வைத்திருப்பது 2 போனஸ் சீற்; காட்டுவதோ ஓவர் சீன்: மக்கள் முன்னணிக்கு புளொட் பதிலடி கடிதம்!

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளை விலக்குமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் க.வி.விக்னேஸ்வரனிற்கு ஆங்கிலத்தில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு, இன்று புளொட் தமிழில் பதில் அனுப்பியுள்ளதாக தமிழ் பக்கம் அறிந்தது.

நாளை (9) தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக, கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டுக்களிற்கு பதிலளிக்குமாறு இரண்டு கட்சிகளிடமும் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்

இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் ஏற்கனவே பதிலளித்திருந்தது. இந்த நிலையில் இன்று புளொட் பதில் அனுப்பியுள்ளது. புளொட் பிரமுகர் ஒருவரும் இந்த தகவலை தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தார். புளொட் அனுப்பிய பதிலை விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டார் என்பதை, விக்னேஸ்வரன் தரப்பு முக்கியஸ்தர் ஒருவரும் உறுதிசெய்தார்.

புளொட் அனுப்பிய விளக்க கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பான தகவல்களையும் தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட தயாரிப்பில் புளொட் கலந்து கொள்ளவில்லையென, கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு புளொட் தரப்பால் வழங்கப்பட்ட பதிலில், “தமிழ்மக்கள் பேரவையின் தீர்வு திட்ட தயாரிப்பில் எங்களது பிரதிநிதியாக பரந்தாமன் கலந்து கொண்டார். அந்த குழுவில் இருந்தவர்களில், தீர்வு திட்ட தயாரிப்பு தொடர்பான சகல கூட்டங்களிலும் கலந்து கொண்டவர்கள் மிகச்சிலர்தான். அந்த மிகச்சிலரில் எங்களது பிரதிநிதியும் ஒருவர். தீர்வு திட்ட தயாரிப்பின்போது, குழுவில் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் எமது பிரதிநிதியிடம்தான் பல சந்தர்ப்பங்களில் கஜேந்திரகுமார் உதவி கோரியிருந்தார்.

தீர்வு திட்டத்தை துதரகங்களிற்கு வழங்குவதில்- தூதரக அதிகாரிகளை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்து- எமது பிரதிநிதியே முக்கிய பங்காற்றினார். ஆகவே, எமது பிரதிநிதி பேரவையின் தீர்வு திட்ட தயாரிப்பில் பங்களிக்கவில்லையென்பதை நிராகரிக்கிறோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

புளொட் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டு விட்டது, ஒற்றையாட்சி அரசியலமைபபு பணி தயாரிப்பதற்கான உபகுழுவொன்றின் தலைமையை ஏற்றுக் கொண்டது என்ற கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போது,

“நாங்கள் ஒனறையாட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய அரசியலமைப்பு பணியில் ஒரு உப குழுவிற்கும் தலைவராக புளொட் தலைவர் சித்தார்த்தன் இருக்கிறார். அந்த குழுவின் அறிக்கையில், ஒற்றையாட்சி முறை தான் இனப்பிரச்சனைக்கு தீர்வை காண தடையாக இருக்கிறதென்றும்,  சமஷ்டிதான் தமிழர்களிற்கு தீர்வாக அமையுமென்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையை நன்றாக வாசித்தால், இது புரியும்.

அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் இப்பொிது கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது. உருவாக்கும் முயற்சியில் இருக்கும்போதே, அதை நிறைவேற்றியதாக சொல்ல முடியாது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று, சர்வஜன வாக்கெடுப்பில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர்தான் புதிய யாப்பு உருவாகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கெடுப்பல் கலந்து கொண்டு, ஆதரவாக வாக்களித்த பின்னர்தான், அவர் அதை ஏற்றதாக கொள்ளலாம். இவைகளையெல்லாம் அறிந்து கொள்ளாமல் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என கூறுவது சிறுபிள்ளைத்தனமானது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்ச்சிக்காக சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், நான் மூவரும் கடைகடையாக, தெருதெருவாக சென்று பிரசாரம் செய்தோம். இதையெல்லாம் கஜேந்திரகுமார் அவ்வளவு விரைவாக மறப்பார் என நினைக்கவில்லை.

மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்ச்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு எம்.பியாகிய வியாழேந்திரனும் எடுத்த முயற்சிகள் மிகப்பெரியவை. அந்த எழுக தமிழழை பெரு வெற்றியாக்கியதற்கு அவர்கள்தான் காரணம்.

மட்டக்களப்பு உள்ளூராட்சி தேர்தலில் விகிதாசாரத்தில் வெறும் இரண்டு ஆசனங்களை பெற்ற த.தே.மக்கள் முன்னணி மட்டும், அங்கு எழுக தமிழை வெற்றியடைய செய்திருக்குமென நம்புவதில் ஏதேனும் தர்க்க நியாயங்கள் இருக்க முடியுமா?

எம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும், சுயநல நோக்குடையவை. தமிழ் மக்கள் பேரவையில் விக்னேஸ்வரனை விடவும், தம்மை அதிகார சக்தியாக நிறுவும் நோக்குடையவை“ என குற்ப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழ் மக்கள் பேரவையின் கடந்த கூட்டத்தில், புளொட் பிரதிநிதிகளுடன் அடாவடியாக நடந்து, அவர்களை வெளியேற்றியது தொடர்பான விளக்கத்தையும் அந்த கடிதத்தில் புளொட் கோரியுள்ளது என அறிய முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here