நிதிஷ் குமார் தலைமையிலான பிஹாரின் தேஜகூ அரசுக்கு லாலு மகன் தேஜஸ்வி யாதவ்வின் அதிகாரப்பூர்வ பங்களா விவகாரத்தில் தோல்வி ஏற்பட்டது. பங்களாவிலிருந்து தேஜஸ்வியை காலி செய்ய வைக்கும் முயற்சி ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்களின் கடும் போராட்டத்தினால் படுதோல்வி அடைந்தது.
லாலு மகன் தேஜஸ்வி ஊரில் இல்லாத சமயத்தில், அவர் டெல்லி சென்றிருக்கும் சமயத்தில் நேற்று 5, தேஷ்ரத்னா மார்க் பங்களாவுக்கு அதிகாரிகள் படை வந்தது. ஆனால் இது பழிவாங்கும் அரசியல் என ஆர்ஜேடி எம்.எல்.ஏ.க்கள் பங்களா கேட் அருகே சாலையில் அப்படியே உட்கார்ந்து நிதிஷ் குமார் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாமல் திகைத்தனர். பிறகு இந்த வழக்கு பாட்னா உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று அறிவுறுத்தப்பட காலி செய்ய வைக்க வந்த அதிகாரிகள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.
தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த போது அவருக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவாகும் இது. தற்போது துணை முதல்வராக இருக்கும் சுசில் குமார் மோடியை அங்கு குடியமர்த்துவதற்காக தேஜஸ்வியைக் காலி செய்ய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேஜஸ்வி காலி செய்ய மறுத்து அரசு உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் பாட்னா திரும்பிய தேஜஸ்வி கூறும்போது, “நிதிஷ் குமார் என்ன வேண்டுமானாலும் செய்வார். என் வீட்டுக்கு எதிரே சிசிடிவி கேமரா வைத்துள்ளார். அரசியல் கூட்டணிகளை சந்தர்பவாதமாக மாற்றுவார், குற்றவாளிகளை அரவணைப்பார்… இவர் பெயர்தான் நிதிஷ் குமார். அவர் ஏன் என்னைப்போன்ற இளம் அரசியல் தலைவர்கள் மீது இவ்வளவு வெறுப்புடனும் பொறாமையுடனும் இருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை.
ஆனால் ஆர்ஜேடியின் மறியல் போராட்டத்தை ஐக்கிய ஜனதாதளம் கேலி செய்யும் விதமாக லாலு ஆட்சியை இழந்த பிறகும் தன் முதல்வர் இல்லத்தைக் காலி செய்ய 8 மாதங்கள் எடுத்துக் கொண்டார், ஆகவே இது அவர்கள் குடும்பத்தின் வழிவழியாக இருக்கும் நோய் இது. அதாவது பொதுச்சொத்து மேல் இருக்கும் பிரியம் என்று விளாசியுள்ளது.