காதலனுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம்: வாட்ஸ்-அப்பில் பரவியதால் மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி காதலனுடன் கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வாட்ஸ்-அப் குழுவில் பரவியதால் அவமானம் தாங்காமல் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா(18). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மனஸ் தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதனால் ஜீவா செல்போன் மூலம் கண்ணனிடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் கண்ணன் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கார் ஒன்றில் கண்ணனும், ஜீவாவும் அமர்ந்திருக்கும் புகைப்படம் கிராமப் பகுதியில் இருக்கும் நண்பர்கள் குழுவுக்கு பரவியது. இந்தப் புகைப்படத்தை கண்ணனே பரப்பி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்த ஜீவாவின் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த ஜீவா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் பெற்றோர் இந்தச் சம்பவத்துக்கு கண்ணன்தான் காரணம் என்று கூறி மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஜீவாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியின் சாவுக்கு காரணமான கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த கிராம மக்கள் சுமார் 300 பேர் உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். முறையான விசாரணை நடத்தி புகார் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here