முன்னாள் போராளியுடன் விளையாடிய கிராமசேவகருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

முன்னாள் போராளியெருவருடனும், பிறிதொரு நபருடனும் பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ள, முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகயையடுத்தே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மனித உரிமை ஆணைக்குழு வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடந்த மாதம் இரண்டு முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. முறைப்பாடுகள் தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் நேரடி விசாரணைகளை நடத்தினர். இதன்போது, அதிகார துஷ்பிரயோகம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் பழிவாங்கல், அரச நிவாரணத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முறைப்பாட்டாளர் தரப்பால் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் அவற்றை நிரூபிப்பதற்கு சாதகமான சான்று, ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தனர்.

கிராம அலுவலகர் தவறிழித்திருந்ததை இனங்கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறிவித்து, கிராமசேவகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தனர். எனினும், துணுக்காய் பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, இவ்விடயம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பில் நடவடிக்கையெடுத்த மாவட்ட செயலாளர், கிராம அலுவலகரை அவரது கடமைகளிலிருந்து விடுவித்து துணுக்காய் பிரதேச செயலகத்தில் இணைத்துள்ளார். உள்ளக விசாரணைகளின் பின் கிராமஅலுவலர் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here