம் தாக்குதல் நடத்தியதில் சிறிய டாங்கரொன்று மூழ்கியது. பரந்தன் வீழ்ந்த பரபரப்பிற்குள் தமிழ் ஊடகங்கள் இதை கவனிக்கவில்லை. அது மலேசியாவிலிருந்து வந்த டாங்கர். பெரிய டாங்கர்கள் இலக்கு வைக்கப்பட்டதை தொடர்ந்து, கடற்புலிகள் புதியதொரு ஐடியா போட்டனர். ஆயுதங்கள் நிரப்பப்பட்ட டாங்கர்களை நிக்கோபர் தீவுகளிற்கு அண்மையாக கொண்டுபோவதை போல பாவ்லா காட்டிவிட்டு, மலேசியாவிற்கு அண்மையில் வைத்தே சிறிய டாங்கர்களிற்கு மாற்றி முல்லைத்தீவிற்கு கொண்டு செல்வது.

ஆயுதக்கடத்தல் நெட்வேர்க்கில் இருந்த பலர் கே.பியின் ஆட்களிற்கு நெருக்கமானவர்கள். அவர்கள் மூலம் தகவல் கசியலாமென கருதிதான் இந்த ஏற்பாட்டை புலிகள் செய்தனர். அது சக்சஸாக அமைந்தது!

ஆனால், எங்கே ஓட்டையிருந்ததென புலிகள் கண்டுபிடித்தபோது வெள்ளம் தலைக்குமேல் வந்து விட்டது. முல்லைத்தீவை இராணுவம் கைப்பற்றி விட்டது. சுண்டிக்குளத்தை நெருங்கி விட்டனர். பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியின் தெற்கு பக்கம் முழுவதும் இராணுவத்திடம் போய் விட்டது. அங்கிருந்து ஆட்லறி செல்லால் புலிகளிடமிருந்த கடற்கரையை நொருக்கலாம். அதனால் இனி கப்பல்களை கொண்டு வருவதென்றால், இராணுவத்தை இந்த பகுதிகளிலிருந்து விரட்டினால் மாத்திரமே சாத்தியமென்ற நிலை. ஆனால் இராணுவத்தை விரட்டுவதென்றால் ஆயுதங்கள் தேவையே!

சுண்டிக்குளத்தில் மூழ்கிய டாங்கரில் சிறிதளவு ஆட்லரி செல்கள் வந்தன. அது சிறிய டாங்கர், பரீட்சார்த்த முயற்சியென்பதால் சிறியளவு செல்களே புலிகளிற்கு கிடைத்தது. அந்த செல்கள் இறக்கப்பட்ட பின்னர், 2ம் திகதி மதியம் மிக் விமானங்கள் குண்டுவீசி அதை அழித்தன.

இந்தவாரம் சொல்ல வேண்டிய அடுத்த விடயம், பிரபாகரனின் இரகசிய நடவடிக்கை.

சமாதான உடன்படிக்கையின் பின்னர் பிரபாகரன் பொறுப்புக்களை தளபதிகளிடம் பகிர்ந்துவிட்டார் என்பதை கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம்.

புலிகளின் ஸ்பெஷலே இராணுவத்தின் பகுதிக்குள் நுழைந்து அவர்களிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதுதான். கட்டுநாயக்கா விமானப்படை தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு உதாரணம்.

வன்னியில் இராணுவம் குவிக்கப்பட்டு பெரும் படைநடிவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது, இராணுவத்தை திசைதிருப்புவதென்றால் தென்பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும். ஆனால் நான்காம் ஈழ யுத்தம் தொடங்கியபோது, தென்பகுதி புலனாய்வு வலையமைப்பை அரசாங்கம் இறுக்கமாக்கி விட்டது. முன்னர் ஆயிரம் கிலோ வெடிமருந்தை லொறியில் நிரப்பி தாக்குதல் நடத்திய புலிகளால், நூறு கிராம் வெடிமருந்தை கூட வெடிக்க வைக்க முடியவில்லை.

விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறைக்கு இது பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. வன்னிக்குள் ஏற்படும் தோல்விகள் ஒரு பக்கம், தெற்கில் தாக்குதல் நடத்த முடியாத நிலை மறுபக்கம் என புலிகளை கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியது. அந்தகாலப்பகுதியில் பொட்டம்மான்தான் தளபதிகள் கூட்டத்தை நடத்துவார். அவரால் வன்னி தோல்விகள் பற்றி தளபதிகளை கேள்விகேட்க முடியாத சங்கடமான நிலை.

தெற்கில் ஏதாவது தாக்குதல் நடத்தினால்தான் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திக்கலாம். எப்படியாவது தாக்குதலொன்றை நடத்தும்படி பொட்டம்மானிடம் பலமுறை பிரபாகரன் கூறியும், பொட்டம்மானால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதற்கு பின்னர் பிரபாகரன் தனது பாணியில் வேலை செய்தார். அதுதான் ஒப்ரேஷன் எல்லாளன். அனுராதபுரம் விமானப்படை தளத்திற்குள் கரும்புலிகள் நடத்திய தாக்குதல். இந்த தாக்குதல் எப்படி நடந்தது தெரியுமா?

