டிப்பரின் பின்பகுதியில் உறங்கியவரை கவனிக்காமல் கொட்டப்பட்ட மணல்: குடும்பஸ்தர் பலி!

டிப்பர் வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றப்பட்டிருந்த மணலின் மேல் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்ததை அவதானிக்காமல், சாரதி மணலை கொட்டியதில், மணலில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். மன்னார் சிலாபத்துரை பகுதியில் நேற்று (3) இரவு இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது.

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் சாரதி மற்றும் உதவியாளர்கள் நால்வர் மண் ஏற்றியுள்ளனர்.

பின்னர் டிப்பரில் சிலாபத்துறைக்கு மண் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாகனத்தின் முன்பகுதியில் சாரதியுடன் இன்னும் மூவர் இருந்தனர். எஞ்சிய மற்றைய நபர், டிப்பர் வாகனத்தின் பின் பகுதியில்- மண் ஏற்றப்பட்ட பகுதியில்- ஏறி படுத்துள்ளார்.

சிலாபத்துறையில் மண் இறக்க வேண்டிய இடத்தை அடைந்ததும், பின்பகுதியில் ஒருவர் உறங்கிக் கொண்டிருப்பதை அறியாத சாரதி, தானியக்கி மூலம் மண்ணை கொட்டினார். வாகனத்தின் பின்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தவர், கொட்டப்பட்ட மண்ணில் சிக்கினார்.

மண்ணை கொட்டிய பின்னர், டிப்பர் வாகனம் மீண்டும் குஞ்சுக்குளத்திற்கு சென்றது. அப்பொழுதுதான் தம்முடன் வந்த ஒருவரை காணவில்லையென அந்த குழு அறிந்து கொண்டது. இதையடுத்து, மண் கொட்டப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து, அவசரஅவசரமாக மண்ணை கிளறியபோது, மண்ணில் புதையுண்ட நிலையில் மற்றைய நபர் மீட்கப்பட்டார்.

உடனடியாக அவர் முருங்கன் வைத்தியசாலைக்கு கெண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மணல் அகழ்வு உரிமத்தை பெற்ற நானாட்டான் பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருடைய டிப்பர் வாகனமே இதுவாகும்.

தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை மற்றும் முருங்கன் பொலிஸார் மேற்கொண்ள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here