உலகச் சாளரத்தினூடாக…!

தேசமித்ரன்

ரோஹின்யா மக்கள் எப்போது திரும்பிப் போவார்கள்?

இவ்வருட ஆரம்பத்தில் மியான்மாருக்கும், பங்களாதேஷுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இவ்வருட இறுதியில் பங்களாதேஷில் அடைக்கலம் தேடிவந்த சுமார் 720,000 ரோஹின்யா இன அகதிகளை மியான்மாருக்குத் திருப்பியனுப்புவது ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அவர்களை மீண்டும் மியான்மாருக்குத் திருப்பியனுப்பும் அளவுக்கு நிலைமை மியான்மாரில் உண்டாகவில்லை என்று குறிப்பிடுகிறது ஐ.நா-வின் அறிக்கை. அதனால், அவர்களைத் திருப்பியனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டிருக்கும் ஐ.நா-அறிக்கை மியான்மார் அரசு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் தனது இராணுவத்தைத் தூண்டிவிட்டுத்தான் ரோஹின்யா இனத்தவரை நாட்டிலிருந்து வெளியேற வைத்தது என்று தெளிவாகச் சொல்கிறது. கற்பழிப்பு, பாலியல் அடிமைத்தனம், கூட்டுக் கொலைகள், கிராமங்களை எரித்தல் போன்றவைகளில் மியான்மார் இராணுவம் ஈடுபட்டது என்று வெளிப்படுத்துகிறது அந்த அறிக்கை. குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

பங்களாதேஷ் தனது நாட்டுக்குள் வந்திருக்கும் அகதிகளுக்கான உதவிகளைச் செய்யமுடியாமல் திணறிவருகிறது. பல நாடுகளின் உதவிகளுடன் பல அகதிகள் முகாம்கள் கட்டப்பட்டாலும் நிலைமை மிகவும் மோசமாகவே இருப்பதாகப் பல உதவி அமைப்புக்கச் சுட்டிக் காட்டுகின்றன. தனது நாட்டு நிலைமையை அறிந்த பங்களாதேஷ் அரசு அந்த அகதிகளைக் கூடிய விரைவில் மியான்மாருக்குத் திருப்பியனுப்பவே விரும்புகிறது.

இன்னொரு பக்கம் மியான்மாரின் தலைவியான அமைதிப் பரிசுபெற்ற ஔங் சான் சூ ஷீ.யும் மியான்மாரின் அரசும், இராணுவத் தலைமையும் தமது நடவடிக்கைகளுக்காகப் பெரும் சர்வதேச விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. அதனால், அவர்களும் ரோஹின்யா மக்களை விரைவில் திரும்பித் தமது நாட்டுக்குள் கொண்டுவருவதை விரும்புவதாகத் தெரிகிறது.

ஆனால், மியான்மாரில் தொடர்ந்தும் வாழும் சுமார் 400,000 ரோஹின்யா மக்கள் மீதான கொடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துவருவதாகப் பல மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. நாட்டுக்குள் ஐ.நா-வின் மனிதாபிமானக் குழுவினர் வந்து நிலைமையைப் பார்வையிடம் மியான்மார் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.

பங்களாதேஷில் அகதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோரும் மீண்டும் தமது நாடான மியான்மாருக்குத் திரும்பிப் போவதையே விரும்புவதாகப் பல கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமையில் அவர்களின் அந்தக் கனவு நிறைவேறும் காலம் மிகத் தூரத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது.

மலசலகூடங்களும் சுகாதாரமும்

மலசலகூடங்கள் இல்லாமை உலகின் வறிய நாடுகளில் சுகாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளை உண்டாக்கிவருகின்றது. இதனால் ஏற்படும் விளைவுகளால் மில்லியன் கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்படியான பகுதிகள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் மிகவும் வறிய ஆனால் மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கும் பாகங்களிலேயே அதிகமாக இருக்கின்றன.

ஐ.நா-வின் ஆராய்வு அறிக்கையின்படி, உலகின் சுமார் 20 விகிதமான ஆரம்பப் பாடசாலைகளும் சுமார் 12 விகிதமான இரண்டாம் மட்டப் பாடசாலைகளும் மலசலகூட வசதியின்றி இருக்கின்றன. ஆபிரிக்காவின் சகாரா பிராந்தியத்தில் சுமார் 344 மில்லியன் பிள்ளைகளின் வீடுகளில் மலசலகூடங்கள் இல்லை.

