விக்னேஸ்வரனிற்கு திங்கள்கிழமை காத்திருக்கும் கண்டம்… ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்படலாம்!

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிற்கு நாளை மறுநாள் கண்டமொன்று காத்திருப்பதாக சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நாளை மறுநாள்- 10ம் திகதி- மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வடக்கு அமைச்சரவை சர்ச்சை குறித்த வழக்கின் முக்கியமான தினமொன்று.

தன்னை அமைச்சரவையிலிருந்து நீக்கியது தவறென டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வழக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியதாக, வடக்கு முன்னாள் முதலமைச்சர் மீது டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

டெனீஸ்வரனே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்வது, மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும், பதவிக்காக இப்படி ஆலாய் பறக்க வேண்டியதில்லையென கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் வலியுறுத்தியும் கேளாமல், டெனீஸ்வரன் இந்த வழக்கை தொடர்ந்தார். அவரது அமைச்சு ஆவலை, கூட்டமைப்பிற்குள் இருந்த முதலமைச்சர் எதிர்ப்பாளர்கள் சாதகமாக பயன்படுத்தி, இந்த வழக்கை முன்னகர்த்தினர்.

நீதிமன்றம் எப்படியான தீர்ப்பை வழங்கும்?

இது தொடர்பில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல தரப்பு சட்டத்தரணிகளுடனும் பேசினோம். பெரும்பாலானவர்கள், இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் தரப்பு சிறு நெருக்கடியை சந்திக்கலாமென்றுதான அபிப்பிராயப்பட்டார்கள்.

டெனீஸ்வரன் தரப்பின் மூத்த சட்டத்தரணியொருவருடன் பேசியபோது- “நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திங்கள் கிழமை நீதிமன்றம் தீர்ப்பொன்றை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. அனேகமாக முன்னாள் முதலமைச்சர் தரப்பிற்கு அது நெருக்கடியை கொடுக்குமென எதிர்பார்க்கிறோம். ஆனால், தீர்ப்பில் சில விசயங்கள் செல்வாக்கு செலுத்தும். அவர் முன்னாள் நீதியரசர். மற்றையது, இது அரசியலுடன் தொடர்புடையது. அதனால் ஒரு அடையாள அபராதமாகவும் இருக்கலாம். உதாரணமாக, ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவது போன்ற ஒரு தண்டனை அறிவிக்கப்படலாம்“ என்றார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அமைச்சர்கள் அனந்தி சசிதரன், க.சிவநேசனும் எதிர்கொள்கிறார்கள்.

அனந்தி சசிதரன் தரப்பு சட்டத்தரணிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. அனந்தி சசிதரன் ஆங்கிலம் பேசுவது தொடர்பிலும் டெனீஸ்வரன் தரப்பு சட்டத்தரணிகள் கடந்த அமர்வுகளில் சர்ச்சை கிளப்பியிருந்தார்கள். அனந்தி தரப்பு எப்படி வழக்கை எதிர்கொள்ள போகிறதென்பது தெரியவில்லை.

ஆனால், க.சிவநேசன் தரப்பு- இதில் தமக்கு எந்த சிக்கலுமில்லையென “கூலா“க இருப்பதாக தெரிகிறது. அந்த தரப்பு சட்டத்தரணியொருவருடன் பேசினோம்.

“டெனீஸ்வரன் அமைச்சர்களிற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். தனது அமைச்சுக்குரிய கடமைகளை ஒப்படைக்கும்படி அதில் கோரியிருந்தார். அந்த கடிதத்தை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார் சிவநேசன். ஆளுனரிடம் ஆலோசனை பெற்று செயற்படும்படி முதலமைச்சர் சொன்னார். ஆளுனரிடம் சென்றார். முதலமைச்சர் சொல்வதை போல செயற்படும்படி ஆளுனர் அறிவுறுத்தினார். இதில் ஆளுனரும், முதலமைச்சருமே சம்பந்தப்பட்டவர்கள்.“ என்றார்.

எப்படியோ, திங்கள்கிழமை இந்த விவகாரத்தில் முக்கியமான தினமாகும்.

ஆயிரமாயிரம் போராளிகள், பொதுமக்களின் குருதி, தியாகத்தால் உருவாக மாகாணசபையை உட்கட்சி மோதல், பதவி ஆசையால் எப்படியெல்லாம் சீரழிக்கிறார்கள்… தமிழ் அரசியலை எப்படி சந்தி சிரிக்க வைக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு, திங்கள் வரை காத்திருப்போம்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here