செயற்கை மழையை வரவழைத்து குளங்களை நிரப்பியாவது தமிழகத்தில் ‘தாமரையை மலரச் செய்வோம்’: தமிழிசை!

வருவது மழைக்காலம் மேகம் சேர்ந்தால் சூரியன் காணாமல் போய்விடும். மழை பெய்யாவிட்டாலும் செயற்கை மழையை வரவழைத்தாவது தாமரையை மலர வைப்போம் என ஸ்டாலின் பேச்சுக்கு, தமிழிசை பதிலளித்துள்ளார்.

கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிப் போராட்டம் திருச்சியில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டாலின் பேசுகையில், ”தமிழகத்தைப் பற்றி மோடிக்கும், பாஜகவுக்கும் அக்கறை இல்லை. காரணம் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் பாஜக செயல்படுகிறது. தமிழகம் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கு தாமரை மலரும்? தமிழகத்தில் தண்ணீர் இல்லை. புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா? புல்லுக்கே வக்கில்லை தாமரை மலர்ந்திடுமாம்” என கேள்வி எழுப்பினார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை எப்பாடுபட்டாகிலும் தாமரையை மலரச் செய்வோம் என்கிற பொருளில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், “இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here