விடுதலைப்புலிகளின் தளபதிகள் சிலரின் பெயரை சொல்லுங்கள் என கேட்டால், பெரும்பாலானவர்கள் பொட்டம்மான், பால்ராஜ், சூசை, சொர்ணம், தீபன் என்றுதான் சொல்வார்கள். விடுதலைப்புலிகளை பற்றி ஓரளவிற்கு விசயம் தெரிந்தவர்கள்தான் ரட்ணம் மாஸ்ரரின் பெயரை சொல்வார்கள். ஆனால் விடுதலைப்புலிகளில் இருந்த பெரும்பாலானவர்களிற்கே ரட்ணம் மாஸ்ரரை தெரியாது. அவர் என்ன செய்கிறார் என்பது பிறகெப்படி தெரியும்?

1991 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த ரட்ணம் மாஸ்ரர், இம்ரான் பாண்டியன் படையணியின் புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். பின்னர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணிக்கு பொறுப்பாக இருந்தவர். ரட்ணத்தின் விசுவாசம், காரியத்தை செய்யும் நேர்த்தியெல்லாம் பிரபாகரனிற்கு பிடித்துப்போனது. பின்னர் இராணுவப்புலனாய்வு அணிக்கு பொறுப்பாக இருந்து, இறுதியாக பிரபாகரனின் பாதுகாப்பு படையணியான ராதா படையணி தளபதியாக இருந்தார்.

கரும்புலிகளில் பல பிரிவுகள் உள்ளன. தரைக்கரும்புலிகள், கடல் கரும்புலிகள், வான்கரும்புலிகள் என்ற பிரிவுகளைவிட, முகம் தெரியாத கரும்புலிகள் பிரிவும் உள்ளது. இது புலனாய்வுத்துறையின் கீழ் செயற்படுவது. கட்டுநாயக்கா, வவுனியா விமானப்படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இவர்கள்தான். இவர்களின் பெயர் விபரத்தை புலிகள் வெளியிடவில்லை. தென்பகுதிக்குள் ஊடுருவி சென்று, வேறு அடையாளங்களில் தாக்குதல் நடத்துபவர்கள்தான் மறைமுக கரும்புலிகள். அவர்களின் விபரத்தை வெளியிட்டால், தாக்குதலின் பின் விசாரணையில் ஈடுபடும் அரச புலனாய்வுத்துறைக்கு வாய்ப்பாகிவிடும், தாக்குதலாளிகளிற்கு உதவியவர்கள் சிக்கி முழு நெட்வேர்க்கும் அகப்பட்டு விடும் என்பதாலும், புலிகள் தாக்குதலை செய்தார்கள் என்பதை வெளிப்படுத்த கூடாது என்பதற்கும் மறைமுக கரும்புலிகளை ஈடுபடுத்துவார்கள். தென்பகுதியில் நடந்த தாக்குதல்கள் மறைமுக கரும்புலிகளாலேயே நடத்தப்பட்டது. ஆனால் அனுராதபுரத்தில் தாக்குதல் நடத்தியவர்களின் விபரத்தை புலிகள் வெளியிட்டனர். ஏன் அனுராத தாக்குதலில் ஈடுபட்டவர்களின் விபரங்களை மட்டும் வெளியிட்டனர்?

அது தரை கரும்புலிகள் நடத்திய தாக்குதல். தரைக்கரும்புலிகள் அனேகமாக புலிகள் நடத்தும் பெரிய இராணுவ நடவடிக்கைகளின் போது தாக்குதலில் ஈடுபடுபவர்கள். அனுராதபுர நடவடிக்கையில் மறைமுக கரும்புலிகள் ஈடுபடுத்தப்படாமல், தரைக்கரும்புலிகள் ஏன் ஈடுபடுத்தப்பட்டார்கள் தெரியுமா?

இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது புலிகளின் உயர்மட்டத்தில் இரண்டுபேருக்கு மாத்திரமே தெரியும். ஒருவர் பிரபாகரன். மற்றவர் இரட்ணம் மாஸ்ரர். புலனாய்வுத்துறையால் தெற்கில் தாக்குதல் ஒன்றையும் செய்ய முடியாமல் இருக்க, பிரபாகரனுடன் நிழல் போலவே இருந்த ரட்ணம் மாஸ்ரர் அனுராதபுர திட்டத்தை கையிலெடுத்தார்.

அவர் ஏற்கனவே இராணுவ புலனாய்வுதுறையில் இருந்தபோது அனுராதபுர விமானப்படை தளம் பற்றி ஓரளவு வேவு தகவல் சேகரித்து வைத்திருந்தார். இப்பொழுது புது அப்டேற்களை சேகரிக்க தொடங்கினார். முழுக்க முழுக்க தனது படையணி போராளிகளை வைத்தே தகவல்களை சேகரித்தார். தகவல்களை சேகரித்த ஒருவர் இப்பொழுதும் சிறைச்சாலையொன்றில் அரசியல்கைதியாக இருக்கிறார்.

