போராட்டத்துக்கு பணிந்தது அரசு: பிரான்ஸில் எரிபொருள் விலையேற்றம் இரத்து

போராட்டக்காரர்களின் கோரிக்கைக்குப் பணிந்து பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் 3 வாரங்களுக்கு முன்பு டீசல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாரிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். இது பெரும் போராட்டமாக வெடித்தது. சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. தடுக்கச் சென்ற போலீஸாரின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். போலீஸாரிடமிருந்து கண்ணீர் புகைக்குண்டுகளை பிடுங்கி அவர்கள் மீது போராட்டக்காரர்கள் எறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மஞ்சள் நிற மேலாடை அணிந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 வாரங்களாக தொடர்ந்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனால் நாடு முழுவதும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், பிரதமர் எட்வர்ட் பிலிப், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து நேற்று எரிபொருள் விலை உயர்வு வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் எட்வர்ட் பிலிப் அறிவித்தார்.

இதையடுத்து அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர். மஞ்சள் நிற மேலாடை போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அரசு பணிந்துள்ளது என்று சமூக வலைத்தளங்களிலும் செய்தி பரவி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here