மட்டக்களப்பின் பல பகுதிகளில் சுற்றிவளைப்பு தேடுதல்: வவுணதீவில் அதிரடிப்படை முகாம் அமைக்கப்படுகிறது?


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பரவலாக சுற்றிவளைப்பு தேடுதல், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முகாம்கள் இருந்த பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மநபர்களால் சுட்டும், குத்தியும் கொல்லப்பட்டிருந்தார்கள். இலஙகையையே உலுக்கிய இந்திய சம்பவத்தை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை செய்து வருகிறார்கள். பொலிசாரின் விசாரணை வலயத்தில் முன்னாள் போராளிகள் சிக்கியுள்ளனர்.

மட்டக்களப்பை சேர்ந்த அஜந்தன், கிளிநொச்சியை சேர்ந்த சர்வானந்தன் ஆகியோர் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சுமார் 20 வரையானவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே மட்டக்களப்பின் பல இடங்களிலும் சோதனைகள் நடந்து வருகிறது. இன்றும் அது பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படுகிறது. தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி, வாகரை கட்டுமுறிவு பகுதியிலும், வவுணதீவின் களுவங்கேணி பகுதியிலும் பொலிசாரும், விசேட அதிரப்படையினரும் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினார்கள். வீடுவீடாக சோதனை நடத்தப்பட்டது.

இதேபோல, மகிழவெட்டுவான், இலுப்பையடிச்சேனை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, படுவான்கரையில் முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம்கள் இருந்த பகுதிகள் அனைத்திலும் விசேட அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த சில தினங்களாக தொடரும் சோதனை, சுற்றிவளைப்புக்களினால் வவுணதீவை அண்டிய பகுதிகளில் இயல்பு வாழ்வு குலைந்துள்ளது. மாலையானால் மக்கள் வீடுகளிற்குள் முடங்கி விடுவதை அவதானிக்க முடிகிறது. இரவில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

இதேவேளை, வவுணதீவில் அமைந்திருந்த சிறிய சோதனைச்சாவடியிலேயே இரண்டு பொலிசார் கொல்லப்பட்டிருந்தனர். வழக்கமாக, அங்கு மூன்று பொலிசார் மாத்திரமே கடமையிலிருப்பது வழக்கம். பொலிசார் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு விசேட அதிரடிப்படையினரின் முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here