அனைத்துவித போட்டிகளிலிருந்தும் கம்பீர் ஓய்வு!

இந்திய அணியின் மூத்த வீரர் கௌதம் கம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.

மிகவும் ஸ்டைலான தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் இந்திய அணிக்காக கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல்11-ம் திகதி டாக்காவில் நடந்த பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டியில் 2004-ம் ஆண்டு மும்பையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கம்பீர் அறிமுகமானார். ஏறக்குறைய இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியுள்ளார் கம்பீர். டி20 போட்டியில் 2007-ம் ஆண்டு அறிமுகமானார்.

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 9 சதங்கள், 22 அரை சதங்கள் அடங்கும். 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 5,238 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்களும், 34 அரை சதங்களும் அடங்கும். மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக கம்பீர் வலம் வந்து, எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். 37 டி20 போட்டிகளில் விளையாடி 932 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 7 அரை சதங்கள் அடங்கும்.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட கம்பீருக்கு 2016-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க கடைசியாக வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் திகதி நடந்த அந்த டெஸ்ட் போட்டியே கம்பீர் இந்திய அணிக்காக விளையாடிய கடைசிப் போட்டியாகும். அதன் பின் இந்திய அணியில் இருந்து முற்றிலும் ஓரம் கட்டப்பட்டார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கப்டனாகப் பொறுப்பேற்று அந்த அணிக்கு 2 முறை சம்பியன் பட்டத்தை கம்பீர் பெற்றுக்கொடுத்தார். கடைசியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கப்டனாக இருந்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்படாத காரணத்தால் தானாகவே கப்டன் பதவியைத் துறந்து விளையாடாமல் விலகினார்.

இந்நிலையில் ரஞ்சி, துலீப் டிராபி போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் கம்பீரை தொடர்ந்து பிசிசிஐ நிர்வாகம் அணிக்குத் தேர்வு செய்யாமல் புறக்கணித்து வந்தது. வயது மூப்பு ஒரு காரணத்தைக் காட்டி கம்பீர் புறக்கணிக்கப்பட்டார். அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும் கம்பீரை விடுவித்தது. இதையடுத்து தனது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிய கம்பீர் நேற்று ஓய்வு அறிவித்தார்.

இது குறித்து கம்பீர் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், ”மிகுந்த கனத்த இயத்துடன் மிகவும் கடினமான இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.என்னுடைய அனைத்து விதமான கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கம்பீர் வீடியோவில் வெளியிட்ட செய்தியில், ”15 ஆண்டுகள் நான் நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடிய நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும், அழகான இந்த விளையாட்டில் இருந்து இந்த கம்பீர் ஓய்வு பெறுகிறேன். வலிகள், வேதனைகள், தோல்விகள் இருந்தாலும் கூட அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி நகர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது ரஞ்சிக்கோப்பைப் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் கம்பீர், வரும் 6-ம் திகதி ஆந்திரா மாநிலத்துக்கு எதிராக விளையாடுவதே அவரின் கடைசிப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கம்பீர், சமூகத்தில் சிறந்த மனிதநேயம் மிக்க மனிதராகவும் வலம் வந்தார். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவி செய்து, அவர்களின் பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறார். பெண்கள் உரிமைக்காகவும், குழந்தைகள் உரிமைக்காகவும், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களின் போதும் தனது கடுமையான கண்டனத்தை சமூக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்தவர் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here