தமிழ் சமூகத்தின் போருக்குப் பின்னான உளநெருக்கீடுகளில் அட்டாங்க யோகங்களில் யோகாசனம்

Dr.தி.சுதர்மன்

தமிழ் மக்கள் ஆயுதப்போர் ஓய்ந்த நிலையில் வழமையான வாழ்வுக்கு ஓரளவு திரும்பியுள்ளனர். ஆனால் போர் ஏற்படுத்திய வடுக்கள் எவ்வாறான உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்தது. அதனைத் தீர்ப்பதில் சித்தமருத்துவத்தின் பங்கு என்ன?

போரினால் போரின் பிற்பாடு உளநெருக்கீடுகள் ஏற்படுவதற்கான காரணங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம், இக் காரணிகள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஒவ்வொரு மனிதனையும் சமூகத்தையும் பாதிக்கின்றன.

01- உறவினர்கள், நண்பர்கள் காணாமற்போயிருத்தல், உயிர் இழந்திருத்தல்.

02- இடம்பெயர்ந்து மீளக்குடியமராது இருத்தல்.

03- காயம், ஊனமடைந்திருத்தல், உறவினர்கள், நண்பர்கள் காயம் ஊனமடைந்திருத்தல்.

04- தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுக் கொண்டிருத்தல், உயிர் இழப்புக்கள்.

05- சொத்துக்கள்இழப்பு

06- பொருளாதார நெருக்கடிகள்.

07- தடுத்து வைக்கப்படல், சித்திரவதைக்குட்படல்.

08- மதுபாவனை, போதைப்பொருட் பாவனைகள் அதிகரித்தல்.

09- அதிகரித்த பாலியல் வன்முறைகள்.

10- வேலையின்மை

இவற்றினால் ஒவ்வொரு மனிதனும் உடல், உளரீதியாக, பல்வேறு நெருக்கீடுகளை எதிர்கொள்கின்றான். உடல் ரீதியாக ஏற்படும் இழப்புக்கள், காயங்கள் ஒருவித பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனின், அதன் மூலம் ஏற்படும் உளரீதியான பாதிப்புக்கள், போரினால் நேரடியாக ஏற்படும் உளப்பாதிப்புக்கள் எம்மை மேலும் பாதிப்புக்குள்ளாக்கி எமது ஆரோக்கியத்தையும், சமுதாயத்தின் ஆரோக்கியத்தையும் கெடுக்கின்றன. அதிலும், மது போதைப்பொருட்களின் அதிகரிப்பு அதனைப் பாவிப்போரையும் பாதிப்பதோடு சமுதாயத்தையும் மிக மோசமாகப் பாதிப்பதை அண்மைக்காலமாக நேரிலேயே பார்த்துவருகின்நோம்.

இவை மூலம் முறைகேடான பாலியல் தொடர்புகள், பாலியல் நோய்கள், பாலியல் வன்முறைகள், என எக்காலத்திலும் இல்லாதவாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் யாழில் அதிகரித்து வருகின்றது. அதனால் முறைகேடான நலிந்த ஒரு சமுதாயம் உருவாவதுடன், வன்முறை உணர்வுகளும் அதிகரிக்கின்றன.

சித்த மருத்துவத்தில் போரினால் ஏற்படும் உளநெருக்கீடுகளுக்கு நேரடியாக எந்த தீர்வுகளும் கூறப்படாத போதிலும், பொதுவாகக் கூறப்பட்ட நெருக்கீடுகளுக்கான தீர்வுகள் போர் நெருக்கீடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கின்றன. அத்துடன் போர் நடைபெறுகின்ற இடங்களில் சித்தமருத்துவர்கள்  மக்களுடன் நெருக்கமாக எக்காலத்திலும் காணப்படுகின்றனர். எனவே போர் நெருக்கீடுகளில் இருந்து மக்களை விடுவிப்பதில்சித்த மருத்துவத்திற்கும், சித்த மருத்துவர்களிற்கும் அதிக பங்கு உண்டு எனலாம்.

நோயின்றி வாழ்வதற்கு சித்தமருத்துவத்தில் பதஞ்சலி முனிவரால் கூறப்பட்ட அட்டாங்க யோகங்களில் இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம் ஆகிய நான்கினை கடைப்பிடித்தாலே நல்லதொரு வளமான சமுதாயத்தினை நாம் உருவாக்கலாம். இதனை சமூகப்பொறுப்புள்ள ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளல் அவசியமாகிறது.

