காரியத்தில் கண்ணாக இருந்த ரெலோ!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 4ம் திகதி கொழும்பில் நடந்தது. அன்றிரவே, கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.

ஐந்து நிபந்தனைகளுடன் சென்ற ரெலோ, அங்கு அதை எப்படி வலியுறுத்தியது, தமிழரசுக்கட்சி தலைவர்கள் அதற்கு என்ன பதிலளித்தார்கள் என்பதை குறிப்பிட்டிருந்தோம்.

கூட்டம் நிறைவடைந்ததுமே, சந்திப்பில் கலந்து கொண்ட ரெலோவின் மூத்த பிரமுகர் ஒருவருடன் பேசினோம். அவர் சந்திப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை தெரிவித்திருந்தார்.

“ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் வாக்குறுதி வாங்க வேண்டுமென கேட்டோம். ஆனால், அதைப்பற்றி பேசிய சிறிகாந்தா அன்று வழக்கமான கறார் தொனியில் பேசவில்லை. அவருக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. அதனாலும் இருக்கலாம். நீண்ட விளக்கம் அளித்தார். ஆனால், முன்னரே சொல்லப்பட்டதை போல, கறாராக- ஐந்து நிபந்தனைகளில் அழுத்தம் திருத்தமான முடிவை காண்பதை போல- அவர்  பேசவில்லை.

ரணிலிடம் எழுத்துமூல உறுதிமொழி தேவையென வலியுறுத்தினோம். ஆனால், இரா.சம்பந்தன் அதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ரணில் விக்கிரமசிங்கவை தோல்வியடைய செய்யும் வேலைகளை செய்யத் தேவையில்லையென்றார். இந்த விடயங்களை காதும் காதும் வைத்ததை போல செய்ய வேண்டுமே தவிர, கூட்டம் போட்டு சொல்லிக் கொண்டிருக்க கூடாது என்றார்.

எழுத்துமூல உறுதிமொழியை நாம் (ரெலோ) வலியுறுத்தினோம். ஆனால் புளொட் பிரதிநிதிகள் இது பற்றி வாயே திறக்கவில்லை. அவர்கள் இரா.சம்பந்தனின் நிலைப்பாட்டிற்கு சார்பாக, மௌனமாக இருந்து விட்டனர். அதனால் ஓரளவிற்கு மேல் வலியுறுத்த முடியவில்லை“ என்றார்.

இந்த தகவல்களையெல்லாம், 4ம் திகதி இரவு தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. அந்த செய்தியில், “ஐந்து நிபந்தனைகள் விடயத்துடன், வேறு சில விடயங்களும் ஆராயப்பட்டன“ என குறிப்பிட்டிருந்தோம். அப்போது தகவல் தந்த பிரமுகரின் வேண்டுகோளின்படி, அந்த “வேறு சில விடயங்கள்“ என்னவென்பதை வெளியிடவில்லை. இப்போது அதை குறிப்பிடுகிறோம்.

வழக்கம் போல, ரெலோவிற்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டையே வலியுறுத்தினர்.

இந்த தேசியப்பட்டியல் ஆசனத்திற்காகத்தான் ரெலோ, கறாரான ஐந்து நிபந்தனைகள் என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கியதோ என்ற சந்தேகமும் தமிழரசுக்கட்சி வட்டாரத்தில் இருப்பதை அறிய முடிகிறது.

ஆனால், தேசியப்பட்டியல் விவகாரத்தில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை. நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படவுள்ளது போல தெரிகிறது, இந்த நிலையில் நாம் வீணாக இதைப்பற்றி கதைத்து நேரத்தை செலவிட வேண்டுமா என கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றைய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட்டாக சொல்லியுள்ளனர்.

என்றாலும் ரெலோ விடவில்லை. அது கலைக்கப்பட்டாலும் பரவாயில்லை, இப்போதே கதைத்து முடிவொன்றை எடுத்து விடுவோம் என வலியுறுத்தியது. ஆனால், அடுத்த சந்திப்பில் இதை பேசலாமென மற்றைய கட்சிகள் குறிப்பிட்டதால், இந்த விடயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மீண்டும் கூடுகிறது. நாளை பேசப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here