மக்களின் வரிப்பணத்தில் ஆடம்பர செலவு… சட்ட மீறலான திட்டங்கள்: யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டத்தின் முழுமையான ரிப்போர்ட்!

யாழ் மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தில் ஆடம்பர செலவுகள் அதிகமாக இருந்ததாக கூறி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

எதிர்ப்பையும் மீறி சமர்ப்பிக்கப்பட முயன்ற வரவு செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதால் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் முயற்சி தோல்வியடைந்தது. வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டதென ஈ.பிடி.பி அறிவித்துள்ளது. எனினும், வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படவில்லையென கூறியுள்ள யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட், வரும் புதன்கிழமை திருத்திய வடிவத்தை மீளவும் சமர்ப்பிப்பதாக கூறினார். திருத்திய வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது.

யாழ் மாநகரசபையின் இன்றைய அமர்வில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக முதல்வர் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார்.

எனினும், வரவு செலவு திட்டத்தில் ஆடம்பர செலவுகள் இருப்பதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சுமத்தி வந்தன. யாழ் மாநகரசபை வரலாற்றிலேயே இல்லாத விதமான ஆடம்பர செலவுகள் இடம்பெற்றுள்ளதாக அவை குற்றம் சுமத்தின.

மக்களிற்கு நெருக்கடி ஏற்படுத்தி வருமானத்தை பெற முயற்சித்து, ஆடம்பர செலவு எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. வருமான வழிகளாக காண்பிக்கப்பட்ட பல விடயங்கள் சாத்தியமில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சோலை வரியை அதிகரிப்பது (இரண்டு வீதம் அதிகரிக்கப்பட்டது), நீர் கட்டணத்தை இரட்டிப்பாக்குவது, யாழ் மாநகரசபைக்கு சொந்தமாக 196 வர்த்தக நிலையங்களை  20 வருடங்களிற்கான வாடகையை பெற்று அதை உரிமையாளர்களிற்கு உரிமம் மாற்றி கொடுப்பது போன்ற வழிகளால் வருமானம் அதிகமாக காண்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனை இன்று ஏற்றுக்கொண்ட முதல்வர், தனது வருமான வழிகளில் 35 வீதத்தை அடைய முடியாததென மாற்றம் செய்வதாகவும், வரவு செலவு திட்டத்தை ஆதரிக்குமாறும் கோரினார்.

எனினும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை. வருமான வழிகளில் மாற்றம் செய்தால், செலவிலும் மாற்றம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் முதல்வர் அதை ஏற்கவில்லை. வருமான வழிகளில் மாற்றம் செய்து, செலவீனங்களில் மாற்றம் செய்யாமல் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க முதல்வர் முயன்றார். எனினும், அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்க முடியவில்லை.

மாநகரசபையின் பண வரவு வழிகள் மக்களின் வரிப்பணத்திலே தங்கியுள்ளன. மக்களின் பணத்தில் பொறுப்பற்ற ஆடம்பர செலவுகள் செய்யாமலிருக்க வேண்டிய பொறுப்புணர்வு மக்கள் பிரதிநிதிகளிற்கு அவசியம். ஆனால் யாழ் மாநகரசபையிடம் அது இருக்கவில்லையென்பதே

இனறு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் சட்டவழுக்கள் நிறைந்திருந்தது. சோலை வரியை கூட்டுவது அல்லது குறைப்பது என்ற முடிவை மாநகரசபையால் தன்னிச்சையாக எடுக்க முடியா. மாகாண உள்ளூராட்சி அமைச்சரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். மாகாண நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுனரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனினும், ஆளுனரின் அனுமதி பெற்றிருக்கப்படவில்லை.

