22 வருடங்கள் பொதுச்சபை கூட்டப்படாத வட இலங்கை சங்கீத சபை: எது மெய்யான சபை?

இலங்கையில் ஒரே சமயத்தில் இரண்டு பிரதமர்கள் பதவியிலிருந்ததோ என்னவோ, இலங்கையில் ஒரே சமயத்தில் ஒரு பொறுப்பில், இருவர் பதவி வகிக்கும் விசித்திரங்கள் அரங்கேற தொடங்கியுள்ளன. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் இரண்டு வைத்திய அத்தியட்சகர்கள் பதவியிலிருந்த விவகாரத்தை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்த வகையில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிடுகிறோம்.

வட இலங்கை சங்கீத சபையென முன்னர் ஒரு சபைதான் இயங்கி வந்தது. இப்போது இரண்டு சபைகள் இயங்குகிறது. அதாவது, இரண்டு நிர்வாகம் அந்த சபைக்கு உரிமை கோருகிறது.

அது குறித்த தகவல்களை தொகுத்துள்ளோம்.

வட இலங்கை சங்கீத சபை இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் கலைகளை வளர்த்துவரும் ஒரு பாரம்பரியம் மிக்க சபையாகும். இந்த வட இலங்கை சங்கீத சபைக்கு தற்போது வயது 80 நிறைவடைந்து விட்டது. இந்த வயதுக்கேற்றவாறு நீண்டகாலம் சபையிலே இருந்த மூத்த உறுப்பினர்களும் மறைந்துவிட்டனர்

இந்த சபையினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்கள் மிகவும் தரம்வாய்ந்தவை. ஏனெனில் இந்தசபை ஒரு அரச சபையாக காணப்படுவதுடன் ஒன்று தொடக்கம் ஆறுவரை தரங்கள் கொண்ட அவைக்காற்றுகையுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் இதன் தரம் வலிமை பெற்று விளங்குகின்றது.

அத்தகைய தரம் மிக்க இந்த சபையின் யாப்பின் பிரகாரம் பதவி வழித் தலைவர்களாக யாழ்ப்பாணம் வலய கல்விப் பணிப்பாளர்களே காலாகாலமாக இருந்துவருகின்றனர். அதுமட்டுமல்லாது பதவி வழியாக யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர் பணிமனையின் கணக்காளரே, சபையின் கணக்கு வழக்குகளை ஒழுங்குபடுத்துகின்றார். இதனால் சபையினுடைய சட்டரீதியான நிதி அதிகாரியாகவும் யாழ் வலயக் கல்விப் பணிப்பாளரே காணப்படுகின்றார்.
1996 ஆம் ஆண்டே இந்த சபையின் பொதுச்சபை கூட்டம் இறுதியாக கூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது.

அன்றையதினம் குறித்த நிதியாண்டின் கணக்கு அறிக்கை காட்சிப்படுத்தப்படவில்லை. இதனால் ரகளைகளுடன் கூட்டம் நிறைவுக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது.

சுமார் 22 வருடகாலமாக உத்தியோகபூர்வமாக பொதுச்சபை கூட்டம் நடத்தப்படாமல் இந்த சபை அரச ஆதரவுடன் இயங்கி வந்திருக்கிறது.

காலத்துக்கு காலம் வந்து சென்ற யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர்கள் கூட சபை அங்கத்தவர்களது விருப்பத்திற்கேற்ப நடந்து, பொதுச்சபை கூட்டத்தை நடத்தாது ஒத்திவைத்து வந்தனர்.

தற்போதைய யாழ் வலயக் கல்விப்பணிப்பாளர் சு.சுந்தரசிவம்  கடந்த 04.11.2018 அன்று வட இலங்கை சங்கீத சபைக்கான பொதுக்குழு கூட்டத்தை அதிரடியாக அறிவித்திருந்தார். அதை தடுத்து நிறுத்த சங்கீத நிர்வாகிகள் பிரயத்தனம் செய்ததாக கூறப்படுகிறது..

ஆனால் கல்விப்பணிப்பாளர் சுந்தரசிவம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரது அனுசரணையுடன் வடமாகாண கல்விப் பணிப்பாளருடைய பணிப்புரையின் கீழ், சபை யாப்பு விதிகளுக்கு அமைவாக பொதுக் கூட்டத்தை ஜனநாயக வழிமுறையில் நடத்தி புதிய நிர்வாக குழுவை தெரிவு செய்துள்ளார்.

இதை ஏற்றுக்கொள்ளாத முன்னைய நிர்வாகம், சபை கட்டடத்தையும் நிதி நிர்வாக ஆவணங்களின் பொறுப்புக்களையும் கையளிக்காது தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தற்போதைய நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது.

தற்சமயம் மருதனார்மடத்தில் காணப்படும் சபையின் தலைமை கட்டடத்தை உத்தியோகபூர்வ ரசீதுகள் ஏதும் வழங்காது நிகழ்வுகளுக்கு வாடகைக்கு கொடுத்து நிதி அறவிட்டு வருகின்றனர். சபையின் தலைவராகிய யாழ் வலயக் , தமது இஸ்டப்படி செயற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இவை சட்டவிரோத செயற்பாடு, தற்கு ஒருபோதும் வட இலங்கை சங்கீத சபையின் தற்போதைய நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்புக்கூறப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.

வட இலங்கை சங்கீதசபையின் பரீட்சை மேற்பார்வையாளர்களிற்கான அதிகபட்ச வயது வரம்பு 60 ஆக இருந்ததென்றும், அதனை முன்னைய நிர்வாகத்தில் இருந்தவர்களின் மனைவிகளிற்காக அதிகரித்தார்கள், நாடக கலாவித்தகர் போன்ற உயரிய பட்டங்களை பெறுவதென்றால் நிர்வாகத்தின் உயரதிகாரியொருவரின் மனதிற்கிசைவாக நடந்தாலே முடியும் என வரிசையாக குற்றம் சுமத்துகிறார்கள்.

எப்படியோ கலைஞர்களிற்கான இந்த சபையில் எது ஒரிஜினல், எது ரூப்ளிகேட் என்பதை போன்ற குழப்பம் வருவது ஆரோக்கியமானதல்ல. நிர்வாகரீதியாகவோ, சட்டரீதியாகவோ உடனடியாக குழப்பத்தை தீர்ப்பது அவசியம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here