அமைச்சர் ஓ.எஸ்.மணியனை வெட்ட அரிவாளுடன் பாய்ந்த வாலிபர்; வீடியோவால் பரபரப்பு

கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ். மணியன் காரை வழிமறித்து தாக்கியதுடன் அவரை வெட்டுவதற்காக அரிவாளுடன் ஒரு வாலிபர் பாய்ந்து செல்வதைபோன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பகுதி மிகவும் சேதம் அடைந்தது. புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 18-ந் தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் அ.தி.மு.க.வினர் ஒரு காரில் பார்வையிடுவதற்காக சென்றன்ர். அந்த காரை மயிலாடுதுறை வில்லியநல்லூரை சேர்ந்த வீரமணி என்பவர் ஓட்டி சென்றார்.

அப்போது விழுந்தமாவடி கன்னித்தோப்பு அருகே அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சிலர் அமைச்சர் சென்ற காரை வழிமறித்து அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார், 5 பேருக்கு மேல் கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடத்துவது(147, 148) காமகுரோதமாக திட்டுவது(294/பி) வழிமறிப்பது(341), கொலை முயற்சி(307), பொது சொத்துகளை சேதப்படுத்துதல்(பி.பி.டி. சட்டம்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தி விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்த மனோகரன்(வயது 53), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கவியரசன்(30), கன்னித்தோப்பு பகுதியை சேர்ந்த வட்டிக்கடை ராமச்சந்திரன்(30) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று விழுந்தமாவடி வடக்கு மணல்மேட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மகன்கள் தங்கம் என்ற வீரசேகரன்(30), பன்னீர்செல்வம்(29) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் சென்ற காரை சிலர் வழிமறித்து தாக்குவதும், அமைச்சரை வெட்டுவதற்காக அவரது காரை நோக்கி ஒரு வாலிபர் அரிவாளுடன் ஓடுவது போலவும் இதையடுத்து அமைச்சரின் கார் வேகமாக பின்னோக்கி சென்றதால் கோபமடைந்த அவர்கள் அமைச்சர் காருடன் வந்த மற்றொரு காரை அடித்து நொறுக்குவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ காட்சி தற்போது நாகை மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here