சீதையின் கண்ணீர்த்துளியா?… பொங்கி வழியும் சிறு ஊற்று: அசோகவனத்திற்கு அருகில் அதிசயம்! (வீடியோ)

புஸல்லாவ பிரதேசத்திற்கு உட்பட்ட நுவரெலியா- கண்டி பிரதான பாதையில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் வகுகவ்பிட்டிய பிரதேசத்தில் “ஊற்று மாரியம்மன்” என்ற ஒரு சிறிய கோவில் உள்ளது.

இந்த ஆலயம் இருக்கும் இடம் சுமார் 05 ஏக்கர் கொண்ட பாதுகாக்கபட்ட காட்டு பிரதேசமாகும். இந்த இடத்தில் விசித்திரமான ஊற்று நீர் ஒன்று காணப்படுகின்றது. இயற்கையாகவே அங்கு நீர் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பானையில் நீரை கொதிக்க வைத்தால், எப்படி கொதித்து பொங்கி எழுமோ- அந்ப்படி இங்கு ஓர் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பொங்கி வருகின்றது. இந்த நீர் மிகவும் குளிர்மையாகவும், சுவையாகவும் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த இடத்தில் “காக்கா பொன்னு” என்று சொல்லக் கூடிய கனிய வளமும் காணப்படுகிறது. நீருடன் தங்க துகள்கள் போன்று காக்கா பொன்னும் பொங்கி எழுகின்றது.

கோடைகாலத்திலும் இந்த நீர் ஊற்று வற்றுவதில்லை. சிறிய ஊற்றாக வெளி வந்து ஆறாக ஓடுகின்றது. இந்த நீரை மக்கள் குடிப்பதற்கும் விவசாயம் செய்வதற்கும் பாவித்து வருகின்றனர்.

புஸ்ஸல்லாவ, இறம்பொடை, நுவரெலியா போன்ற இடங்கள் இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்கள். நுவரெலியாவிலேயே சீதை அம்மன் கோவில் காணப்படுகின்றது. அசோகவனமும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இருந்தே அசோகவனம் ஆரம்பித்து உள்ளது. காலப்போக்கில் தேயிலை உற்பத்திக்காக காடுகள் அழிக்கபட்டு அசோகவனம் வேறாக பிரிக்கபட்டு விட்டது. புஸ்ஸல்லாவ வேறாக்கபட்டுவிட்டது.

இராவணன், சீதை அம்மனை இந்தியாலில் இருந்து இராமேஸ்வரம்¸ மன்னார், மாத்தளை¸ புஸ்ஸல்லாவ¸ வழியாக தனது புஸ்பக விமானத்தில் நுவரெலியாவிற்கு அழைத்து செல்லும் வழியில் சீதை அம்மன் இராமனை நினைத்து விட்ட கண்ணீரின் ஒரு துளி இப்பிரதேசத்தில் விழுந்துள்ளது. இந்த கண்ணீர் விழுந்த இடம் தற்போதும் சீதை அம்மனின் கண்னீராக பொங்கி நீராக வருகின்றது என்பதே, இந்த நீரூற்றைப்பற்றிய இதிகாசக்கதை.

பல ஆண்டுகளுக்கு முன்னர் அருகில் உள்ள சோகம தோட்டத்தில் காணப்பட்ட அம்மன் சிலை ஒன்றை திருடர்கள் களவாடி செல்ல முயன்றனர், அவர்கள் இந்த வழியாகவே சிலையை கொண்டு சென்றனர், இந்த இடத்தில் அந்த சிலை இயற்கையாகவே பூமிக்கு அடியில் சென்று விட்டது என்றும் வாய்வழி கதைகள் உள்ளன. அன்று முதல் இந்த நீர் ஊற்று உருவாகி சிலையின் நிறத்தில் தங்க துகள்களுடன் பொங்கி வருவதாக கூறுகின்றனர்.

அங்கு மரம் ஒன்றில் அனுமானின் உருவம் ஒன்றும் இயற்கையாகவே உருவாகி உள்ளது. இதையும் மக்கள் வணங்கி வருகின்றனர். இந்த காட்டு பகுதியில் குரங்குகளும் வசித்து வருவதுடன் தனக்கு உணவு தேவை ஏற்படும் போது ஆலயத்திற்கு வந்து உணவை பெற்று செல்கின்றன. அசோகவனத்தை ஒத்த இயற்கை காட்டு வளமும் இங்கு காணப்படுவதுடன், அரசாங்கம் இதனை பாதுகாத்து வருகின்றது.

சோகம தோட்ட மக்கள் தற்போதும் தங்கள் ஆலயத்தில் திருவிழாக்கள் நடக்கும் சந்தர்ப்பத்தில் இந்த நீர் ஊற்றில் நீர் எடுத்து கரகம் பாலித்து திருவிழாக்களை நடாத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த இடத்தில் அம்மனை வைத்து “ஊற்று மாரியம்மன்” என்ற பெயரில் ஆலயம் அமைத்து வணங்கி வருகின்றனர்.

இந்த ஆலயத்தின் தர்மகர்த்தா கிருஸ்ணபிள்ளை வேலுராமன். இவரின் முயற்சியினாலயே இந்த ஆலயம் தற்போது புதுபொலிவுடன் உருவாகியுள்ளது.

இந்த ஆலயத்திற்கு இன மத பேதம் இன்றி அனைத்து மக்களும் வந்து வணங்கி செல்கின்றனர். பக்த்தர்கள் தாங்கள் கேட்கும் அனைத்தையும் அம்மன் வழங்கி வருகின்றாள். பிள்ளைபேறு, செய் சூனியம் அவிழ்த்தல், நினைத்த காரியங்கள் நிறைவேற்றல், திருமணம் நிறைவேற்றல், தோசம் கழிதல், தீராத நோய் பிணி தீர்த்தல், நினைத்த காரியம் நிரைவேற்றல் இவை அனைத்தையும் அம்மன் நிறைவேற்றுகிறார் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் வருகின்றனர்.

தற்போது உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் “ஊற்று லிங்கேஸ்வரர்” சிவலிங்கம் ஒன்றும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களே ஊற்று நீரை எடுத்து சிவனுக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர். பிரதோஷ விரதம் மற்றும் பிதிர் கடன்களை இங்கு நிறைவேற்றி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here