புலிகளின் உக்ரேன் ஆயுத தொழிற்சாலை: பர்மாவிற்கும் ஆயுதம் வழங்கிய புலிகள்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?

பீஷ்மர்

வன்னியில் ஆயுதத் தட்டுப்பாடு. நிக்கோபர் தீவுகளிற்கு அருகில் புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்று மூன்றரை மாதங்களிற்கு மேலாக கட்டி வைக்கப்பட்டிருந்தது. நிக்கோபரில் நிற்கும் கப்பலையும் கடற்புலிகளையும் முல்லைத்தீவிற்கு அப்பாலான கடற்பரப்பில் சந்திக்க வைக்க வேண்டும். ஆனால் கடற்படையின் புதிய வியூகமொன்று அதற்கு தடையாக இருந்ததாக கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.

எம்.ஐ 24 ஹெலிகொப்டர்களை கடல் நடவடிக்கையுடன் ஒருங்கிணைக்க ஆரம்பித்திருந்தார்கள். அரசின் இந்த புதிய உத்தியை ஆரம்பத்திலேயே உடைக்க வேண்டும் என புலிகள் நினைத்தனர். இல்லையென்றால், கடற்படையின் மனோதிடம் மேம்படும், இந்தவகையான தாக்குதல் உத்தியை அதிகப்படுத்தி விடுவார்கள்- அதன்பின் ஒன்றும் செய்ய முடியாதென நினைத்தார்கள்.

விடுதலைப்புலிகளிடம் இருந்தது எந்தவகையான ஏவுகணையென்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். சோவியத் ஒன்றியத்தின் தயாரிப்பான sam 7 strela 2 ஏவுகணைகளே புலிகளிடம் இருந்தன. 1992 ஆம் ஆண்டு உக்ரேனில் இருந்து இந்தவகை ஏவுகணைகளின் ஒரு தொகையை புலிகள் வாங்கினார்கள். தனது ஆதரவு நாடுகளிற்கு முன்னர் இந்த ஏவுகணைகளை இரகசிமாக சோவியத் ஒன்றியம் வழங்கியிருந்தது. அமெரிக்காவிற்கு எதிராக போராட வியட்நாம் போராளிகளிற்கு, சிரிய அரசிற்கு, ஈரானிற்கு, ஈக்குவடோர் புரட்சிப்படைக்கு சோவியத் இரகசியமாக வழங்கியிருந்தது. போராளிக்குழுக்களிற்கு ஏவுகணைகள் செல்வதை எந்த வல்லரசும் விரும்பவில்லை. ஆனால், தத்தமது நலன்களிற்கு ஏற்ப வழங்கி வந்தார்கள்.

பனிப்போரின் முடிவின் பின் அமெரிக்க, ரஸ்யாவிற்கிடையில் நீடித்த பகை ஓரளவிற்கு தணியத் தொடங்கியது. அணுஆயுதங்கள், ஏவுகணைகள், விமானங்கள் உள்ளிட்ட போர்த்தளபாடங்கள் ரஸ்யாவில் இருந்து வெளியில் செல்ல வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா கருதியதால், ரஸ்யாவுடன் அமெரிக்காவே நெருக்கத்தை ஏற்படுத்தி, அரசுகளிற்குள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இதன்படி இரண்டு நாட்டு போர்த்தளபாடங்களையும் போராளிகளிற்கும், குழப்படிக்கார நாடுகளிற்கும் விற்பதில்லை என்பதே அந்த எழுதப்படாத உடன்பாடு.

உக்ரேனில் இருந்த ஆயுதங்களை வெளியில் செல்லவிடாமல் தடுக்கும் பொறுப்பையும் அமெரிக்காவே கவனித்தது. படிப்படியாக அந்த நாடு நேட்டோவிற்குள் கொண்டு வரப்பட்டதற்கு சமாந்தரமாக, அந்த நாட்டு இராணுவத்தை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வர அமெரிக்கா உதவியது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆயுத தொழிற்சாலைகள் பல உக்ரேனிலேயே இருந்தன.