சட்டவிதிகளிற்கு மாறாக வெளிநாட்டு பயணத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதி தவிர்ந்த வேறு யாரும் அரச செலவில் வெளிநாடு செல்ல முடியாதென்ற சட்டவிதியுள்ளது. இதை கணக்கிலெடுக்காமல், யாழ் முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்திற்காக சுமார் ஒரு கோடி ரூபாவை ஒதுக்கினார். கடந்த வாரமே இந்த விவகாரம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, சில நாட்களின் முன் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களிற்கு சட்டவிதிகள் அடங்கிய கைநூலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவகம் வழங்கியிருந்தது. எனினும், அதையும் பொருட்படுத்தாமல், முதல்வரின் உல்லாச பயணத்திற்கு ஒரு கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

அதேபோல, வர்த்தக நிலையங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் மாநகரசபையின் முடிவும் சட்டவலுவற்றது. உள்ளூராட்சி சட்டவிதி 80:46 இன்படி, உள்ளூராட்சி அமைச்சரிடம் விண்ணப்பித்து, உள்ளூராட்சி அமைச்சர் மாகாண அமைச்சரவை வாரியத்தில் அதை சமர்ப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

இதையெல்லாம் கவனத்தில் எடுக்காமல் ஆடம்பர செலவுகளுடன் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதை கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் விரும்பவில்லையென தெரிகிறது. இது தொடர்பில் இன்று கட்சி உயர்மட்டத்திற்கு அவர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிகிறது. தமக்கு சில முறைப்பாடுகள் கிடைத்ததை உத்தியோகப்பற்றற்ற முறையில் கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவரும் தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தார்.

இந்த வரவு செலவு திட்டத்தில் மக்கள் நலன், அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதியை விட ஆடம்பர செலவுக்கு ஒதுக்கிய நிதி கூடுதலாக உள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது. வரவு செலவு திட்டத்தை திருத்தி, புதிதாக சமர்ப்பிக்க கோரியுள்ளதாக இன்று மாலை யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னணி அறிவித்தது.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரவு செலவு திட்டத்தை யாழ் மாநகரசபையில் எதிர்ப்பதென ஈ.பி.டி.பி சில வாரங்களின் முன்னர் முடிவெடுத்துள்ளதென்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்திருந்தது. யாழ் மாநகரசபையில் ஆட்சியமைக்கும்போது, ஈ.பி.டி.பியுடன் இரகசிய பேச்சு நடத்தி ஆரவை பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, பின்னர் தமது உறுப்பினர் குகேந்திரனின் இரட்டை குடியுரிமையை காரணம் காட்டி, அவரது மாநகரசபை உறுப்புரிமையை நீக்க வழக்கு தொடர்ந்தமைக்கு பதிலடியாக, வரவு செலவு திட்டத்தை எதிர்க்க முடிவு செய்துள்ளதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

யாழ்.மாநகர சபை செலவீன மதிப்பீடு 2019.
கடல் கடந்த பயிற்சி செலவு (முதல்வர், உறுப்பினர்கள்) 10, 000, 000.00
வாகன எரிபொருள் 12,000,000.00
தொலைத்தொடர்பு மற்றும் படிகள் (முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்) 10,000,000.00
வருட இறுதி நிகழ்வு 150,000.00
பொதுக்கூட்ட உபசரணை 300,000.00
முதல்வர் உபசரணை 500,000.00
தினக்குறிப்பு புத்தகம் 100,000.00
நினைவு சின்னம் வழங்கல் 100,000.00
உள்ளூரட்சி வாரம் 1,000,000.00
சட்ட ஆலோசகர் கொடுப்பனவு 500,000.00
புகையிரத ஆணைச்சீட்டு 1,500,000.00
நகர மண்டபம் , முதல்வர் வாசஸ்தலம் நிர்மாணிப்பு 125,000,000.00
ஊழியர் கடன் கொடுப்பனவு 100,000,000.00 (கொடுத்த கடன்கள் மீள் வசூலிக்காத நிலையில் புதிய கடன் கொடுப்பனவு)
மொத்த செலவீனம் 911,124,000.00

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here