புலிகளின் முதலாவது வணிகக் கப்பல் சேவையை ஆரம்பித்தவர்!

1985ஆம் ஆண்டு தேசியத் தலைவரின் கனவை நனவாக்கிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதலாவது வணிகக் கப்பலான ‘சோழன்’ கப்பல் வணிக சேவை வெற்றிகரமாக ஆரம்பிக்க காரணமான திரு.பிறைசூடி (கப்டன் டேவிட்) அவர்கள் நேற்று (02) காலமானார்.

தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் நேற்று காலமானார் என்ற துயரச் செய்தியை அறியத் தருகின்றோம். 1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதி. தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக வர்த்தக கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்று சிந்தித்தபோது, திரு.பிறைசூடி அவர்கள் பற்றிய தகவல் கிட்டுவின் சகோதரர் மூலம் தலைவருக்கு கிடைத்தது. சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தமிழ் அரச ஊழியர்கள் கட்டாயம் சிங்கள மொழியைக் கற்க வேண்டும், சிங்கள தேர்ச்சிப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கட்டாயப்படுத்திய பொது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசபணியை தாமாகவே துறந்து வந்தவர்கள் வரிசையில் மிக முக்கியமானவர் ஆவார்.

அது மாட்டுமின்றி தமிழினப் பற்றாளராகவும் விளங்கி வந்துள்ளார். இவற்றைப் பற்றி கேள்விப்பட்ட தேசியத் தலைவர் அவர்கள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக அப்போது செயற்பட்டுக் கொண்டிருந்த பண்டிதர் மற்றும் ரகுவப்பா ஆகியோரிடம் பிறைசூடி அவர்களைச் சந்தித்து உரையாடி அவரின் சம்மதத்தினை பெற்று வருமாறு அனுப்பி வைத்தார். போராளிகள் இருவரும் கிட்டு அவர்களின் அண்ணாவோடு திக்கத்தில் அமைந்திருந்த பிறைசூடி அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்து தாங்கள் வந்த நோக்கத்தையும், தலைவர் அவர்கள் தங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும் தெரிவித்தபோது எந்தவித மறுப்பும் தெரிவிக்காது முழு மனதோடு சம்மதித்தது மட்டுமின்றி, அப்பொழுதே 1 இலட்சம் ரூபாவை அவர்களிடம் கையளித்து அம்முயற்சிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இரகுவப்பா சென்னைக்கு வந்து தங்களை சந்திக்குமாறு கூறிவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டார். சில தினங்களிலேயே சென்னைக்கு வந்து சேர்ந்த பிறைசூடி அவர்கள் முதலில் ரகுவப்பாவை சந்தித்த பின்னர் தேசியத்தலைவரையும் சந்தித்துள்ளார். தலைவர் அவர்கள் திரு.பிறைசூடியிடம் விபரமாக தங்கள் எண்ணக் கருத்தினை எடுத்து விளக்கியுள்ளார். முழு மனதோடு அப்பணிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக தெரிவித்ததோடு அதற்கான ஆரம்ப வேலைகளிலும் உடனடியாக ஈடுபட்டார். அப்பணியின் பொருட்டு திரு.பிறைசூடி அவர்களும், ரகுவப்பாவும் பம்பாய் சென்று அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டார்கள்.

திரு.பிறைசூடியிடம் அவரது குடும்பத்தினரை தமிழ்நாட்டுக்கு வரவழைக்குமாறு தேசியத்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டபோது, அவர்கள் நாட்டில் சிக்கல்களின்றி வாழ்கின்றார்கள். சிறிது காலம் அவர்கள் அங்கேயே இருக்கட்டும்,பின்பு பார்க்கலாம் என பதிலளித்துள்ளார். தனது குடும்ப நலனைவிட தமிழீழ நாட்டு நலனே முக்கியமானது என கருதி வாழ்ந்தவர் அவர்.

சில காலங்களின் பின் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு கப்பல் கம்பனிக்கான பதிவு வேலைகளை திறம்பட செய்து முடித்தார். 1985ஆம் ஆண்டளவில் தேசியத் தலைவரின் கனவு நனவாகியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது வணிகக் கப்பலான ‘சோழன்’ கொள்வனவு செய்யப்பட்டது.

‘சோழன்’ கப்பல் வணிக சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்து தொடர்ந்து இயக்கத்திற்காக நிதியை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது. எந்தக் காலத்திலும் சோழன் கப்பலில் ஆயுதங்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ ஏற்றப்பட்டது கிடையாது. தனது வாழ்நாளில் பெரும் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் செலவிட்டவர் ‘கப்டன் டேவிட்’ என்று அழைக்கப்பட்ட திரு.பிறைசூடி அவர்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here