தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் ஆயுதம் உள்ளது; முன்னாள் போராளிகளை நாடு கடத்தி விடுங்கள்: புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கதறல்!

“வவுணதீவு கொலை சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் மீது பழி போடுவது அபாணடமான செயல். சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். என்ன சம்பவம் நடந்தாலும் முன்னாள் போராளிகளை குற்றம்சாட்டுவது சரியல்ல. முன்னாள் போராளிகள் இந்த நாட்டில் இருக்க முடியாதென்றால், எங்களை நாடு கடத்தி விடுங்கள்.

கிழக்கிலுள்ள ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். கிழக்கில் பல குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன“ என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளான ரெலோ, புளொட்டிடமும் ஆயுதங்கள் உள்ளன என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு, கல்லடியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பொன்று நேற்று முன்தினம் (03) மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் க.இன்பராஜா, ஊடகப்பேச்சாளர் ஜோன்சன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையிலேயே இப்படி கூறினார்கள்.

கடந்த மாதம் 30ம் திகதி வவுணதீவில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிசாருக்கும் அஞசலி செலுத்திய பின்னர் இருவரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்-

“கிழக்கு மாகாணத்தில் கருணா குழு, பிள்ளையான் குழு, புளெட், ரெலோ, ஜிகாத் முஸ்லிம் ஆயுதக்குழு உள்ளிட்ட அனைவரிடமும் ஆயுதங்கள் உண்டு. அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவர்களது ஆயுதங்களே வவுணதீவு போன்ற சம்பவங்களுக்கு காரணமாக உள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இப்போது முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பங்களும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது“ என தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தமது கட்சி கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் சிலர் மாவீரர் தினத்தின் போது செய்யும் சில நடவடிக்கைகளே இவ்வாறான செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்தர்.

“முன்னாள் போராளிகள் மீண்டும் ஆயுதம் தூக்கி போராடக்கூடிய மனநிலையில் இல்லை. யாரையும் சுட்டுக்கொல்ல வேண்டிய தேவையும் இல்லை. முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீது சந்தேகம் கொண்டு அவர்களை கைது செய்வதை பாதுகாப்பு தரப்பினர் கைவிட்டு விட்டு வவுணதீவு சம்பவத்துடன் தொடர்பு பட்ட உண்மையான குற்றவாளிகளை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்ய வேண்டும்.

குறித்த சம்பவம் தொடர்பான நீதியானதும் உண்மையை கண்டுபிடிக்க கூடிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் . தற்போது முன்னாள் போராளிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் முன்னாள் போராளிகளுடன் பேச அச்சப்படுகின்றனர்.

வவுணதீவு சம்பவத்திற்கும் முன்னாள் போராளிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு யாரையும் கொல்ல வேண்டிய தேவையில்லை. அவர் மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் எதற்கெடுத்தாலும் முன்னாள் போராளிகளையே கைது செய்கின்ற நிலை காணப்படுகிறது. இந்த நாட்டிற்கு பிரச்சினை முன்னாள் போராளிகள் தான் என்றால் அவர்களை நாடு கடத்தி விடுங்கள். முன்னாள் போராளிகள் ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாக தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்
என்பதற்காகவே நாங்கள் அரசியல் கட்சியை பதிவு செய்தோம்.

ஆனால் நாங்கள் அரசியல் ரீதியாக கூட இந்த நாட்டில் செயற்பட முடியாது உள்ளது. கடந்த முதலாம் திகதி- வவுணதீவு சம்பவத்தில் எமது அமைப்பை சேர்ந்த ஒருவர் கைதாகியதை அறிந்து மட்டக்களப்பிற்கு வாகனத்தில் வந்தோம். காட்டுகந்தோரில் குற்றப்புலனாய்வு பிரிவுடன் பேசிவிட்டு, திரும்பி செல்லும்போது, சைரன் பூட்டிய வாகனங்களில் எம்மை விரட்டி வந்த காத்தான்குடி பொலிசார், தீவிரவாதிகளை கைது செய்வது போன்று சுற்றிவளைத்து எம்மை கைது செய்து வாகனத்திற்குள் தள்ளி ஏற்றினார்கள்.

எமது கட்சி அடையாள அட்டையை காட்டியும் எம்மை குற்றவாளிகளை போல் நடத்தினர். எமது கையடக்க தொலைபேசிகள், கணனிகளை பறித்து சோதனையிட்ட பின்னரே திருப்பி தந்தனர்“ என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here