எமது மருத்துவத்தில் கூறப்பட்ட எமது யோகாசனத்தை பயன்படுத்தி குறுகிய கால நோக்கிலும், நீண்டகால நோக்கிலும் இதனை மிகவும் திட்டமிட்ட முறையில் செயற்படுத்தி எமது சமுதாயத்தினை வென்றெடுக்கலாம். அதை விடுத்து வெளியாரையும் அயலாரையும் நம்பி நாம் சகலவற்றையும் இழந்ததைப் பொல் மீண்டும் இழக்காமல் இருக்க எம்மிடமுள்ளவற்றை உரிய இடம் கொடுத்து சிறப்பாக பயனடைவதே எம்மை வென்றெடுக்கவுள்ள ஒரே வழியாகும்.

அட்டாங்க யோகங்களில், முதலாவதாக கூறப்பட்டது இயமம் ஆகும். இயமம் எனப்படுவது ஒழுக்கமாக இருக்க நினைப்பதே ஆகும். அதாவது முதலில் எண்ணத்தில் தூய்மை வேண்டும் என்பதே ஆகும்.

நியமம் என்பது நினைத்ததை செயற்படுத்தல் ஆகும். அதாவது ஒழுக்கமா இருத்தல் ஆகும். தற்போது காணப்படும் மனவிகாரங்களுக்கும் இவை இரண்டையும் கடைப்பிடிக்காமையே காரணமாகும். மனவிகாரமானது தனி மனிதனைப் பாதிப்பதை விட அந்த சமூகத்தையே வேருடன் சாய்த்து விடும். எனவே முன் பள்ளிகள் பாடசாலைகளிலிருந்து இவற்றினை ஏற்படுத்தல் வேண்டும்.

ஆசனம் என்பது உளஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் இரண்டினையுமே மேம்படுத்துவதற்கு உரியதாகும். சாதாரண உடற்பயிற்சிகள் பொதுவாக உடல் நலனை அடிப்படையாகக் கொண்டவையாகத் திகழ்கின்றன. ஆனால் யோகாசனம் என்பது மனத்திலே சஞ்சலம், குழப்பம், கலக்கம், சோர்வு, விரக்தி போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கவும், மனவலிமை, மனஆரோக்கியம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதும் ஆகும். இது தான் சாதாரண உடற்பயிற்சிக்கும், யோகாசனத்திற்கும் இடையே காணப்படும் பாரிய வேறுபாடு ஆகும். ஆனால் இமயம் நியமத்தை கடைப்பிடித்தாலோ அல்லது குறைந்தது இமயத்தை கடைப்பிடித்தாலோ யோகாசனத்தின் முழுப்பயனைப் பெறலாம்.

பகவத் கீதையில் பகவான் கண்ணபிரான் யோகத்தைப் பற்றி கூறுகையில்.

“அர்ஜீனா! தபஸ்விகளைக் காட்டிலும் ஞானிகளைக் காட்டிலும், நித்திய நைமித்திய, காம்ய கர்மங்களைச் செய்பவர்களைக் காட்டிலும், நியமா நியமாதிகளுடன் கூடிய யோகப்பியாசம் செய்யக் கூடிய யோகியானவன் சகல விஷயங்களிலும் உத்தமனாகத் திகழ்கின்றான்.”

இவ்வாறு பகவான் அர்ஜினுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் வாழும் மனிதர்கள் அனைவருக்கும் உபதேசித்துள்ளார். அத்துடன் உலக நிகழ்ச்சிகளினால் பாதிக்கப்படாத ஓர் உயர்ந்த நிலையை யோகாசனம் செய்வதன் மூலம் மனிதன் பெறமுடியும் என்றும், துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு யோகத்தை விட்டால் வேறு சாதனமேயில்லை என்றும் கண்ணபிரான் கூறியுள்ளார்.

