வடமாநில பெண் பலாத்கார வழக்கில் கைதானவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு

வடமாநில பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 4 இளைஞர்களுக்கு ஆதரவாக யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை நடத்துவதில்லை என கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணியில் சேருவதற்காக டெல்லியில் இருந்து கடந்த டிச.1-ம் தேதி இரவு, கும்பகோணத்துக்கு வந்த 25 வயது இளம்பெண் ஒருவர், கடத்திச் செல்லப்பட்டு 4 இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது புகாரின் பேரில், கும்பகோணம் மேற்கு போலீஸார் 4 இளைஞர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். அந்த இளைஞர்களுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இதற்கிடையில், கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் சங்கத் தலைவர் ஆர்.சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வட மாநில இளம்பெண் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் உரிய தண்டனை கிடைக்க வேண்டும். அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் வழக்கறிஞர்கள் யாரும் வழக்கில் ஆஜராகக் கூடாது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், நேற்று நீதிமன்ற பணிகளை வழக்கறிஞர்கள் அனைவரும் புறக்கணித்தனர்.

வடமாநில இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் எனக் கோரி கும்பகோணத்தில் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநரையும் கைது செய்ய வேண்டும்.

விடுதியில் தங்கிப் பணியாற்றி வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். போலீஸார் இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here