இரணைமடுவை இன்று திறக்கிறார் மைத்திரி: அரசியல் குழப்பத்தின் பின்னர் முதன்முறையாக வடக்கு வருகிறார்!

கோப்பு படம்- மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் மைத்திரி

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறப்பதற்காக இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஒக்ரோபர் 26 அரசியல் குழப்பங்களின் பின்னர், ஜனாதிபதி வடக்கிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

புரமைக்கப்பட்ட இரணைமடு குளத்தில் முதல் தடவையாக 36 அடி நீர் தேக்கப்பட்டுள்ளது. வான் பாயும் நிலைமை ஏற்பட்டதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு விவசாயிகளின் தேவைக்காக நீரை திறந்துவிடும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார்.

இரணைமடு குளத்தை புனரமைப்பதற்கான முதலாவது முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.யாழ்- கிளிநொச்சி குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் இரணைமடுவை புனரமைக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இரணைமடு குளத்தை புனரமைத்து கொள்ளளவை அதிகரித்தல், யாழ்- கிளிநொச்சி குடிநீர் வழங்கல் திட்டம், யாழ் மாநக பாதாள சாக்கடைத் திட்டம் என மூன்று பகுதிகளாக இது திட்டமிடப்பட்டது.

2007 ஜூலை 13ம் திகதி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபைக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கிக்குமிடையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. எனினும், போர் தீவிரம் பெற்றதையடுத்து, திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

போரின் பின்னர் அதே திட்டம் ஆரம்பிக்கப்படவிருந்தபோதும், யாழ்ப்பாண குடிநீர் திட்டத்திற்கு அரசியல் பின்னணியில் கிளிநொச்சியில் எதிர்ப்பு போராட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதையடுத்து, திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, இரணைமடுவை புனரமைத்து கொள்ளளவை அதிகரிப்பதை மட்டும் நிறைவேற்றுவதென முடிவானது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,130 மில்லியன் ரூபா செலவில், 2016இல் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2018 ஓகஸ்டில் புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்றன.

புனரமைப்பிற்கு முன்னர் 34 அடி நீரை தேக்கிய இரணைமடுவில் தற்போது, 36 அடி நீரை தேக்க முடிகிறது.

இதுவரை காலமும் 1 இலட்சத்து 6,500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது 1 இலட்சத்து 19,500 ஏக்கர் அடியாக (147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 26ம் திகதி அரசியல் குழப்பத்திற்கு பின்னர், இன்றுதான் முதன்முறையாக ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here