பதஞ்சலி யோக சூத்திரத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.”மனத்தையும் மனதில் எழும் எண்ணங்களையும் நன்கு கட்டுப்படுத்துவதே யோகம். இப் பயிற்சியில் ஒருவன் முழுமை பெறும் போது அவன் தனக்குரிய தூய்மையும் பிரகாசமும் பொருந்திய நிலையில் நிறுத்தப்படுகின்றான். மற்ற வழிகளை அவன் பின்பற்றினால் மனநிலையில் ஏற்படும் விபரீத உணர்வுகளால் அவன் அழிக்கப்படுகின்றான்.”

இது யோகாசனம் எந்தளவுக்கு உளரீதியான செயற்பாட்டைக் கொண்டது என்பதை விளக்குகின்றது.

“ஹடயோக பிரதீபிகை” எனும் தொன்மை வாய்ந்த நூல் யோகாசனப் பயிற்சி பெறத் தகுதி வாய்ந்தவர் யார் என்பது குறித்து கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

“கருத்தறிந்த குழந்தை இளைஞர், முதியவர், பலசாலிகள், பலவீனங்கள், முதுமை காரணமாக அதிக நடமாட்டம் இல்லாது இருப்பவர்கள் போன்ற அனைவருமே தத்தம் இயல்பு, உடல்நிலை, செயலாற்றலுக்கு ஏற்ப தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால் உயர்ந்த நிலையை எய்துவதுடன் நீண்ட ஆயுளையும் பெறமுடியும்.”

சுருங்கச் சொன்னால் உலக வாழ்க்கையில் நேரும் துன்பங்களை நெற்றி கொண்டு மனிதன் தன் மனத்தைத் தன் ஆளுகைக்கு உட்படுமாறு செய்து வாழக் கூடியவனாக மனிதனை யோகாசன முயற்சியும் பயிற்சியும் உண்டாக்குகின்றது. இது விஞ்ஞான பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று மேலைத்தேய நாடுகளில் மருத்துவ துறையுடன் இணைந்து பல யோகாசன மையங்கள் செயற்பட்டு வருகின்றன.

இன்று யோகாசனம் செய்யும் பலர் முதல் இரண்டு யோகங்களையும் (இயமம், நியமம்) விடுத்து பல அமைப்புக்களை உருவாக்கி யோகாசனத்தை பணம் ஈட்டுவதற்கான ஒரு தொழிலாக மாற்றிவிடுகின்றனர். இதனால் அடிப்படையான யோகாசன முறைகளில் கூட மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றனர்.

பிராணாயாமம் எனப்படுவது எமது மூச்சினை ஒழுங்குபடுத்துவது ஆகும். இன்று உடல் உழைப்பு குறைந்து மேலோட்டமாகவே நாம் மூச்சினை உள்ளெடுத்து வெளி விடுகின்றோம். இதனால் போதிய ஒட்சிசன் இன்றி பல்வேறு தொற்றா நோய்கள் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

முக்கியமாக ஆஸ்துமா சுவாசம் தொடர்பான நோய்கள் உண்டாகின்றன.

பிரணாயாமத்தின் சிறப்பை பின்வருமாறு திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

“புறப்படு புக்குத் திரிகின்ற வாயுவை

நெறிப்பட உள்ளெ நின் மலமாக்கில்

உறுப்பு சிவக்கும், உரோமம் கருக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடையோனே”

பிராணாயாமம் செய்தால் நரை, திரை வழுந்து உடல் கறுத்த முதியவனும் மேனி சிவந்து நரை முடி கறுத்த உடல் வலுப்பெற்றுப் பலகாலம் இமையுடன் வாழும் நிலையை அடைவான் என்கின்றார்.

உளசெருக்கீட்டுத் தாக்கங்களுக்கு உள்ளானவர்களை பொறுத்தவரையில் இந்த அட்டாங்க யோகத்தில் கூறப்பட்டுள்ள சாந்த வழிமுறைகள் மிகச்சிறந்த பலனைத் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலைத்தேயத்தவர்கள் இதனை சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

யூன் 21 இனை யோகா தினமாக கொண்டாடுகின்ற வேளையில் மேற்கூறப்பட்டுள்ள அட்டாங்க யோகங்களில் முதன் நான்கிகையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றி போருக்குப் பின்னான உளநெருக்கீடுகளிலும் அதன் பாதிப்புக்களிலும் இருந்து விடுபட்டு நல்லதொரு சமுதாயத்தினை உருவாக்குவோம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here