ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்கள் அபகரித்த முன்பள்ளியை மீட்டுத்தரக்கோரி உண்ணாவிரதம்!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் காத்தான்குடி பகுதியில் அபகரிக்கப்பட்டுள்ள தமது முன்பள்ளியை மீட்டுத்தருமாறும் கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

எதிர்வரும் 14ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

காத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி, கட்டிடம் 2014ஆம் ஆண்டு தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்டதாகவும், தற்போது தாங்கள் முன்பள்ளியை வேறு இடத்தில் நடத்திவருவதாகவும் முன்பள்ளியின் தலைவர் எம்.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 19வருடமாக குறித்த முன்பள்ளியை நடத்திவந்த நிலையில் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள், காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உள்ள சிலரின் உதவியுடன் குறித்த காணியையும் கட்டிடத்தினையும் அபகரித்தாகவும் அதனை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் முடியாமல்போனதாகவும் அவர் தெரிவித்தனர்.

குறித்த காணியை மீட்டுத்தருமாறு தாம் காத்தான்குடி பிரதேச செயலகத்திடம் பலமுறை கோரியபோதிலும் அவர்கள் பக்கச்சார்பான முறையிலேயே செயற்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் தமது முன்பள்ளிக்குரிய காணி, கட்டிடத்தினைப்பெற்றுக்கொள்ளும் வரையில் போராடும் வகையில் ”துரோகத்திற்கு எதிரான போராட்டம்” என்னும் தலைப்பில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த போராட்டத்தில் அஸ்ஸக்றா முன்பள்ளியின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here