அங்கு இந்திரா காந்தியெனில் இங்கு ஜெயலலிதா-இரும்புமனுசி

“பல நரகங்களைத் கடந்தே இந்த இடத்துக்கு வந்துள்ளேன்“ என்ற வாசகம் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஜெயலலிதா அடிக்கடி கூறிக்கொள்வதாகும்.

ஆம்..இன்று இந்தியாவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளாகும். டெல்லியில் இந்திராகாந்தி இரும்புமனுசி என்றால் தமிழகத்தில் ஜெயலலிதா எனலாம்.

அ.தி.மு.க தொண்டர்களால் என அம்மா அழைக்கப்படும் ஜெயலலிதா, கடந்த 1948 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி மாண்டியா மாவட்டம் மெலுகோடேவில் பிறந்தார்.

இவருக்கு முதலில் பெற்றோர் இட்ட பெயர் அவரது  பாட்டியின் பெயரான ‘கோமலவல்லி’ என்பதாகும். ஆனால் பின்னர் ஒரு வயதில் ஜெயலலிதா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கு அவர் வசித்த வீடே காரணம். அவரின் குடும்பத்திற்கு இரண்டு வீடுகள் இருந்தன. ஒன்று ‘ஜெயவிலாஸ்’ மற்றொரு வீட்டின் பெயர் ‘லலிதா விலாஸ்’ என்பதாகும். இதனை சேர்த்துதான் ஜெயலலிதா என்று பெயர் சூட்டப்பட்டது.

கல்வி நிலை

ஜெயலலிதா புனித வளனார் பாடசாலையில் கல்வி கற்றார். இவர் தனது பத்தாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். அத்தோடு சரளமாக தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளைப் பேசக்கூடியவர் என்பது சிறப்பு.

தமிழ் அவரது தாய்மொழி ஆனால் ஏனைய மொழிகளையும் சந்தர்ப்பங்களுக்கு அமய கற்றுக்கொண்டவர் ஜெயலலிதா. அதுமட்டுமின்றி சிறு பராயத்தில் எஸ்.ஜே. சரஸா என்ற சிறந்த ஆசிரியரிடம் பரதம் பயில தொடங்கினார்.

பரதத்தில் அலாதி பிரியம் கொண்ட ஜெயலலிதா  1960 ஆம் ஆண்டு மே மாதம், மைலாப்பூர் ரசிக ரஞ்சினி சபாவில் நடன அரங்கேற்றம் செய்தார்.

இவரின் அரங்கேற்றத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவாஜி கணேசன் பங்கேற்றார். ஜெயலலிதாவின் நடனத்தைப் பார்த்து வியந்த சிவாஜி, ஜெயலலிதாவுக்கு திரைப்படத்துறையில் நல்ல எதிர்காலம் இருப்பதாக அவரின் தாய் சந்தியாவிடம் கூறினார். ஆனால், அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

நடனம் மட்டுமல்ல இசையிலும் தேர்ச்சி பெற்றவர் ஜெயலலிதா. கிளாசிக்கல் மியூசிக், மேற்கத்திய இசை தெரியும். பியானோ வாசிக்கவும் பயின்றவர்.

இறுதி வரை வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் சிறந்த அறிவுடையவரும் கலைஞரமாவார்.

சினிமா துறையில்

ஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பம் இல்லாமல் இருந்தாலும், திரைப்படத்துறை அவரை விடுவதாக இல்லை.

ஆம், ஒரு முறை சந்தியா தன்னுடன் ஜெயலலிதாவை திரைப்படத் தளத்துக்கு அழைத்துச் சென்றபோது இறைவி பார்வதியின் சிறு வயது வேடத்தில் நடிக்க நேரிட்டது.

பதின் பருவத்தில் ஜெயலலிதா கிரிக்கெட் வீரர் பட்டோடியின் தீவிரமான ரசிகர். தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான ‘சின்னட கொம்பே’ திரைப்படத்தில் அறிமுகமானார். படிப்பு எக்காராணத்தினாலும் கெடக்கூடாது. படப்பிடிப்பு பள்ளி விடுமுறை காலமான இரண்டு மாதத்தில் முடிய வேண்டும் ஆகிய நிபந்தனைகளை ஜெயலலிதாவின் அம்மா சந்தியா படப்பிடிப்பு குழுவுக்கு விதித்தார்.

ஜெயலலிதாவுக்கு சட்டத்தரணியாக வேண்டும், கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என பல சமயங்களில் பல கனவுகள் இருந்திருக்கின்றன.

ஆனால் அதையெல்லாம் திரைத்துறை புரட்டிப்போட்டது அவர் வாழ்வில்.  ஜெயலலிதா, 1965 – 1980 இடையேயான காலக்கட்டத்தில் தென் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார்.தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1972 ஆம் ஆண்டு பெற்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதா அசாத்திய தைரியம் கொண்டவர் என்பதற்கு அவர்திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலத்தில்  அளித்த ஒரு பேட்டி ஒன்று சிறந்த உதாரணமாகும்.

வார இதழ் ஒன்றுக்கு, “என் பூர்வீகம் தமிழகம். நான் தமிழச்சி” என்ற தொனியில் பேட்டியளித்திருந்தார்.

இந்த பேட்டி சில தீவிர கன்னட அமைப்புகளை கோபமடைய செய்தது. ஜெயலலிதா கர்நாடகாவுக்கு படப்பிடிப்புக்கு வரும்போது நூற்றுக்கணக்கானோர் அவரை முற்றுகை இட்டு அந்த பேட்டிக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள்.

