‘ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சியா?: சுமந்திரன், ரணில் – யார் கூறுவது சரி?

வை எல் எஸ் ஹமீட்

அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய” என்பது ‘ஒற்றையாட்சி’ அல்ல; என்று நூறு தடவைகள் விளங்கப்படுத்திவிட்டதாகவும் ஆனால் தமிழ் ஊடகங்கள் அது ‘ ஒற்றையாட்சி’ என்றே இன்னும் எழுதுவதாகவும் குறைபட்டிருக்கின்றார்.

பிரதமர் தமிழில் ‘ஒற்றையாட்சி’ என்றா மகாநாயக்க தேரர்களிடம் தெரிவித்திருப்பார்? சிங்களத்தில் ‘ஏக்கிய ராஜ்ய’ என்றுதான் கூறியிருப்பார். ஏக்கிய ராஜ்ய என்பது ஒற்றையாட்சியில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

தற்போதைய யாப்பு ஒற்றையாட்சியாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ய என்றுதான் எழுதிவைத்திருக்கிறார்கள். அப்படியானால்  ‘ஏக்கிய ராஜ்ய’ என்பது ‘ஒற்றையாட்சி’ தானே! அந்த அர்த்தத்தில்தானே பிரதமர் மகாநாயக்கர்களிடம் கூறியிருப்பார். எனவே, தமிழ் ஊடகங்கள் தெரிவிப்பது சரிதானே! அவ்வாறாயின் சுமந்திரன் ஏன் மாற்றிக் கூறுகின்றார்?

ஆம், சுமந்திரன் சந்தேகமில்லாமல் மாற்றித்தான் கூறுகின்றார். ஆனாலும் சுமந்திரன் சரியாகவே கூறுகின்றார். தற்போதைய புதிய யாப்பு வரைவதில் முக்கிய பங்காற்றுகின்ற கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்னவும் பிரதமர் கூறுவதுபோல்தான் கூறுகின்றார். எனவே, இதில் உள்ள குழப்பம் என்ன? இதில் நமது எதிர்காலமும் தங்கியிருக்கின்றது. எனவே, இது என்னவென்று நாமும் தெளிவாக அறியவேண்டும்.

சட்டத்தில் ஒரு சொல்லை வியாக்கியானப்படுத்தல்

சிலநேரம் ஒரு சொல்லுக்குரிய வியாக்கியானத்தை அந்த சட்டத்திலேயே குறிப்பிட்டிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிடப்பட்டால் அதுதான் அதன் பொருள், அகராதியில் எவ்வாறு இருந்தபோதும்.

மேலே உள்ள குழப்பநிலைக்கு பொருத்தமான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். சிங்கள மொழியில் ‘கார்’என்பதற்கு ‘X’ என்றும் ‘பஸ்’ என்பதற்கு ‘Y’ என்றும் சாதாரணமாக அழைக்கப்படும் எனவும் வைத்துக்கொள்வோம்.

சட்டத்தில் குறிப்பிட்ட ஒருவிடயத்தைச் செய்வதற்கு ‘கார்’ தான் பாவிக்கப்பட வேண்டும் என்றுதான் இதுவரை இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் ‘கார்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘பஸ்’தான் பாவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்.

அரசாங்கமும் அதற்கு உடன்பட்டுவிட்டது. ஆனால் சிங்கள மக்கள் ‘பஸ்’ பாவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்பொழுது அரசாங்கம் ஒரு உத்தியைப் பாவிக்கிறது. அதாவது சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் ‘கார்’ என்பதற்கு சிங்களத்தில் பாவிக்கப்படுகின்ற ‘X’ என்ற சொல்லையே பாவிக்கின்றது. ஆனால் ‘X’ என்பது ‘சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம்’ என்று அதற்குரிய வியாக்கியானத்தையும் அருகே எழுதிவைக்கின்றது.

தற்போதும் சட்டத்தில் ‘காரை’க் குறிக்கின்ற ‘X’ என்ற சொல்லே இருப்பதால் சிங்கள மக்கள் சந்தேகப்பட மாட்டார்கள். நம்பவைக்கலாம் என அரசு எண்ணுகிறது.