பிரபாகரன்- சூசை

உக்ரேனில் இரும்பு உற்பத்தி அதிகமாக இருப்பதால், சோவியத் காலத்தில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளில் அனேகமானவை அங்கு நிறுவப்பட்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின் அங்கிருந்த ஆயுத தொழிற்சாலைகளை இராணுவ உயரதிகாரிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அந்த தொழிற்சாலைகள் இராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட சொத்தாகி, கறுப்பு சந்தைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறின. இதன்மூலம் அவற்றை உரிமையாக்கிய இராணுவ அதிகாரிகள் கோடீஸ்வரர்களாக மாறினர்.

இந்த இடத்தில் இன்னொரு ஆச்சரியமான தகவலொன்றை சொல்கிறோம். அப்படியான தொழிற்சாலையான்று புலிகளின் கைக்கும் வந்தது!

இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். உக்ரேனில் புலிகளிற்கு ஆயுத தொழிற்சாலையா என.

ஆனால், புலிகள் நீண்டகாலமாக உக்ரேனில் ஒரு ஆயுத தொழிற்சாலையை நிர்வகித்தனர். ஆனால், அது அவர்களிற்கு சொந்தமானதல்ல. சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்னர், உக்ரேனிய இராணுவ அதிகாரியொருவரின் சொத்தாகிய ஆயுத தொழிற்சாலை அது. அவரிமிருந்து ஒப்பந்த அடிப்படையில் புலிகள் தொழிற்சாலையை வாங்கி நிர்வகித்தனர். அந்த அதிகாரியிடமிருந்து புலிகளின் பெயரில் வாங்கவில்லை. ஒரு உக்ரேனிய நபரின் பெயரிலேயே தொழிற்சாலையை பெற்று, நிர்வகித்தனர்.

புலிகளிற்கு தேவையான அத்தியாவசிய உபகரங்கள்- ஏ.கே துப்பாக்கிகள், ரவைகள், கையெறி குண்டுகள் போன்றவை அங்குதான் தயாரிக்கப்பட்டன. அதேபோல, புலிகளை போல ஆயுதம் தேவைப்படும் பிற நாட்டு இயங்கங்களிற்கும் அங்கிருந்து சப்ளை செய்யப்பட்டது. அதற்கான பணத்தை அந்த இயங்கள் செலுத்தின. இதுவும் புலிகளிற்கு நல்ல வருமானம் தரும் மூலமாக இருந்தது.

பர்மா (மியான்மார்) மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகள் விதித்திருந்தன. இதில் முக்கியமானது ஆயுதத்தடை. பர்மாவிற்கு உள்நாட்டிலும், அண்டை நாடுகளுடனும் இராணுவரீதியான சவால்கள் இருந்தன. அதை சமாளிக்க நவீன ஆயுதங்கள் தேவை. ஆனால் உத்தியோகபூர்வமாக வாங்க முடியாது.

இந்த சமயத்தில் புலிகளின் ஆயுதத்தொழிற்சாலை, புலிகளின் கடத்தல் வலையமைப்பு பர்மாவிற்கு ஓரளவு உதவியது. அதேபோல, பர்மாவினாலும் புலிகளிற்கு ஆயுதங்கள் கிடைத்தது. புலிகளிற்கும் பர்மா அரசுக்கும் இடையிலான உறவு ஆழமானது. நெருக்கமானது. இதை மேல்மட்ட இராஜதந்திரிகள் சிலர்தான் தெரிந்து வைத்திருந்தனர். மற்றும்படி வேறு யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி இரகசியமாக உறவை பேணினர். புலிகள், பர்மா உறவுபற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்.

