யேமனில் சமாதானம் குடிகொள்ளுமா?- பேச்சுவார்த்தை ஆரம்பம்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு யேமனில் மேலாக இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலான சமாதானப் பேச்சுவார்த்தை, யேமனின் அரசாங்க பிரதிநிதிகளுக்கும், ஹவுதி கிளர்ச்சிக் குழுவுக்கும் இடையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஆரம்பமாகியுள்ளது.

இதுவொரு முக்கியமான திருப்புமுனை என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதுவர் மார்ட்டின் கிரிஃபித்திஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக, கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தாவதுடன், ஆயிரக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைய செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வாரகாலம் நீடிக்கும் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு யேமன் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே ஐக்கிய நாடுகள் சபை அணியினர் மிக நெருக்கமாக பணிபுரிந்துள்ளனர்.

அண்மைக் காலமாக உலகில் மிக மோசமான மனிதநேய நெருக்கடி உருவாகுவதற்கு யேமன் போர் முக்கிய காரணமாகியுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மில்லியன் கணக்கானோர் பசி, பட்டினியால் துன்புற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். பேச்சுவார்த்தைகள் கடந்த 2016ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக தற்போது ஆரம்பமாகியுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகளில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததால் கடந்த செப்டம்பர் மாதம் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட அமைதி முயற்சி தோல்வியடைந்தது. தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பெரிய திருப்புமுனை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

இருந்த போதும், இந்த அமர்வில் ஆயிரகணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ள செங்கடலில் உள்ள ஹுடைடா துறைமுக நகரில் ஏற்படும் முழுமையான போரை தடுக்கும் முக்கிய நோக்கம் உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

யேமனில் ஏற்படும் எதிர்கால அரசியல் தீர்வுக்கு பேச்சுவார்த்தை திட்டத்தை ஐக்கிய நாடுகள் அவை கொண்டுவரும் என்றும் நம்பப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கும் முக்கிய தருணத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்று  ஐநா தூதுவர் கிரிஃபித்திஸ் தெரிவித்துள்ளார்.

இந்த அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர், ஹுடேடாவில் இருந்து கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி, கட்டுப்பாட்டை அரசிடம் வழங்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவிட்டு யேமன் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, இந்த பேச்சுவார்த்தைகள் சானாவிலுள்ள விமானநிலையத்தை எல்லா பயணியர் விமான போக்குவரத்துக்கும் திறக்க வேண்டும், இல்லாவிட்டால், இந்த விமான நிலையத்திற்கு வருகின்ற ஐக்கிய நாடுகளின் விமானங்களை நிறுத்தப்போவதாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

போர் காரணமாக இந்த விமான நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானாவையும், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அரசு நாட்டின் தெற்கில் அமைந்துள்ள ஏடன் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here