ஜெயராஜிற்கு இரட்டை அதிர்ச்சி கொடுத்த பொட்டம்மானின் கையெழுத்து… பொட்டமான் கம்பன் குழுவுடன் வளர்ந்த ‘பொடியனா’?

அகில இலங்கை கம்பன் கழகம் சில தினங்களிற்கு முன்னர் கொழும்பில் சொல்லாடற்களம் ஒன்றை நடத்தியிருந்தது. அடுத்ததாக தமிழர்களிற்கு தலைமைதாங்க கூடிய கட்சி எதுவென்று, அரசியல் கட்சிகளை அழைத்து மேடையில் பேச வைப்பதே நிகழ்ச்சி.

கம்பன் கழகத்தில் இருப்பவர்களின் ஒரே ஆயுதம் வாய்.

மேடைகளில் பிரசங்கம் செய்துகொண்டு மட்டுமிருப்பார்கள். அதனால், தமிழர்களின் அரசியல் உரிமை பயணத்தை பற்றி மைக் போட்டு, சொல்லாடற்களம் நிகழ்த்தி, அதில் வெற்றிபெறுபவர்களே தமிழர்களை தலைமைதாங்க சரியான ஆட்கள் என கம்பன் கழகம் தீர்மானிக்க முயன்றிருக்கலாம். ஆனால், ஈழத்தமிழர் வரலாறு ஒருபோதும் கம்பன் கழகம் எதிர்பார்த்த யதார்த்தத்துடன் இயங்கியதல்ல.

மேடைகளில் மைக் ரெஸ்றிங் வன் ரூ த்ரீ சொல்லியவர்களும், பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக ஆய்வுகள் எழுதியவர்களும் ஈழ அரசியலில் எந்த தாக்கத்தையும் செலுத்தியதில்லை. மாறாக, இந்த இரண்டையும் செய்ய தெரியாதவர்கள்தான் ஈழ வரலாற்றையும், அரசியலையும் உருவாக்கினார்கள்.

அதைப்பற்றி கதைத்தாலும்- சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது, இதயத்தால் பேசாமல் மூளையாலும், ஆயுதத்தாலும் பேசினார்கள் என புதுபுது கதைகளுடன் புறப்பட்டு வந்து விடுவார்கள்.

ஆனால், இதில் இன்னொரு விசயமும் உள்ளது. விடுதலை இயக்கங்கள் மீது இந்த வகையான விமர்சனங்களை வைப்பவர்கள் எல்லோருமே, விடுதலை இயக்கங்களுடன் செயற்பாட்டு ரீதியில் இணைந்திருக்கவில்லை. அவர்கள் உருவாக்கிய கருத்துலகத்திலும் இடம்பிடிக்க முடியவில்லை. விமர்சனங்களிற்கு அப்பால் இளைஞர்கள் உருவாக்கிய அந்த அரசியல் முறைமையே, தமிழர் வரலாற்றை இயங்க வைத்தது. அதற்கு முன்னரும் பின்னரும் தமிழ் அரசியலை அவ்வளவு வீச்சாக அவர்களால் இயங்க வைக்க முடியவில்லை.

தமது பலவீனங்களையும், செயற்படாத தன்மையையும் மறைத்துக் கொள்ள- இளைஞர்களின் போராட்ட வழிமுறையை, அதன் உயிர்ப்பலிகளை காரணம் காட்டி நாசூக்காக விமர்சிப்பார்கள். அதாவது, ஈழத்தமிழர் வரலாற்றில் உயிர்தப்பியவர்கள் எல்லோரும் புத்திசாலிகள், உயிரிழந்தவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பதை போன்ற கற்பிதத்தையும் உருவாக்கி வருகிறார்கள்.

சரி, நாம் இப்பொழுது சொல்ல வந்த பிரதான விசயத்தை விட்டு அதிக தூரம் வெளியில் வந்து விட்டோம். விசயத்திற்கு வருகிறோம்.

அன்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய கம்பன்கழகத்தின் இ.ஜெயராஜ்- “பொட்டு (பொட்டம்மான்) எம்முடன் வளர்ந்த பொடியன்“ என குறிப்பிட்டிருந்தார். அது உண்மையா?

