யாழில் உருவாகிறது நாய்கள் சரணாயலம்!


நாய்களை பாதுகாப்பதற்கான சரணாயலம் ஒன்றை “நிவாரணம்”அமைப்பு யாழ்ப்பாணத்தில் உருவாக்கவுள்ளது. அந்த அமைப்பின் நிறுவுனர் எஸ்.செந்தில் குமரன் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே, இந்த தகவலை வெளியிட்டார்.

பளை பிரதேசத்தில் இந்த சரணாலயம் உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-

“2005ம் ஆண்டு தொடக்கம் எமது அமைப்பின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றோம். ஆரம்பத்தில் புனர்வாழ்வு கழகத்தின் ஊடாக எமது உதவி திட்டங்களை செய்து வந்த நாம் தற்போது நேரடியாக வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவி திட்டங்களை செய்து வருகின்றோம். குறிப்பாக எமது அமைப்பின் ஊடாக இதுவரையில் 100ற்கும் மேற்பட்ட வாழ்வாதார உதவிகளை செய்துள்ளோம்.

இதேபோல் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ தேவைகளுக்கும் கூட எமது உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. எமது இத்தகைய உதவி திட்டங்களுக்கான நிதியை நானும், கனடா மற்றும் அவுஸ்ரேலிய நாடுகளில் வாழும் நண்பர்கள், உதவும் எண்ணம் கொண்ட கொடையாளர்கள் ஊடாக பெறுகிறோம்.

மனிதர்களாக பிறந்த நாம் பிற மனிதர்களுக்கு உதவியளிக்கவேண்டும் என்ற அடிப்படையில் இத்தகைய உதவி திட்டங்களை நாங்கள் செய்து வருகின்றோம். இதற்கு மேலதிகமாக எதிர்காலத்தில் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளை அமைத்து அதனை மக்களிடமே கொடுத்து அவர்களே அதன் ஊடாக நன்மைகளை பெறும் வகையிலான செயற்றிட்டங்கள் தொடர்பான சிந்தனை எங்களிடம் உள்ளது.

அதேபோல் எமது அமைப்பின் இந்த செயற்பாடுகளுக்கு புறம்பாக கிளிநொச்சி பளை பிரதேசத்தில் எமது சொந்த நிதியின் ஊடாக காணி ஒன்றை கொள்வனவு செய்து அதில் நாய்களுக்கான சரணாலயம் ஒன்றிணை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்.

அது எதற்காக என்றால் வட கிழக்கு மாகாணங்களில் இன்று கட்டாக்காலி நாய்களினால் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாக விபத்துக்கள் இடம்பெறுகின்றன. உயிரிழப்புக்களும் நடக்கின்றன.எனவே நாய்களை பாதுகாப்பதற்கான சரணாலயம் ஒன்றை அமைப்பது எங்களுடைய நோக்கம். அதேபோல் விலங்குகள் மீது சுமத்தப்படும் துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம்“ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here