50,000 ஐ நெருங்குகிறது பாதிக்கப்பட்டவர் தொகை: நாளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் வருகிறார்: இன்னும் கணக்கிட முடியாத கால்நடை அழிவு!

கிளிநொச்சி இடைத்தங்கல் முகாம் ஒன்றில்

வடக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தையடுத்து, நாளை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்கிறார் பொதுநிர்வாகம், இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார. நாளை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில், நிவாரணப்பணிகள் குறித்து ஆராயும் கூட்டமும் இடம்பெறவுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழையையடுத்து வடக்கின் ஐந்து மாவட்டங்களும் வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகின.

குளங்கள் நிரம்பி வான்பாய தொடங்கிதையடுத்து, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் பேரனர்த்தத்தை சந்தித்தன. இரண்டு மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 44,000 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்கு மாவட்ட செயலகமும், இராணுவமும் சமைத்த உணவுகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் இன்று காலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த விடயத்தில் விசேட கவனமெடுக்க வேண்டுமென்றும், நிவாரணம் மற்றும் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியது. இதையடுத்து, நாளைய தினம் (24) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு நேரில் விஜயம் செய்து, நிவாரண நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பாதிப்பு விபரம்

வடக்கில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் ஐந்து மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களே கடுமையாக பாதிப்படைந்துள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து குளங்களும் நிரம்பியுள்ளன. கிளிநொச்சியின் அனைத்து பிரதான குளங்களும் வான் பாய்கின்றன. இதேவேளை, கிளிநொச்சி, முல்லைத்தீவு விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றியமையாதவையாக இருந்த பெருமளவு கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. கால்நடைகளின் உயிரிழப்பு தொடர்பான சரியான மதிப்பீடு இதுவரை கிடைக்கவில்லை.

கிளிநொச்சி

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. கனகாம்பிகைகுளம், கல்மடு குளம், விசுவமடு குளம் ஆகியவற்றிலிருந்தே அதிக நீர் வான்பாய்கிறது. இதனால் கண்டாவளை, பன்னங்கண்டி, தர்மபுரம், புன்னைநீராவி, பிமந்தனாற்றின் ஒரு பகுதியென்பன வெள்ளத்தில் மூழ்கின.

மாவட்டத்தில் 9,475 குடும்பங்களை சேர்ந்த 31,234 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் 25 இடைத்தங்கல் முகாம்கள், மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயர் பிரிவில் 1,021குடும்பங்களை சேர்ந்த 3589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 இடைத்தங்கல் முகாம்களில் 419 குடும்பங்களை சேர்ந்த 1,523 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 7,386 குடும்பங்களை சேர்ந்த 24,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 இடைத்தங்கல் முகாம்களில் 821 குடும்பங்களை சேர்ந்த 2,556 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 1,068குடும்பங்களை சேர்ந்த 3,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 இடைத்தங்கல் முகாம்களில் 154 குடும்பங்களை சேர்ந்த 570 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிற்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பிரதேசசெயலகங்கள் மற்றும் தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நேற்றிரவும் நிவாரண நடவடிக்கைகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவின் பெரிய குளங்களான முத்துஐயன்கட்டு குளம், வவுனிக்குளம், உடையார்கட்டு குளம், தண்ணிமுறிப்பு குளம் என்பவற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதில் முத்துஐயன்கட்டு, வவுனிக்குளம் என்பன வான் பாய்ந்தன.

இதனால் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கின. பல வீதிகள் துண்டிக்கப்பட்டன.

மாவட்டத்தில் 3,794 குடும்பங்களை சேர்ந்த, 12,651 பேர் பாதிக்கப்பட்டனர். 22 இடைத்தங்கல் முகாம்கள், மற்றும் உறவினர், நண்பர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் கரிசல் பிரதேசத்தில் வெள்ளத்தால் 38 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் இடம்பெயர்ந்தனர். இடைத்தங்கல் முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மீன்பிடி படகுகளும் சேதமடைந்தன.

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவே அதிக பாதிப்பை எதிர்கொண்டது. யாழ் போக்கறுப்பு வீதி மருதங்கேணியுடன் துண்டிக்கப்பட்டது. மருதங்கேணியில் இருந்து போக்கறுப்பிற்கான 30 கிலோமீற்றர் தூர வீதியால் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. மருதங்கேணியில் வெள்ளத்தால் 278 குடும்பங்களை சேர்ந்த 708 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

நிவாரண உதவிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களிற்கு தேவையான சமைத்த உணவுகளை மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு இராணுவ கட்டளைப்பீடம் என்பன வழங்கி வருகின்றன. இதனால் தன்னார்வலர்களிடம் இருந்து உலருணவுகளும், உடுபுடவைகளையுமே எதிர்பார்ப்பதாக மாவட்ட செயலக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இன்று யாழ்ப்பாணம், வவுனியாவிலிருந்து பொதுஅமைப்புக்களும், தன்னார்வலர்களும் நிவாரணப்பொருட்களுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு இடைத்தங்கள் முகாம்களிற்கு சென்றனர். யாழ் வணிகர் சங்கம் சமைத்த உணவை அனுப்பி வைத்தது. நாளைய தினம் வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் உலருணவுகளும், உடுபுடவைகளும் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதேவேளை, வெள்ள நிவாரண பணிகளிற்காக முகப்புத்தகம் மற்றும் இதர வழிகளில் ஊடாக நிதி சேகரிப்பவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here