தூக்கு மாட்டிய போட்டோவை காதலிக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்த காதலன்

காதலி பேச மறுத்ததால் மனவேதனை அடைந்த காதலன் வாட்சாப்பில் தான் தற்கொலை செய்யப்போவதாக பதிவிட்டு உயிரை மாய்த்த சோக சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் குருவாடி அருகே அவத்தாண்டை பகுதியைச் சேர்ந்த முத்திருளன் மகன் புகழேந்தி ராஜா (வயது 24). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த உறவினரின் மகளை காதலித்து வந்தார்.

இதற்கு அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண் கடந்த சில நாட்களாக அவரிடம் பேசவில்லை. காதலி பேச மறுத்ததால் புகழேந்திராஜா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கலைஞானபுரத்தில் உள்ள அவருடைய சித்தியின் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த மாதம் 28-ந் தேதி புகழேந்தி ராஜா, தனது சித்தியின் வீட்டில் இருந்து வெளியே சென்று மாயமானார். பின்னர் அவர், தன்னுடைய அண்ணன் முனியசாமியிடம் செல்போனில் பேசுகையில், உலகில் வாழ பிடிக்கவில்லை, எனவே தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்தார். இதுகுறித்து முனியசாமி, பெருநாழி போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

இதனால் போலீசார் அவரை தேடி வந்தார்கள். விளாத்திகுளம் போலீசுக்கும், இதுபற்றி தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விளாத்திகுளம் சுற்றுப்பகுதியில் தேடினார்கள் இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே கே.தங்கம்மாள்புரம் காட்டு பகுதியில் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் புகழேந்திராஜா தூக்கில் பிணமாக தொங்குவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு புகழேந்திராஜாவின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது. இதையடுத்து அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது செல்போனை போலீசார் பார்த்தனர். அதில் புகழேந்திராஜா தற்கொலை செய்யும் முன்பாக அவர் கழுத்தில் தூக்கு மாட்டியவாறு புகைப்படம் எடுத்து காதலியின் தோழிக்கு அனுப்பியுள்ளார்.

அதை தோழி புகழேந்திராஜா விளையாட்டாக இதுபோன்று அனுப்பியுள்ளதாக நினைத்துள்ளார். ஆனால் அதுவிபரீதமாக முடிந்துவிட்டது. இந்த விவரம் அறிந்த புகழேந்திராஜாவின் பெற்றோர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர்.

தற்கொலை செய்துகொண்ட புகழேந்திராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here