காரணமே தெரியாமல் சுமந்திரனுக்கு எதிராக போராடிய முன்னணி உறுப்பினர்கள்!

பருத்தித்துறையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய மதுபானச்சாலை ஒன்றுள்ளது. கோயில், பாடசாலைக்கு அருகில் உள்ளது, அதை அகற்ற வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கைகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றன. ஆனால், யப்பான் லைசன்ஸ் உள்ள அந்த மதுபானச்சாலையை இதுவரை அகற்ற முடியவில்லை.

இந்த விவகாரம் இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையிலும் இருக்கிறது.

இப்பொழுது அதுவல்ல விடயம். இது தொடர்பாக நேற்று ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. அதுதான் விடயம்.

இந்த மதுபானச்சாலையை அகற்றும்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் என சொற்ப அளவானவர்கள் நேற்று ஒரு ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது, ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் சுரேஷ்- மதுபானச்சாலையை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தடையாக இருக்கிறார், அதனை கண்டிக்கிறோம் என்றார்.

அதாவது, மதுபானச்சாலையை அகற்ற வேண்டும், அதை அகற்ற தடையாக இருக்கும் சுமந்திரனை கண்டிக்கிறோம் என்ற இரண்டு காரணங்களிற்காக அந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக காட்டப்பட்டது.

அந்த சம்பவம் நடந்ததும், அந்த செய்தியை தமிழ்பக்கமும் பிரசுரித்திருந்தது. ஆனால், முன்னணி சொல்வதை போல, சுமந்திரன் மதுபானச்சாலைக்கு ஆதரவாக செயற்படவில்லையென்ற அடிக்குறிப்பையும் பிரசுரித்திருந்தோம்.

அந்த சம்பவம் ஒரு செய்தியாக நடந்தது. ஒரு ஊடகமாக அதை பிரசுரித்திருந்தோம். அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் இப்பொழுது குறிப்பிடுகிறோம்.

அந்த செய்தி நேற்றையதினம் கைக்கு கிடைத்ததுமே, முன்னணி தவறான காரணமொன்றை முன்வைத்திருக்கிறது என்பது தெரிந்தது. ஏனெனில், இறுதியாக நடந்த பருத்தித்துறை பிரதேசசெயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும், மதுச்சாலையை அகற்ற வேண்டுமென சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார். முதலில் வந்த செய்தியை பிரசுரித்து விட்டு, மாலையில் பருத்தித்துறை நகரசபை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசினோம்.

அதில் ஒரு உறுப்பினர் நீண்டகால பரிச்சயமுடையவர். ஆர்ப்ப்பாட்டத்தை பற்றி கேட்டோம். விலாவாரியாக சொன்னார். சரி, மதுச்சாலையை அகற்ற சுமந்திரன் எப்படி தடையாக இருந்தார் என கேட்டோம். நீண்டகால பரிச்சயத்தின் அடிப்படையில் சொன்னார்- உண்மையில் தனக்கு அதைப்பற்றி தெரியாது என. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் மதுச்சாலைக்கு எதிராக சுமந்திரனும் பேசியிருந்தாரே என கேட்க, அப்படித்தான் பத்திரிகைகளில் படித்த நினைவுள்ளது, தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

சுமந்திரனை கண்டிப்பது கூட தமது நோக்கமாக இருக்கவில்லை, சுரேஷ் தான் (போராட்டத்தில் ஊடகங்களிடம் பேசியவர்) திடீரென அப்படி சொன்னார். தமக்கு அதைப்பற்றி தெரியாது என்றார்.

இன்னொரு உறுப்பினரை தொடர்பு கொண்டு, தமிழ்பக்கத்தில் இருந்து பேசுகிறோம் என்றோம். தமது போராட்டத்தை பற்றி செய்தி வெளியிட்டுள்ளீர்கள் என நன்றி சொன்னார். சில விசயங்களை பேசிய பின்னர், கொஞ்சம் நெருக்கமாக பேச ஆரம்பித்த பின்னர், முதலாவது உறுப்பினரிடம் கேட்ட கேள்வியை அவரிடமும் கேட்டோம். “சுமந்திரன் மதுச்சாலைக்கு ஆதரவாக இருக்கிறார் என எனக்கு தெரியாது. போராட்டத்திற்கு போன பின்னரே அறிந்து கொண்டேன்“ என கள்ளம்கபடமில்லாமல் சொன்னார்.

முன்னணியின் நகரசபை மூத்த உறுப்பினருடன் பேசினோம். மதுச்சாலை போராட்டத்தில் சுமந்திரனுக்கு எதிராக பேசப்பட்டவற்றை அவர் கவனிக்கவேயில்லையென்றார்.

சரியென விசயத்தை இத்துடன் முடித்து விட்டோம்.

போராடத்தான் வேண்டும். அதற்கு சரியான காரணங்களை கண்டு போராட வேண்டாமா?

Loading...

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here