திசர பெரேரா ருத்ர தாண்டவம்; முதலாவது ஒருநாள் சதம்; இலங்கை வழக்கம்போல தோல்வி!

ஷகிட் அப்ரிடி பாணி ஆட்டமொன்றை ஆடி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை இரக்கமில்லாமல் அடித்து நொறுக்கி தனது முதலாவது ஒருநாள் சதத்தை திசர பெரேரா அடித்து, ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போதும், இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றியடைந்தது.

321 என்ற பெரிய இலக்கை விரட்டியபோது, 27வது ஓவரிலேயே 7வது விக்கெட்டை இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தபோதே இலங்கையின் தோல்வி உறுதியாகி விட்டது. ஏதாவது ஆச்சரியங்கள் நடந்தால் மட்டுமே இலங்கை வெற்றிபெறலாம் என்ற நிலையிருந்தது.

அப்போதுதான் பூம் பூம் திசர பெரேராவிற்கு ஏதோ ஆனது.

அந்த நிலையில் 320 என்ற இலக்கு சாத்தியமேயில்லையென்பதால், வழக்கமான தனது ஆட்டத்தை ஆடலாமென நினைத்தோ என்னவோ மட்டையை சுழற்ற தொடங்கினார். 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 74 பந்துகளில் 140 ஓட்டங்களை குவித்தார்.

இறுதியில் 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 298 ஓட்டங்களை பெற்றது. இலங்கைக்கு மற்றொரு தோல்வி. ஆனால், ஆட்டத்தை பரபரப்பாக்கி 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.

முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங்களை குவித்தது. லசித் மலிங்க 2, நுவன் பிரதீப் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இலங்கையின் 7 பந்துவீச்சாளர்கள் வீசனர். ஐவருக்கு விக்கெட் இல்லை. மிகுதி நான்கும் ரன் அவுட்கள்.

ரோஸ் ரெயிலர் 90 ஓட்டங்கள். ஒருநாள் போட்டிகளில் அண்மைய அவரது அசாத்திய போர்ம் தொடர்கிறது. கடந்த 10 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 8வது அரைச்சதம் இது. கொலின் 87 ஓட்டங்கள். பின்வரிசையில் கடந்த போட்டியை போல ஜேம்ஸ் நீசம் வானவேடிக்கை காட்டினார். 37 பந்துகளில் 64 ஓட்டங்கள்.

இலங்கையில் சீக்குகே பிரசன்னா வாய்ப்பு பெற்றாலும் பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் சொதப்பினார்.

பின்னர் ஆட தொடங்கிய இலங்கை வழங்கம் போல விக்கெட்டை விரைவாக இழந்தது. டிக்வெல, குஸல் பெரேரா, சந்திமல், தாஸ் குணரட்ன, சீக்குகெ பிரசன்ன, சந்தகன், நுவன் பிரதீப் ஒற்றை எண்ணில் ஓட்டங்களை பெற்றனர். திசர பெரேராவின் சதம் தவிர, தனுஷ்க குணதில 71 ஓட்டங்களை பெற்றார். 9 பவுண்டரிகளுடன் 73 பந்துகளில் நல்லதொரு இன்னிங்ஸ் ஆடினார். இந்த இரண்டு ஓட்டங்களிற்கு அடுத்ததாக அதிக பட்ச ஓட்டம் மெண்டிஸ் பெற்ற 20, அடுத்தது உதிரி 19 ஓட்டங்களே!

57 பந்துகளில் பெரேரா சதமடித்தார். நியூசிலாந்திற்கு எதிராக பெறப்பட்ட வேகமான சதம் இதுவாகும். ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் பெரேரா ஐந்துவது இடத்திற்கு முன்னேறினார். ரோகிச் சர்மா, டி வில்லியர்ஸ் தலா 16 சிக்சர்களை ஒரு இன்னிங்சில் அடித்துள்ளனர். திசர இன்று 13 சிக்சர்கள் விளாசினார். இலங்கை சார்பில் 1996இல் சனத் ருத்ரதாண்டவமாடி 189 ஓட்டங்களை குவித்தபோர் 11 சிக்சர்களை விளாசியிருந்தார். அந்த சாதனையை பெரேரா இன்று முறியடித்தார்.

ஆட்டநாயகனாக திசர பெரேரா தெரிவானார். அவரது இன்னிங்சை தவிர்த்தால், இலங்கையின் சோகம் தொடர்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here