ஒரு செய்தியால் சரா எம்.பி படும் பாடிருக்கிறதே… ஸப்பா!

ஐக்கிய தேசியக்கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு சேர்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் போர்க்குற்ற விசாரணையை பற்றி மூச்சே விடவில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சரவணபவனின் பத்திரிகையான உதயனில் சில நாட்களின் முன்னர் ஒரு செய்தி வந்தது.

அதேபோல, மைத்திரியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களிலும் போர்க்குற்ற விசாரணை பற்றி மூச்சே விடவில்லையென்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

அந்த செய்தியை தொடர்ந்து, தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கொதித்தார்கள். மாகாணசபை உறுப்பினர்கள் கே.சயந்தன், அ.அஸ்மின் போன்றவர்களும் சரவணபவனிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்கள்.

இதேவேளை, அது வரை எள்ளெண்ணெய் பத்திரிகை என இகழ்ந்து வந்த கூட்டமைப்பு எதிர்ப்பார்கள் பத்திரிகை கட்டிங்கை பகிர்ந்தனர்.

உதயன் செய்தியையடுத்து, “போர்க்குற்ற விசாரணை பற்றி வலியுறுத்தினோம். ரணிலும் அதற்கு பதிலளித்தார். ஏன் அந்த பத்திரிகை முதலாளியும் அங்குதானே இருந்தார்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சமூக வலைத்தளத்தில் சரா எம்.பிக்கு டோஸ் கொடுத்தார்.

இது எல்லோரும் தெரிந்த செய்திதான். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய- வெளியில் அவ்வளவாக கசியாத- சில சங்கதிகளையும் சொல்லி வைக்கிறோம்.

சரவணபவன் எம்.பிக்கு ஆங்கிலம் தெரியாதா என்றும் தமிழரசுக்கட்சி வலைத்தளவாசிகள் கொதித்தார்கள். ரணில் விக்கிரமசிங்கவுடன் நடந்த சந்திப்பில், பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசப்பட்டது.

ஆனால், மைத்திரியுடனான சந்திப்பில் அனைவரும் தமிழில்தான் பேசினார்கள். கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பிற்காக சென்றபோதே, அனைவரையும் தமிழிலேயே பேசும்படி ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குறிப்பிட்டனர். மைத்திரி சிங்களத்தில் பேசினார். எம்.பிக்கள் தமிழில் பேசினார்கள். ஜனாதிபதி செயலக மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்க, அனைவருக்கும் ஹெட்செற் வழங்கப்பட்டிருந்தது. ரணலுடனான சந்திப்பில் ஆங்கிலத்தில் பேசப்பட்டதென்பதால், அங்கு என்ன நடந்ததென்பதை சரவணபவன் எம்.பியால் விளங்கிக் கொள்ள முடியவில்லையென்றாலும், மைத்திரியுடனான சந்திப்பில் அவரே அதை கேட்டிருக்கலாமே என்ற கேள்வி வரும்.

சரி, இதையெல்லாம் விட்டுவிட்டு முக்கிய விசயத்தை சொல்கிறோம்.

இந்த செய்தியையடுத்து, கூட்டமைப்பின் தலைமை பத்திரிகை முதலாளியை தொலைபேசியில் அழைத்து செம டோஸ் கொடுத்ததென்கிறார்கள் விடயமறிந்தவர்கள். பத்திரிகையை வைத்து மிரட்ட முடியாது, இந்த விளையாட்டு காட்டினால் அடுத்தமுறை சீற் கிடையாது என்பதையும் வெளிப்படையாகவே சொன்னதாக தகவல்.

போதாதற்கு, அங்கு போர்க்குற்ற விசாரணை பற்றி கதைக்கப்பட்டதே, நீங்கள் கவனிக்கவில்லையா என்றும் கூட்டமைப்பு தலைமை கேட்டு வைத்துள்ளது.

இப்போது சரா எம்.பிக்கும், உதயன் பத்திரிகைக்கும் பயங்கர குழப்பம். ரணிலுடனான சந்திப்பில் போர்க்குற்ற விசாரணை பற்றி பேசப்பட்டதா?

அன்றைய சந்திப்பிற்கு சென்ற எல்லா எம்.பிக்களையும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் உதயன் பத்திரிகை செய்தியாளர்கள், போர்க்குற்ற விசாரணை பற்றி பேசப்பட்டதா என கேட்டு வருகிறார்கள். இப்போது பல எம்.பிக்களிற்கு குழப்பம். இதுவரை பேசப்படவில்லையென்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். பேசினோம் என தலைமை அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ளதால், தாங்கள்தான் அதை கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என தலையை சொறிகிறார்கள். இதனால் உதயன் செய்தியாளர்களிற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. “மூன்று பேர் பேசப்படவில்லையென்று சொல்கிறார்கள். நன்றாக யோசித்து பாருங்கள்“ என எம்.பிக்களிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் செய்தியாளர்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு நாடாளுமன்றம் கூடியது. சரா எம்.பியும் மிக பவ்வியமாக வந்து இருந்து விட்டு போகிறாராம்.

அதாவது மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் அவர் சங்கடப்படுவதாக சொல்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here