சிங்களத்தில் ‘காரி’ ற்கு ‘X’ என்ற பாவிக்கபடலாம். ஆனால் ஆங்கிலத்தில் அது ‘car’ தானே. தற்போதைய சட்டத்திலும் car என்ற சொல்தான் இருக்கின்றது. ஆனால் ஆங்கிலத்தில் car என்று எழுதாமல் அங்கும் ‘X’ என்ற சிங்களச் சொல்லையே எழுதி அருகில் ‘X’ என்பது சுமார் 60 பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம் என்ற வியாக்கியானத்தையும் எழுதிவைக்கிறார்கள்.

Car என்பதே ஒரு ஆங்கிலச்சொல். ஆங்கிலமொழியில் எழுதும்போது car என்று எழுதாமல் காரைக் குறிக்கின்ற சிங்கள சொல்லான ‘X’ ஐ எழுதி அது 60பேர் செல்லக்கூடிய பெரிய வாகனம் ஆங்கில மொழியிலும் எழுதிவிட்டு சிங்கள மக்களிடம் சென்று இது கார்தான் என்கிறார்கள்.

சுமந்திரன் கேட்கின்றார்- ‘பிரதமர் கார் என்றா சொன்னார்? ‘X’ என்றுதான் சிங்களத்தில் சொல்லியிருப்பார். ‘X’ என்பது கார் இல்லை என்று நூறு தடவைகள் சொல்லிவிட்டேன். தமிழ் ஊடகங்கள் இன்னும் கார் என்றே எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களத்தில் ‘X’ என்பது கார் அல்லது அது பஸ்’ என்கின்றார் சுமந்திரன்.

தமிழ் ஊடகங்களோ, சிங்களத்தில் ‘X’ என்பது கார்தான். அப்படித்தான் தற்போதைய சட்டத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதே அர்த்தத்தில்தான் பிரதமரும் கூறுகின்றார். எனவே, சுமந்திரனின் கதையை எவ்வாறு நம்புவது? என்ற நிலையில் இருக்கின்றன.

இது எதனைக் காட்டுகின்றதென்றால், தமிழ் ஊடகங்களும் அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கையை வாசிக்கவில்லை. அவர்களும் வெளியில் பிரதமர் போன்றவர்கள் பேசுவதையே கேட்டு எழுதுகின்றார்கள். அதேநேரம் சிங்கள மக்களும் வாசிக்கமாட்டார்கள். வாசித்தாலும் காரைக் குறிக்கின்ற ‘X’ என்ற சொல்லே குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்று ஆட்சித்தரப்பு நம்புகின்றது.

மறுபுறம் ஆங்கிலத்தில் car என்ற சொல்லைப் பாவித்தால் அதற்கு அருகில் 60 பேர் செல்லக்கூடிய வாகனம் என்று வியாக்கியானம் எழுதினால் சர்வதேச சமூகம் சிரிக்கும். எனவே, சர்வதேச சமூகத்திற்குத் தெரியாத சிங்கள சொல்லான ‘X’ ஐ ஆங்கிலத்தில் எழுதுகின்றார்கள்.

அதேநேரம் நம்மவர்களில் ஒருவர் பிரதமர் கூறுவதுபோல் இது கார்தான் என்கிறார். இன்னொருவர் ‘காரை’ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கின்றார். ஆனால் எழுதி இருப்பது காரா? பஸ்ஸா? என்று தெரியாமல் அவரும் கையொப்பம் வைத்துவிட்டார். இதுதான் நிலைமை.

இப்பொழுது நேரடி விடயத்திற்கு வருவோம்.
தற்போதைய அரசியலமைப்பில்,

தமிழில், ‘இலங்கைக் குடியரசு ஒற்றையாட்சியுடைய அரசாகும்’ என்றும், சிங்களத்தில் ‘ஶ்ரீலங்கா ஜனரஜய ஏக்கிய ரஜயகி’ என்றும், ஆங்கிலத்தில் ‘The Republic of Sr Lanka is a Unitary State”’என்றும் எழுதப்பட்டிருக்கின்றது.

இடைக்கால அறிக்கையில் பின்வருமாறு பிரேரிக்கப்பட்டிருக்கின்றது.
‘Sri Lanka…..Republic which is an aekiya rajyaya/ Orumitha nadu, consisting of institutions of the Centre and of the Provinces….’

இதன் பொருள் ‘இலங்கைக் குடியரசு என்பது மத்தியினதும் மாகாணத்தினதும் நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு ஏக்கிய ராஜயாய/ ஒருமித்த நாடாகும்.

