முல்லைத்தீவில் அமைதிப் பேரணி!

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் என்ற பெயரில் ஒரு அமைப்பால் இன்று அமைதிப் பேரணியொன்று நடத்தப்பட்டது. நாட்டில் நிலவும் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படக்கூடாது என வலியுறுத்தியே பேரணி இடம்பெற்றது.

வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டதை கண்டித்தேன இந்த பேரணி இடம்பெற்றது. பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில், கைவேலியில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு மனு கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் தொடர்ந்தால் நாம் அமைதியான வாழ்வை இழந்து விடுவோம்,
மீண்டும் சோதனைச் சாவடிகள் எம்மை சோதனையிடும் நிலை வருமா?, சுற்றிவளைப்புக்களும் விசாரணைகளும் கைது நடவடிக்கைகளும்,மீண்டும் எமக்கு வேண்டுமா?, அரசுக்கு எதிரான வன்முறைகள் எமக்கு வேண்டுமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்றலை சென்றடைந்ததும், பிரதேச செயலாளருக்கான அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில்- “தற்போது அரசிற்கு எதிரான ஆயுத வன்முறைகள், சில முகம் தெரியாத அணிகளால், சில புலம்பெயர் சக்திகளின் துணையுடன் புலிச்சாயம் பூசப்பட்டு மேற்கொள்ளப்படுதல் கண்கூடு. இந்த நிலமை தொடருமானால் மீண்டும் நாம் போர்ச்சூழலுக்குள் தள்ளப்படுவோம். கடந்து வந்த உயிர்வலிக்கும் கொடூரமான இரத்தக்கறை படிந்த வலிகளை மீண்டும் காணவும் நேரிடும்என்ற துக்கம் எம்மை ஆட்கொண்டுள்ளது.

அரசிற்கு எதிரான ஆயுத வன்முறையினை தூண்டுபவர்கள் யாராயினும் உரியமுறையில் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படவேண்டும். தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். நாட்டின் அமைதியை நிலைநாட்டி எம் அமைதியான இயல்பு வாழ்க்கையினை உறுதிப்படுத்துமாறு அரசை கேட்டுக்கொள்கின்றோம்“ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்த போராட்டத்தில் சிவில் உடையிலிருந்த பாதுகாப்பு தரப்பினரையும் அவதானிக்க முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here