யாழ் ரௌடிகள் இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள ஹாட்வெயார் ஒன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆவா குழு ரௌடிகள் இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் உள்ள ஹாட்வெயார் ஒன்றின் மீது கடந்த மார்ச் 9ஆம் திகதி பிற்பகல் ரௌடிக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது. இதையடுத்து விசாரணைகளை நடத்திய பொலிசார், நால்வரை கைது செய்தனர். மேலும் பொலிஸாரால் தேடப்பட்டவர்களில் ஒருவர், சட்டத்தரணி ஊடாக மன்றில் முற்பட்டார். பின்னர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன், மேலும் ஒருவரை அடையாளம் காணமுடியவில்லை என்று நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் சந்தியில் நண்பன் செந்தூரனின் பிறந்த நாளைக் கேக் வெடிக் கொண்டாடிய போது ஏற்பட்ட தகராறை அடுத்தே ஹாட்வெயார் மீது தாக்குதல் நடத்தினோம் என சந்தேகநபர்கள் தெரிவித்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர். சில மாதங்களின் பின்னர் சந்தேகநபர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 9 பேருக்கும் எதிராக பொலிஸார் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

எனினும் 9 சந்தேகநபர்களில் 4 பேர் மட்டும் நீதிமன்றில் முன்னிலையாகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்பிக்கப்பட்டது. சந்தேகநபர்கள் இருவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதுடன் ஏனைய இருவர் குற்றச்சாட்டை நிராகரித்து நிரபராதிகள் என்று மன்றுரைத்தனர்.

குற்றத்தை ஏற்றுக்கொண்ட இருவருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் தலா 3 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிவான் தண்டனைத் தீர்ப்பளித்தார்.

ஏனைய 7 சந்தேகநபர்களில் ஒருவரை விடுவிக்க அனுமதியளித்த நீதிவான் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் மன்றில் முன்னிலையாகத் தவறியோருக்கு திறந்த பிடியாணை உத்தரவை வழங்கிய நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், அவர்களை உடனடியாகக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here