இரண்டாம் முறையாக, 1999 இல் உக்ரேனிலிருந்து புலிகள் ஒரு தொகை ஏவுகணை வாங்கிய விவகாரம் எப்படியோ சி.ஐ.ஏ இற்கு தெரிந்து, பின்னர் உக்ரேனிலிருந்து ஏவுகணைகள் வெளியில் செல்வதை அமெரிக்கா தடுத்து விட்டது. இதனால் மீண்டும் புலிகளால் ஏவுகணை வாங்க முடியவில்லை. வாங்கிய ஏவுகணைகளை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டிய நெருக்கடி புலிகளிற்கு. 1999 இன் பின்னர் புலிகளால் இறுதிவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கவே முடியவில்லை. வெப்பத்தை நாடிச் செல்லும் sam 7 strela 2 ஏவுகணைகளிற்கான, விமான எதிர்ப்பு பொறிமுறையை மிக குறுகிய காலத்திலேயே உக்ரேனால் இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டும் விட்டது. இதுதான், புலிகளின் விமான எதிர்ப்பு பொறிமுறையில் பலவீனத்தை ஏற்படுத்தியது.

கரும்புலிகளின் தாக்குதல் படகொன்று

யாழ்ப்பாணத்தில் இரண்டு ஏவுகணைகளை கடாபி விமானங்களின் மீது சுட்டார். 1995இல் நடந்த இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு விமானங்கள் வீழ்ந்தன. ஏற்கனவே பயிற்சியின் போது கடாபி ஒன்றை செலுத்தியிருந்தார். இரணைதீவு கடலில் பயணிகள் விமானத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் (யாழ்ப்பாணத்தில் இருந்து காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றியபடி வந்த விமானம் என கருதியே புலிகள் அந்த தாக்குதலை நடத்தியிருந்தனர்), வில்பத்து சரணாலயப்பகுதி தாக்குதல் என்பனவும் இந்த உக்ரேனிய ஏவுகணைகள் மூலமே நடத்தப்பட்டது.

அப்போது புலிகளின் விமான எதிர்ப்பு அணியில் கடாபி, அகிலேஸ், கோணேஸ் ஆகியோரே முக்கியமானவர்களாக இருந்தனர். இதில் அகிலேஸ், கோணேஸ் போன்றவர்கள் காயமடைந்ததை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம்.

நிக்கோபர் தீவுகளிற்கு அருகில் நின்ற ஆயுதக்கப்பலை முல்லைத்தீவிற்கு அண்மையில் கொண்டுவர புலிகள் முடிவுசெய்தனர். அந்த சமயத்தில் இரவில் முல்லைத்தீவிற்கு அப்பால் கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்கள் தரித்து நிற்கத் தொடங்கி விட்டன. அதனால் இரவில் ஆயுதக்கப்பலை அங்கு கொண்டு வருவது சிரமம். ஆகவே விடிகாலையில் புறப்பட்டனர்.

1998இன் நடுப்பகுதி. விடிகாலையில் புறப்பட்ட கடற்புலிகளின் படகுகள் ஆழ்கடலிற்கு சென்று ஆயுதங்களை ஏற்றியது. அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு ஆயுதக்கப்பல் குறித்த இடத்திற்கு வரவில்லை. இப்படியான தாமதங்களினால் ஆயுதங்களை ஏற்றியபடி திரும்பிய கடற்புலிகளின் விநியோக அணி தாமதமாக திரும்பியது.  முல்லைத்தீவு கரையை நெருங்க மாலை 3 மணியாகி விட்டது. புலிகளின் விநியோக அணி ஆழ்கடலிற்கு சென்றதை அவதானித்த கடற்படையினர், புலிகள் திரும்பி வரும்வரை காத்திருந்தனர்.

முல்லைத்தீவை புலிகளின் விநியோக அணிகள் நெருங்க, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலையில் இருந்து கடற்படையினர் திடீரென வந்து விட்டனர். கடற்படையின் வரவை பார்த்து நின்ற கடற்புலிகளின் அணிகள் கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். புலிகளின் தாக்குதல் உக்கிரம் பெற்ற பின்னர், எம்.ஐ 24 உலங்கு வானூர்தி அங்கு வரவழைக்கப்பட்டது.

கடாபி- பிரபாகரன்

கடற்புலிகளின் நீளமான தாக்குதல் படகுகளை சூடை என்றுதான் அழைப்பார்கள். ஒரு சூடை படகில் புலிகளின் விமான எதிர்ப்பு குழுவினர் இருந்தனர்.