இங்கு ‘நிறுவனம்’ என்பது சாதாரண நிறுவனமல்ல. அரசதுறைகளாகும். ஒற்றையாட்சி என்பதன் பொருள் ஒரு அரசாங்கம் என்பதாகும். அதாவது மத்தியில் இருப்பது மாத்திரம்தான் அரசாங்கம். எனவே, ஒற்றையாட்சி என்பது மத்திக்கு உரிய நிறுவனங்களை ( சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித்துறை) மாத்திரம்தான் உள்ளடக்கும். மாகாணத்தில் இருப்பவை ‘உப’ அந்தஸ்த்தில் இருப்பவை. அவை மத்திய நிறுவனங்களுடன் இணையாக கொண்டுவரமுடியாது.

இங்கு இலங்கைக்குடியரசு மத்திய, மாகாண நிறுவனங்களை உள்ளடக்கியது என்று கூறுவதன்மூலம் மத்திய அரசும் மாகாண அரசும் சமாந்தர நிலைக்கு கொண்டுவரப்படுகின்றது. இதுதான் ‘சமஷ்டி’யின் வெளிப்படையான அடையாளமாகும். ஆனால் சமஷ்டி என்ற சொல்லை வெளிப்படையாகப் பாவிக்காமல் ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற ஒற்றையாட்சியைக் குறிக்கும் சொல்லைப் பாவித்து அதற்கு சமஷ்டிக்குரிய மத்தியும் மாகாணமும் ஒரே அந்தஸ்து என்ற தன்மை எவ்வளவு நாசூக்காக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

சமஷ்டிக்குரிய சட்டவிளக்கம் தெரியாவிட்டாலும் ஆங்கில பிரதியில் ஏன் ஆங்கிலச் சொல்லான ‘Unitary State’ என்று குறிப்பிடாமல் சிங்களச் சொல்லான ஏக்கிய ராஜ்ய குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்று சாதாரண சிங்கள, முஸ்லிம் மக்கள் சிந்திக்கமாட்டார்களா?

அதேநேரம் தமிழர்களைத் திருப்திப்படுத்த ‘ஒருமித்த நாடு’ என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒன்று என்றால் ‘ஒருமித்தல்’என்ற ஒரு விடயம் எழாது. ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்கும்போதுதான் அவைகள் ‘ஒருமித்த’ என்றொரு விடயத்தைக் குறிப்பிடலாம்.

இதன்பொருள், ‘ஆண்ட சமூகம் ஆள நினைப்பது தவறா?’ என்ற அவர்களின் கோசத்தின் பின்னால் உள்ள ஒரு காலத்தில் ஈழம் தனி ராஜ்யமாக இருந்தது. எனவே, அவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்ட நாடுகளாக இருந்தவை இன்று ஒன்றுபட்டு ஒருமித்த நாடாக இருக்கின்றது’ என்ற அர்த்தத்தில் அந்தசொல் பாவிக்கப்பட்டிருக்கின்றது.

அவர்கள் கோருகின்ற சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தனிநாடு பிரகடனப்படுத்தப்படுமானால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதை ‘இந்த ஒருமித்த நாடு’ என்பதை இலங்கை அரசு யாப்பிலேயே கொண்டுவர இணங்கியது ஒரு முக்கிய அம்சமாக மாறும்.

அதேநேரம் முஸ்லிம் தலைவர்களும் இந்த இடைக்கால அறிக்கைக்கு கையொப்பம் வைத்ததன் மூலம் தமிழர்களின் இந்த நிலைப்பாட்டை அங்கீகரித்தவர்களாக மாறியிருக்கின்றார்கள். இந்நிலையில் சர்வதேச உதவியுடன் தனிநாடு அமையுமானால் நாங்கள் ஒரு தனித்துவ சமூகமாக வேறாக உரிமை கோருவது சர்வதேச கவனத்தை ஈர்க்காது.

எது எவ்வாறு இருந்தபோதிலும் புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வருமோ, இல்லையோ, ஆகக்குறைந்தது ஒரு முழுமையான சமஷ்டி அலகை இடைக்கால அறிக்கையில் அரசின் சம்மதத்துடன் பிரேரிக்க வைத்தது இந்த அரசில் த.தே.கூ இன் சாதனைதான். ஆனால் அந்த இடைக்கால அறிக்கையில் முஸ்லிம்களைப் பாதுகாக்க எதுவுமில்லை; இழப்பதற்கு நிறையவே இருக்கின்றது? என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சமுகத்தை நினைத்தால்தான் கவலை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here