பெண் மருத்துவம்: பெண்களுக்கான கருத்தடை சத்திரசிகிச்சை!

வைத்திய கலாநிதி தாட்ஷாயினி

தங்கள் குடும்பத்தை பூர்த்தி செய்து கொண்ட குடும்பத்தினர் செய்து கொள்ள கூடிய ஒரு நிரந்தரமான கருத்தடை முறை இதுவாகும். இது மிகவும் நம்பகரமான பாதுகாப்பான முறையாகும். இந்த சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படுபவர்கள் மீண்டும் கருத்தரித்தல் என்பது இயலாத கடினமான ஒன்றாகும். எனவே இனி குழந்தைகள் தேவையில்லை என தீர்மானம் எடுத்த தம்பதியினர் எழுத்து மூலம் சம்மதம் கொடுத்த பின்னரே இச் சத்திர சிகிச்சை செய்து  கொள்ள முடியும்.

1586ம் ஆண்டு அரச சுற்று நிருபத்தின் படி நிரந்தர கருத்தடை முறையை பெற்று கொள்ள தகுதியானவர்கள் யாரெனில்-

♦ மூன்று பிள்ளைகள் கொண்ட குடும்பமொன்றில் இனி குழந்தைகள் தேவையில்லை என்று தீர்மானிக்கும் தம்பதியினர்.
♦ இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள குடும்பத்தில் தாயின் வயது 26 அல்லது அதற்கு மேலும் கடைசி பிள்ளையின் வயது இரண்டிற்கு மேல் இருப்பினும் மட்டும் இச் சிகிச்சை முறையை தேர்வு செய்ய முடியும்.

இச் சத்திர சிகிச்சையை பெற்றுகொள்ளவிருக்கும் பெண்ணிற்கு பொதுவாக குழந்தைப் பேறு அல்லது கருச்சிதைவை அடுத்து உடனடியாகவும் அல்லது குழந்தை பேற்றிலிருந்து ஆறு வாரங்களின் பின்னரும் மேற்கொள்ளப்படுகின்றது.

LRT என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இச் சத்திர சிகிச்சையின் போது இடுப்பிற்கு கீழான பகுதிக்கு மயக்க மருந்து கொடுத்து விறைப்படைய செய்த பின்னர், அடி வயிற்றின் மீது இடப்படும் ஒரு சிறிய துவாரத்தினூடாக இரண்டு பலோப்பியன் குழாய்கள் கட்டப்பட்டு சிறிய துண்டொன்று வெட்டியகற்றப்படுகின்றது. மிக மிக அரிதாக மீண்டும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு (அதாவது ஆயிரம் நிரந்தர கருத்தடை செய்து கொண்ட பெண்களில் 5 பேரிற்கு மீண்டும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புள்ளது) வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும் இது பொதுவாக 100 வீதம் வினைத்திறன் மிக்க கருத்தடை முறையாகவே கருதப்படுகின்றது.

இச் சத்திர சிகிச்சைக்காக நீங்கள் ஒரு நாள் மட்டுமே வைத்தியசாலையில் தங்கியிருக்க நேரிடுகின்றது. இந்த சத்திரசிகிச்சை முடிந்து சில நாட்களில் பெண் தனது நாளாந்த வேலைகளில் ஈடுபட்டு கொள்ளலாம். மிக அரிதாகவே வைத்திய கவனிப்பு தேவைப்படும் அளவிற்கு சிக்கல்கள் ஏற்படுகின்றது.

சத்திர சிகிச்சையின் போது தையல் இடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இழையின் தன்மையை பொறுத்து இழைகளை வெட்டுவதற்காக 5-6 நாட்களில் வைத்தியசாலைக்கு (இழை வெட்ட) அழைக்கப்படுகின்றார்கள். இழை வெட்ட வேண்டுமா அல்லது இல்லையா என்பது பற்றி வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் பின் அறிவுறுத்தபடும்.

இதனை விட பொது சுகாதார உத்தியோகஸ்தர் ஆக குறைந்தது 3 மாதங்களிற்கேனும் வீட்டு தரிசிப்பு செய்வர். இத் தரிசிப்பின் போது ஏதாவது பிரச்சினைகள் உண்டாவென அறிந்து வைத்திய கவனிப்பிற்காக அனுப்பி வைப்பர். பிரச்சினைகள் இல்லாதவிடத்து 3 மாதம் நிறைவேறிய பின்னர் 5-6 மாதத்திற்கு ஒரு முறை வீட்டு தரிசிப்பு செய்வர்.

சத்திர சிகிச்சைக்கு ஆயத்தமாக போகும் பெண்களுக்கு பொதுவாக பல வினாக்கள் மனதில் எழக் கூடும். உதாரணமாக இவ்வாறு கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொண்ட பின்னர் உடற் பருமன் கூடுமா? அடுத்து மாத சுகயீனத்தில் மாற்றம் ஏற்படுமா? அல்லது மாத சுகயீனம் நிறுத்தப்படுமா? பெண்கள் நிரந்தர கருத்தடை மேற்கொள்வதனால் அவர்களது பாலியல் ஈடுபாடுகள் குறைவடையுமா? என்கின்ற வினாவுடன் கூடிய பயம் மனதில் எழக் கூடும். இவ்வாறான வினாக்களுக்கான விடை- இல்லை என்பதாகும்.

உடற்பருமனில் சத்திரசிகிச்சைக்கு பின் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை. நிறை அதிகரிப்பை ஏற்படுத்தவதில்லை. பல மருத்துவ ஆய்வுகளின் படி நிரந்தர- குறிப்பாக கருத்தடையின் பின் மாத சுகயீனத்தில் எதுவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனினும் நிரந்தர கருத்தடை செய்ய முன் ஏதாவது கருத்தடை முறைகளை பாவித்திருப்பின் அதனுடைய செல்வாக்கினால் அல்லது தாக்கத்தினால் மாத சுகயீனத்தில் மாற்றமிருக்கலாம். நிரந்தர கருத்தடைக்கு பின் முன்னர் போன்று பாலியல் உறவுகளை மேற்கொள்ள முடியும்.

நிரந்தர கருத்தடை செய்த கொண்ட ஒரு பெண் மீண்டும் ஏதாவதொரு சந்தர்ப்பங்களினால் கருத்தரிக்க விரும்பினால் கருத்தரிக்கலாமா? என்கின்ற கேள்வியும் பலர் மனதில் எழக்கூடும். இதற்கு பொதுவாக இல்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் இது ஒரு நிரந்தரமான கருத்தடை முறையாகும் . கருத்தடை செய்த ஒரு சில பெண்கள் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பலோப்பியன் குழாயை ஒன்றிணைக்க கூடியதாக இருக்கும். ஆயினும் அவர்கள் மீண்டும் கருத்தரித்தல் என்பது கடினமான விடயமாகும். இம் முறை செலவு கூடியதும் கடினமானதாகும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here