தெற்கில் தாக்குதல் நடத்த முடியாமல் இருந்த புலனாய்வுத்துறைக்கு சூடு வைப்பதற்காக மட்டும் அனுராதபுரத்தை இலக்கு வைக்கவில்லை. அதைவிட இன்னொரு காரணமும் இருந்தது. வவுனியாவில் பழைய, சிறிய UAV விமானங்கள்தான் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் பீச்கிராப்ற் போன்ற நவீன உளவுவிமானங்கள் அனுராதபுரத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டன. வான்படையின் பாவனையில் இருந்த பீச் கிராப்ற் 300 இற்கும் அதிக மணித்தியாலம் தொடர்ந்து பறப்பில் ஈடுபடும் வல்லமையுள்ளது. இதனால் கடல்நடவடிக்கைகள் எதையும் புலிகளால் செய்ய முடியாமலிருந்தது.

ஆக, பீச்கிறாப்றை அனுராதபுரத்தில் வைத்தே புலிகள் குறிவைத்தனர். தாக்குதலிற்கு புறப்பட்ட அணிகள், பீச்கிறாப்றை மிஸ் பண்ணவேகூடாதென தெளிவாக சொல்லித்தான் அனுப்பிவைக்கப்பட்டன. மற்ற விமானங்களிடம் இருந்து பீச்கிறாப்ற் எப்படி வித்தியாசப்படும் என்பதும் சொல்லப்பட்டிருந்தது. விமானப்பரிச்சயம் இல்லாதவர்களால் இருளில் விமானங்களை வகைபிரித்தறிவது கடினம். அதனால், “நல்ல புதிதாக, மினுமினுப்பாக இருக்கும் விமானம்“ என புரியும்படியே புலிகள் சொல்லியனுப்பியிருந்தனர்.

22ம் திகதி 3.20 இற்கு அனுராதபுரத்திற்குள் தாக்குதலை தொடங்கிய அணிகள் காலை 5.30 இற்கு பின்னர்தான் பீச்கிறாப்றை கண்டார்கள். அதன்மீது லோவால் ஒரு செல் அடித்துவிட்டு, தாக்குதலை தலைமைதாங்கி சென்ற இளங்கே, கட்டளைமையத்திற்கு “மெல்லிய இருட்டிலும் நல்லா மினுங்கிக் கொண்டிருந்தது பீச்கிறாப்ற்.லோ அடிச்சதில் எரிஞ்சு கொண்டிருக்கிறார்“ என அறிவித்தார்.

அநுராதபுரம் தாக்குல் விளக்கப்படம்

கிளிநொச்சியின் திருவையாறு பகுதியில் புலனாய்வுதுறையின் முகாமொன்றில் தற்காலிக கட்டளை மையம் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே தெற்கு நடவடிக்கைகளிற்கான கொமாண்டிங் ரூமாக அந்த முகாம் இயங்கியிருந்தமையால், அங்கு தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 21.10.2007 திகதி கொமாண்டிங் ரூமில் ரட்ணம் மாஸ்ரர் இருந்தார். வழக்கமாக இப்படியான இடங்களில் பிரபாகரன் முழு நாளையும் செலவழிப்பது வெகு அரிது. ஆனால், அன்று நள்ளிரவில் இருந்து காலை வரை பிரபாகரன் அங்கேயே இருந்தார். அதைவிட, பிரபாகரன் செய்த இன்னொரு காரியத்தைத்தான் குறிப்பிட வேண்டும்.

கொமாண்டிங் ரூமிற்கு வந்த பிரபாகரன், இயக்கத்தின் முக்கிய தளபதிகள் சிலருக்கு அவசரமாக ஒரு மெசேஜ் அனுப்பினார்.

கொண்ரோல் ரூம் இயங்கிய முகாமிற்கு உடனடியாக வாருங்கள் என்பதே அந்த மெசேஜ். பொட்டம்மான், புலனாய்வுத்துறையின் மூத்த நடவடிக்கை தளபதிகள் தொடங்கி அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வன் வரை அங்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முகாமிற்கு வந்த பின்னர்தான் தளபதிகளை உட்கார வைத்து பிரபாகரன் தாக்குதல் திட்டம் பற்றி விளங்கப்படுத்தினார். அப்பொழுது நேரம், இரவு 11.45 மணி. அதாவது அனுராதபுர தாக்குதலிற்கு வேறுவேறு வழிகளில் சென்ற கரும்புலிகள் ஒன்றுசேர்ந்து, தாக்குதலிற்கு புறப்பட்ட சமயத்தில். அதுவரை பொட்டம்மான் உள்ளிட்ட தளபதிகளிற்கு அனுராதபுர தாக்குதல் திட்டமே தெரியாது!

அனைத்து தளபதிகளும் இரவு முழுவதும் கட்டளை மையத்தில் உட்கார்ந்திருந்தனர். ரட்ணம் மாஸ்ரர் கட்டளைகள் வழங்கினார்.

ஒப்ரேஷன் எல்லாளன் மூலம் பிரபாகரன் இயக்கத்திற்குள்ளும் ஒரு செய்தியை சொன்னார். அது- உங்களால் முடியாவிட்டால் நான் செய்வேன் என்பதே!

(தொடரும்)

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here