ஆனால், ஜெயலலிதா மறுத்துவிட்டார். “நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் தமிழச்சிதான் என்று கூறியிருந்தார் என்பது அவரின் ஆரம்ப வரலாறு.

இவ்வாறு திரைத்துறையில் பிரபலமாக வலம் வந்த ஜெயலலிதாவை அத்துறையே அரசியலில் கொண்டு போய் நிறுத்தியது எனலாம்.

அரசியலில் அம்மா

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் 1982 ஆம் ஆண்டு இணைந்தார் ஜெயலலிதா. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக 1983 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அவர் அரசியலில் உச்சம் தொட்டப்பின் அவரை ‘அம்மா’ என்றே இறுதிவரை பலரும் அழைத்தனர். உள்ளூர் அரசியல் மட்டுமல்ல, உலக அரசியல நிலவரங்களையும் தொடக்கம் முதலே கூர்ந்து கவனித்தவர் ஜெயலலிதா.

ராஜ்ய சபாவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. இதே இருக்கைதான் சி.என். அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 1963 காலக்கட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்டது.எங்கு இருந்தாலும் தன்னை சுற்றி இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர் ஜெயலலிதா. ராஜ்ய சபாவில் அவருடைய கன்னிப் பேச்சு அனைவரையும் ஈர்த்தது.

ஒரு முறை கூட்டணி தொடர்பாக இந்திரா காந்திவுடன் பேச பத்திரிகையாளர் சோலைவுடன் ஜெயலலிதாவையும் அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர். இவர்களுக்கு இந்திரா காந்தி ஒதுக்கிய நேரம் வெறும் 10 நிமிடங்கள். ஆனால், அந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நீண்டது. அதற்கு ஒரே காரணம் ஜெயலலிதாவின் நாவன்மை ஆகும். 1984-ஆம் ஆண்டு மே மாதம் கொள்கைபரப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் எழுதினார் ஜெயலலிதா. ஆனால், இந்த ராஜினாமாவை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், பின் இந்த ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் அதிமுக நாடாளுமன்ற குழுவின் துணை தலைவராக ஜெயலலிதா இருந்தார். இதிலிருந்தும் ஜெயலலிதாவை நீக்கினார் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார்.

அதன் பின்னர் இவ்வாறே நீடித்த அரசியல் பயணத்தில் எம்.ஜி.ஆர் .உயிரிழக்க 1989ம் ஆண்டு தேர்தலில் 27 இடங்களை கைப்பற்றி ஜெயலலிதா தமிழகத்தின் முதல் எதிர்கட்சி தலைவர் ஆனார்.

அதன் பின்னர் தென் அரசியல் வாழ்வில் 5 முறை தமிழக முதல்வராக இருந்த இரும்பு மனுசி ஜெயலலிதா ஆவார்.

ஜெயலலிதா முதன்முறை முதல்வராக பொறுப்பேற்ற போது, அவர் சம்பளம் பெற மறுத்தார். “எனக்கு பல்வேறு விதங்களில் நல்ல வருமானம் வருகிறது. நான் மக்கள் சேவை செய்யதான் வந்துள்ளேன். எனக்கு சம்பளம் வேண்டாம்” என்றார். ஆனால், அரசாங்க ஊழியர் நிச்சயம் சம்பளம் பெற வேண்டும் என்ற அடிப்படையில் அவர் சம்பளமாக ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டார்.

பல தடவை ஊழல் வழக்கில் சிறை செல்ல நேரிட்டது இவருக்கு. ஆனால் எல்லாவற்றையும் கடந்து அரசியலில் நீடித்தார்.

எனினும் அவர் ஊழல் வழக்கில் சிறை செல்ல வேண்டி நேரிட்ட காலத்தில் அவருக்கு பதிலான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த காலகட்டத்திலி நோய்வாய்ப்பட்டு அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பயனின்றி அவர் டிசெம்பர் 5 ஆம் திகதி உயிரிழந்தார். இவரிக் மரணத்தின் பின்னர் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.

இவரின் மரணம் டிசெம்பர் 5 ஆம் திகதியா அல்லது 6 ஆம் திகதியா என்னும் சந்தேகங்களே நீடித்த நிலையில் தற்போதைய தமிழக அரசினால் விசாரணை குழு அமக்கப்பட்டு இன்னும் விசாரணைகள் நீடித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் கட்சிக்குள் பரிவுகள் நிகழ்ந்தது. ஓ.பி.எஸ் – ஈபி.எஸ் பிரிந்து மீண்டும் இணைந்தனர். அவரின் மரணத்தை தொடர்ந்து பதவியை பொறுப்பேற்ற சசிகலா அவர் இழைத்த குற்றத்திற்காக சிறை சென்றார்.

இதேவேளை டி.டி.வி.தினகரன் சார்பில் பிறிதொரு கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இப்படியிருக்கையில் அவரின் மரணத்தின் பின்னர் தற்போது ஆட்சியில் உள்ள அரசு அவரை போன்று ஒரு சர்வாதிகார அல்லது பிடிவாத தன்மையின்றி மத்திய அரசுடன் இணங்கி போகும் ஆட்சியே இன்று தமிழகத்தில் என்பது பலரும் முன்வைக்கும் விமர்சனங்களாகும்.

தமிழகத்தை தன் கட்டுக்குள் வைத்து பல சாதனைகளை நடித்தியதோடு தமிழக மக்களின் வாழ்வாதாரததை மேம்படுத்தி எதற்கும் அஞ்சாத இரும்பு மனுசியாக வாழ்ந்தவர் தமிழகத்தின் அம்மா ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து- கேமசியா

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here