கைதான போராளியின் கைத்தொலைபேசியில் உயிரிழந்த பொலிஸின் படம்?: புதிய கோணத்தில் விசாரணை!

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸார் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதில் கொல்லப்பட்ட தமிழ் பொலிஸ் காதலியும் உள்ளடங்குகிறார்.

இவர்களில் இருவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதுடன் பல கோணங்களில் புலனாய்வு பிரிவு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு கடமையில் இருந்த பொலிஸார் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தை அடுத்து பொலிஸ் மா அதிபர் குறித்த இடத்திற்கு சென்றதுடன், 7 பேர் கொண்ட விசேட புலனாய்வு பிரிவு குழுவை கொழும்பில் நியமித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் க. பிரபாகரன் அதன் உறுப்பினர் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி உறுப்பினர் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேரை மட்டக்களப்பு பிராந்திய குற்றப் புலனாய்வு பிரவு காரியாலயத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அஜந்தன் என்பவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட இராசநாயகம் சர்வானந்தம் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இதேவேளை, மட்டக்களப்பு உயர்பொலிஸ் அதிகாரியொருவர் தமிழ்பக்கத்திடம் தந்த தகவல்படி, கொல்லப்பட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படம், கைதாகியுள்ள முன்னாள் போராளியொருவரின் கைத்தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தரின் முகப்புத்தகத்தில் இருந்து அந்த படம் சில வாரங்களின் முன்னர் பதிவிறக்கப்பட்டிருக்கலாமென பொலிசார் கருதுகிறார்கள்.

ஒரு காதல் விவகாரத்தால் இந்த படம் அவரிடம் வந்ததா?, அந்த விவகாரத்தால் கொலை இடம்பெற்றதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். எனினும், உத்தியோகபூர்வகமாக பொலிசார் இது பற்றி பேச மறுத்து விட்டனர்.

இதேவேளை, இன்று வவுணதீவை அண்டிய பகுதிகளில் இராணுவம், விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொண்டுள்ளனர். வீதிச்சோதனைகள் ஏற்படுத்தப்பட்டு, ஆட்களின் அடையாளத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here