உலகின் 4.5 மில்லியன் மக்கள் தமது பாவனைக்கு வசதியான மலசலகூடங்கள் இன்றி வாழ்கிறார்கள். எத்தியோப்பியாவின் 93 விகிதமான வீடுகளில் பாவனைக்கு மலசலகூடங்கள் இல்லை.

மலசலகூட வசதிகளில்லாத பகுதிகளில் வாழும் மக்கள் வீதியோரங்களிலும், நீர் நிலைகளின் அருகிலும் தமது இயற்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறார்கள். இதன் விளைவாகப் பல வியாதிகள் பரவிப் பலரின் உயிரைக் குடிக்கும் நிலைமையும் சாதாரணமானதே.

ஐக்கிய நாடுகள் சபையின் 2015 இன் சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக 2030 இல் உலகின் சகலரும் பாவிப்பதற்கு உகந்த மலசலகூட வசதியுள்ளவராகவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமையில் அந்தக் குறியை எட்டமுடியாது என்றோ தோன்றுவதாக ஐ.நா குறிப்பிடுகிறது. அதன் முக்கிய காரணம், பெரும்பாலான வறிய நாடுகளின் அரசுகள் தமது பொருளாதார நிலைமை கருதி, அதைத் தங்களில் முக்கிய குறிகளில் ஒன்றாகத் திட்டமிடாமல் இருப்பதே என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மரபணு மாற்றத்துடன் சீனக் குழந்தைகள்

மருத்துவ உலகத்தைத் திடுக்கிடவைக்கும் ஒரு செய்தியாக மரபணுக்கள் மாற்றம்\திருத்தம் செய்யப்பட்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஷே ஷுவாங்குயி என்ற சீனாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ஒருவர் எட்டுத் தம்பதிகளுக்கு மருத்துவப் பரீட்சைகள் செய்து அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லூலு, நானா என்ற அக்குழந்தைகளில் ஒருவருக்கும் மரபணு மாற்றம் முழுவதுமாக வெற்றியடைந்திருப்பதாகவும் மற்றப் பெண் குழந்தையில் பகுதி மரபணு மாற்றங்கள் மட்டுமே வெற்றியடைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

வழக்கமாக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்கள் சர்வதேச மருத்துவச் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டபின் ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டங்களும் மருத்துவக் கண்காணிப்புக் குழுவின் பரிசீலனைகளுடனேயே நடாத்தப்படுவது வழக்கம். ஆனால், இக்குழந்தைகள் மரபணு மாற்றங்கள் செய்து பிறந்துள்ளதாக மட்டும் செய்திகள் வெளியாகியிருப்பதுடன், தென்கிழக்குச் சீனாவில் சென்சேன் பிராந்தியத்தில் பணியாற்றிவரும் ஷே ஷுவாங்குயி விடுமுறையில் போயிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. அந்த ஆராய்ச்சியாளர் அவ்விடயத்தை ஹொங் கொங்கில் நடந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மாநாட்டில் வெளியிட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

CRISPR/Cas 9 என்று குறிப்பிடப்படும் இந்த மருத்துவ நுட்பம் ஏற்கனவே  மரபணுக்களில் மாற்றங்கள் செய்து மனிதக் குழந்தைகளைப் பெறவைப்பது மிகவும் ஆபத்தான விடயமாகப் பெரும்பாலான விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு வருகிறது. இப்படியான குழந்தைகளுக்கு வரும் வியாதிகள், பிழைகள் எதையும் பின்பு திருத்தமுடியாது என்று குறிப்பிடப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியின் குறி அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் எய்ட்ஸ் நோய் வராமலிருக்கச் செய்வது என்று குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் மனிதர்கள் மீதான மரபணு மாற்ற நடவடிக்கைகள் மனித நெறிகளுக்கு எதிரானவை என்ற கருத்தே பெரும்பாலான நாடுகளில் இருக்கிறது. அதனால், இப்படியான மனிதப் பரீட்சைகளை சட்டங்கள் பெரும்பாலான நாடுகளில் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. சீனாவில் கூட இப்படியான விஞ்ஞானப் பரீட்சைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை.

சீனாவில் இது நடந்தேறியிருப்பது உண்மையா, அப்படியானால் ஐரோப்பிய, அமெரிக்கர்களைப் பின் தள்ளிவிட்டுச் சீனா இவ்விடயத்தில் இரகசியமாக முன்னேறியிருக்கிறதா?

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here