புலிகளின் வழக்கமான ஆயுத விநியோக நடவடிக்கைகள் எல்லாமே இப்படி ரிஸ்க் ஆனவைதான். ஆனால், இந்த சம்பவத்தை மட்டும் விசேடமாக சொல்ல காரணம்- அந்த படகில் இருந்தவர் கடாபி!

புலிகளின் விமான எதிர்ப்பு அணியில் அப்போது குறிப்பிட்டளவான ஆட்களே இருந்தார்கள். ஒரு தொகுதியினர் ஏற்கனவே காயமடைந்து விட்டனர். புதிதாக அணியில் இணைந்த சிலர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். ஆயுதத் தட்டுப்பாடான நேரம்… கடலில் வான்படை ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் சமயம்… இப்படியான சமயத்தில், உலங்கு வானூர்திகளை வீழ்த்தினால்தான் கடற்புலிகளின் மேலாதிக்கம் கடலில் இருக்கும். எல்லாவற்றையும் யோசித்து விட்டு, கடாபி தானே புறப்பட்டார்!

கடாபிதான் தாக்குதலிற்காக வருகிறார் என்பது கடற்புலிகளில் யாருக்கும் தெரியாது. விமான எதிர்ப்பு அணியின் யாரோ ஒரு போராளி வருகிறார் என நினைத்திருப்பார்கள். கடாபி வந்து விட்டார். படகில் ஏற்றி செல்லத்தான் வேண்டும். ஆனால், கடற்புலிகளின் தளபதி சூசையிடம் இதை சொல்லாமல் செய்யலாமா என்ற குழப்பம் போராளிகளிடம். சூசை பயங்கர கோபக்காரன்.

எவ்வளவு கோபக்காரன் என்றால்- விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை மீறி, தாக்குதல் படகிலிருந்து ஒரு லீற்றர் பெற்றோலை எடுத்து, மோட்டார்சைக்கிளிற்கு பாவித்ததற்காக ஒரு கரும்புலி போராளிக்கு மரணதண்டனை விதித்த அவரது கோபம் போராளிகள் எல்லோருக்கும் தெரியும். அதனால், தயங்கிக் கொண்டு நிற்க, அவர்களை சமாதானப்படுத்தி படகை கிளம்ப வைத்தார் கடாபி.

இதேவேளை, வாசகர்களிற்கு ஒரு அன்பான அறிவித்தல். தமிழ்பக்கத்தில் வெளியாகும் இந்த கட்டுரையை ஜேவிபி செய்திகள், ஓ அம்மா உள்ளிட்ட பல இணையங்கள் முன்அனுமதியின்றி மீள்பிரசுரம் செய்கின்றன. இந்தவிதமான திருட்டு ஊடக கலாசாரத்திற்கு வாசகர்கள் ஊக்கமளிக்கக்கூடாது என்பதை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

கடாபி அன்று ஒரு உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தினார். ஆயுதங்கள் வெற்றிகரமாக கரைக்கு வந்தன.

1991 ஆ.க.வெ சமர்- சசிக்குமார், சூசை, பால்ராஜ்

கடாபிதான கடலிற்கு சென்றார் என்ற தகவல் பின்னர்தான் சூசைக்கு தெரிய வந்தது. அவர், கடற்கரைக்கே வந்துவிட்டார். முக்கிய தளபதியொருவருக்கு கடலில் ஏதாவது நடந்தால் சூசைக்கு சிக்கலாகி விடுமல்லவா. எனக்கு தெரியாமல், எங்கள் போராளிகள் கூட்டிச் சென்று விட்டார்கள் என விளக்கம் சொல்வதை தளபதிகள் விரும்ப மாட்டார்கள் தானே. அந்த சண்டையில் அப்படியொரு வில்லங்கமும் வரவுமில்லை.

உக்ரேனில் வாங்கிய sam 7 strela 2 ஏவுகணைகளை புலிகள் எப்படி பாவித்தார்கள்? அதற்கு பயிற்சியளித்தது யார்? இந்த கேள்விகளிற்கு சுவாரஸ்யமான பதில்கள் உள்ளன. இதை அறிவதென்றால் அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here