‘நெல்’ ஜெயராமனின் இறுதிக்கட்ட செலவுகளையும் ஏற்றார் சிவகார்த்திகேயன்

மறைந்த ‘நெல்’ ஜெயராமன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் செலவையும் ஏற்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ‘நெல்’ ஜெயராமன். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று (டிசம்பர் 6) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 50.

இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடங்கி, அனைத்து சிகிச்சை செலவுகளை செய்து வந்தார் சிவகார்த்திகேயன். மேலும் சூரி, சத்யராஜ், கார்த்தி உள்ளிட்டோரும் அவருக்கு உதவிகளைச் செய்து வந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது சிகிச்சைக்கு உதவினர்.

‘நெல்’ ஜெயராமன் காலமான தகவல் சிவகார்த்திகேயனுக்குச் சொல்லப்பட்டது. அவர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்காக வெளிநாட்டு படப்பிடிப்பில் இருக்கிறார். இத்தகவலைக் கேட்டு மிகவும் வேதனையடைந்துள்ளார்.

மேலும், எப்படி அவரை ஊரிலிருந்து அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தார்களோ, அதேபோல் இங்கிருந்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும் மொத்த செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இருப்பதால், அவருடைய அலுவலகத்தைச் சார்ந்தவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இறுதிச் சடங்கு நடக்கும் வரை, கூடவே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தன் நண்பர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்

‘நெல்’ ஜெயராமனுக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. அதையும் அவர்களது குடும்பத்துக்கு கொடுத்துவிடுங்கள், மருத்துவமனை செலவும் என்னுடையதாகவே இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அவர் காலமானதுக்குப் பிறகு, மருத்துவமனையில் கட்ட வேண்டிய இதர தொகை அனைத்தையும் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது ‘நெல்’ ஜெயராமனின் உடல் தேனாம்பேட்டையில் பிரபலங்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

முன்னதாக, ‘நெல்’ ஜெயராமன் மகனின் ஒட்டுமொத்த படிப்புச் செலவையும் சிவகார்த்திகேயன் ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here