ஹைதராபாத்துக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்: யோகி ஆதித்யநாத்


“தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என பெயர் மாற்றுவோம்; நகரில் பயங்கரவாதத்தை வேரறுப்போம்“ என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ள யோகி ஆதித்யநாத் பழைய ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:

நமது நாட்டில் நடைபெற்றுள்ள அனைத்து பயங்கரவாதத் தாக்குதல்களிலும் ஹைதராபாத் நகரம் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்து வருகிறது. ஏனெனில், இங்கு பயங்கரவாத ஆதரவாளர்களும், அதற்கு உதவுபவர்களும் உள்ளனர். தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஹைதராபாத் நகரை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து மீட்போம். காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகளுக்கு சுதந்திரம் அளித்திருந்தனர்.

இப்போது, மத்தியில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் பயங்கரவாதிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதம் எங்கு தலைதூக்கினாலும் துப்பாக்கி குண்டுகள்தான் அவர்களுடன் பேசி வருகிறது.

தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் ஹைதராபாத் நகருக்கு பாக்யநகர் என புதிய பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தை அமைதிப் பூங்காவாக்கி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம். காங்கிரஸ் ஆட்சியில் வாக்கு வங்கியை மனதில் கொண்டு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கூட கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். அதுதான் நாட்டில் பல குண்டு வெடிப்புகளுக்கும், அப்பாவி மக்கள் உயிரிழப்புக்கும் காரணமாக அமைந்தது.

ஆனால், பாஜக ஆட்சியில் தவறு செய்பவர்கள் அஞ்சி ஓடும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இதனை யாராவது மறுக்க முடியுமா? என்று யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பினார்.

யோகிக்கு ஒவைஸி பதில்: முன்னதாக, தெலங்கானாவில் பாஜக ஆட்சி வந்தால் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலை ஏற்படும் என்று யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து அசாதுதீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது எனது தந்தையின் நாடு. பல தலைமுறையாக இங்குதான் வசித்து வருகிறோம்.
இந்தியாவில் இருந்து என்னை யாரும் விரட்டிவிட முடியாது. இதுபோன்ற வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியில் போதிய மருத்துவச் சிகிச்சை இன்றி ஆண்டுதோறும் 150 குழந்தைகள் இறந்து வருகின்றனர். முதலில் தனது தொகுதி மக்களையும், தனது மாநிலத்தையும் காப்பாற்றிவிட்டு அடுத்த ஊருக்கு வரட்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here