ஐந்து நிபந்தனைகளுடன் போன ரெலோ: கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சற்று முன்னர் நடந்து முடிந்தது. பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இந்த கூட்டம் கூடியபோதும், வெகு சாதாரண சந்திப்பாக முடிந்தது.

கூட்டத்திற்கு முன்னர் கறாரான நிபந்தனைகளுடன் செல்வதாக பில்டப் கொடுத்த ரெலோ, இந்த சந்திப்பில் அப்படியான கறார் நிபந்தனையெதையும் விதிக்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட ரெலோ பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் அதை உறுதிசெய்தார். ரெலோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அனல் பறந்த நிலையில், இன்று புகை கூட வரவில்லையே என அவரிடம் கேட்டபோது, “அரசியலில் இதெல்லாம் சகஜம்“ என சிரித்தார்.

நேற்று முன்தினம் வவுனியாவில் ரெலோவின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளில் தம்மை இணைத்துக் கொள்ளவில்லையென எகிறிய ரெலோ பிரமுகர்கள், கறாரான ஐந்து நிபந்தனைகளை விதித்து, அவை ஏற்றுக்கொள்ளப்படா விட்டால், ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிக்க கூடாது என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது. இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ரெலோ மத்தியகுழு கூட்டத்தில் இறுதிசெய்யப்பட்ட ஐந்து நிபந்தனைகளையும் ரெலோ பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். அவற்றை இப்போது வலியுறுத்தினால், பிரதான முயற்சியை- அரசியலமைப்பு உருவாக்கம்- அரசுகள் கவனிக்காமல் விட்டு, இந்த நிபந்தனைகளை மட்டும் முடித்துவிட்டு, மெத்தனமாக இருந்துவிடும் அபாயமுள்ளதை இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியதாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ரெலோ பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இறுதியில், ஐக்கிய தேசிய முன்னணியிடம் மேலும் சில நிபந்தனைகளை முன்வைப்பதென முடிவாகியுள்ளது. இதன்பின்னர் வேறுசில விடயங்களும் பேசப்பட்டது. அவை இந்த விவகாரத்துடன் தொடர்புடையவை அல்ல.

பின்னர் மீண்டுமொருமுறை ஆறுதலாக உட்கார்ந்து பேசுவோமென முடிவாகி, கூட்டம் முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here