சில பழைய வரலாற்று சுவாரஸ்யங்களை குறிப்படுவதற்காக, ஜெயராஜ்- பொட்டம்மான் பற்றிய சில தகவல்களை தமிழ்பக்க வாசகர்களிற்காக குறிப்பிடுகிறோம்.

பொட்டம்மானின் அண்ணன் சிவகுமாரனும் கம்பன் கழகத்தில் இருந்தவர். ஆரம்பகால உறுப்பினர். கம்பன் கழகம் முதன்முதலில் இயங்க தொடங்கியதும், நாயன்மார்கட்டிலுள்ள பொட்டம்மானின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில்தான். சிவகுமாரனுடன் இருந்த உறவால் ஜெயராஜிற்கு பொட்டம்மானை சிறுவயதிலிருந்தே தெரியும் என்பது உண்மைதான்.

பின்னர் அந்த வீட்டிலிருந்து கம்பன் கழக அலுவலகம் நல்லூரடிக்கு மாறிவிட்டது.

குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் கைதான போது, விடுதலைப்புலிகளின் அப்போதைய இரகசிய மறைவிட வீடுகள் அனைத்தை பற்றிய தகவல்களையும் இரகசிய பொலிசார் கறந்து விட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர்கள், குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் ஒன்றாகத்தான் அப்போது செயற்பட்டார்கள். அதனால் யாழ்ப்பாணத்திலிருந்த புலிகளின் அனைத்து மறைவிடங்களும் குட்டிமணி, தங்கத்துரைக்கு தெரிந்திருந்தது.

அப்போது புலிகளிற்கு மறைவிடமாக பாவிக்கப்பட்டதே பொட்டமானின் வீடு. அதாவது, கம்பன் கழகம் முன்னர் இயங்கிய வீடு. அங்கு சில போராளிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் படிப்பவர்கள், வேறு தேவைகளிற்காக தங்கியிருப்பவர்களை போலத்தான் வீட்டுக்காரர்களிற்கே சொல்லப்பட்டிருக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்- அப்போது அமைப்பில் முழுமையாக இணைந்திராத பொட்டம்மானிற்கு, தமது வீட்டில் தங்கியிருப்பவர்கள் போராளிகள் என்பது தெரியாது!

பொட்டம்மான் மற்றும் நண்பர்களிடம் கம்பன் கழக போஸ்ரர்களை ஒட்டும்படி ஜெயராஜ் கொடுப்பது வழக்கம். பொட்டம்மான் புலிகளுடன் இரகசியமாக இணைந்து செயற்பட தொடங்கியதை, அவரது வீட்டினரோ, ஜெயராஜ் போன்ற தெரிந்தவர்களோ அறிந்திருக்கவில்லை.

இப்படித்தான் ஒருமுறை பொட்டம்மானிடம் கம்பன் கழக போஸ்டர்கள் கொஞ்சத்தை கொடுத்த ஜெயராஜ், அவற்றை ஒட்டிவிடும்படி கேட்டுள்ளார். ஒன்றும் சொல்லாமல் பொட்டம்மான் வாங்கிவிட்டார்.

தமது இரகசிய மறைவிடமொன்றிற்கு அவற்றை கொண்டு வந்த பொட்டம்மான், மார்க்கர் மூலம் அந்த போஸ்டர்களின் மேல், இப்போது நாடும், தமிழ் அரசியலும் இருக்கும் நிலைமையில் கம்பன் கழகம் தேவையா என்றும், ஆயுத போராட்டத்தை ஆதரித்தும் எழுதி, அவற்றை ஒட்டிவிட்டார். அதாவது, கம்பன் கழகத்தின் போஸ்டர்களின் மேல், வேறு யாரோ எழுதியதை போல அது தோன்றும்.

ஜெயராஜ் பல வருடங்களாக பொட்டம்மான் குடும்பத்துடன் நெருங்கி பழகியவர். பொட்டம்மானின் கையெழுத்தும் அத்துப்படி.

போஸ்டர்களை பார்த்த ஜெயராஜிற்கு இரட்டை அதிர்ச்சி. முதலாவது- கம்பன் கழக போஸ்டர்களின் மேல் இப்படி எழுதி விட்டார்களே என்பது. அடுத்தது- அந்த கையெழுத்துக்கள் பொட்டம்மானுடையவை என்பதை தெரிந்து, அவர் ஆயுத போராட்டத்தில் இணைந்து விட்டார் என்பது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here