24 மணித்தியாலத்தில் முக்கிய முடிவு; 3 வாரத்தில் அரசியல் குழப்பம் முழுமையாக சீராகும்; அரசியல்கைதிகள் விவகாரம் அதன் பின்னர்: கூட்டமைப்பிடம் மைத்திரி தெரிவிப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இன்று நடந்த சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மஹிந்த ராஜபக்ச தலைமையில் இயங்கிய அரசுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையால் எழுந்த அரசியல் நெருக்கடியால், இன்று மிகக்குறுகிய நேரமே சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்பக்கம் அறிந்தது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், காவல்த்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அரசியல்கைதிகள் விவகாரத்தை கூட்டமைப்பு பிரதிநிதிகள் எடுத்துக் கூறினர்.

காவல்த்துறை, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வழக்கம் போல, இதற்கு பதிலளித்தனர். பல கைதிகள் தீவிரமான சம்பங்களுடன் தொடர்புபட்டவர்கள், வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, 57 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன என விளக்கமளித்தனர்.

இதன்போது குறுக்கிட்ட இரா.சம்பந்தன் “நீங்கள் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் சட்டரீதியானவை. அவற்றை பேச நாங்கள் இங்கு வரவில்லை. அப்படி பேசுவதெனில் நாம் நீதிமன்றத்திற்கு சென்றிருப்போம். அரசியல்ரீதியான, மனிதாபிமான ரீதியான முடிவெடுக்கவே இங்கு வந்தோம். ஜனாதிபதியை பாருங்கள்… தன்னை கொல்ல வந்தவரையே மன்னித்துள்ளார். இனப்பிரச்சனையை தீர்க்க பல நல்லெண்ண நடவடிக்கைகள் அவசியம். அப்படியொன்றுதான் கைதிகள் விடுதலை. அப்படி சிந்தியுங்கள்“ என அதிகாரிகளை ஒரு பிடிபிடித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட ஜனாதிபதி- “சற்று முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது நாட்டில் அரசாங்கம் இல்லை. நான் மட்டுமே இருக்கிறேன். இந்த குழப்பத்தை முதலில் தீர்க்க வேண்டும். அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் இந்த பிரச்சனைகளை தீர்க்கவுள்ளேன்.

தேசிய பாதுகாப்புசபை கூட்டத்தை கூட்டி ஆராயவுள்ளேன். அதிலும் அரசியல்கைதிகள் விடயத்தை ஆராய்வேன். அடுத்த மூன்று வாரத்திற்குள் நாட்டின் அரசியல் குழப்பத்தை முழுமையாக முடிப்பேன். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள். நாட்டு குழறுபடியை முழுமையாக தீர்த்துவிட்டு, இந்த விடயத்தை விரைவாக முடிப்போம்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here