‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்?’: பொ.ஐங்கரநேசன் நேர்காணல்!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், முன்னாள் வடக்கு அமைச்சருமான பொ.ஐங்கரநேசனின் நேர்காணலின் கடந்தவார தொடர்ச்சி இது. அவர் மீதான விசாரணைக்குழுவின் குற்றச்சாட்டுக்கள், அதன் பின்னாலிருந்த அரசியல், சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களை இந்த வாரம் பேசுகிறார்.

தமிழ்பக்கம்: நீங்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வைக்கப்பட்ட முக்கியமான குற்றச்சாட்டு அதிகார எல்லையை மீறியமை. அதிகார எல்லையை மீறி செயற்பட்டது தவறில்லையா?

பொ.ஐங்கரநேசன் : ஊழல்களிலோ, நிதிமோசடிகளிலோ நான் ஈடுபட்டேன் என்று அவர்களால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், எந்த விதத்திலாவது என்னைக் குற்றவாளியாக்கி விடவேண்டும் என்று முன்கூட்டியே அவர்கள் எடுத்த முடிவை ஈடேற்றும் விதமாக நான் அதிகார எல்லையை மீறிச் செயற்பட்டதாகக் குறை கண்டுபிடித்திருக்கிறார்கள். நான் சுற்றுச்சூழல் விடயங்களில் தலையிட்டதை மாகாணசபைச் சட்டங்களைக் காட்டி நான் அதிகாரமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மாகாணத்துக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் பொதுவான ஒருங்கிய நிரலிலேயே(concurrent list) சுற்றுச்சூழல் பட்டியலிடப்பட்டிருக்கிறது. மாகாணசபைகள் சட்டத்தின் பிரகாரம், மாகாணசபை தனக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் சட்டங்களை உருவாக்காமல் இருந்தாலும் நாடாளுமன்றத்தினால் உருவாக்கப்பட்ட சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஆனால், மாகாணசபைகள் சட்டத்தில் மாகாணத்துக்கும் மத்திக்கும் ஒதுக்கப்பட்ட ஒருங்கிய நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றினால் ஆக்கப்பட்ட சட்டங்கள் தொடர்பாக மாகாணசபை அமைச்சருக்கு அதிகாரங்கள் உண்டா இல்லையா என்று எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இங்கு சட்டம் மௌனமாக இருக்கும்போது, உரிமைகளைக் கேட்டுப் போராடுகின்ற எம் இனத்துக்குச் சார்பாக, அதிகாரப் பகிர்வுக்குச் சார்பான ஒரு சட்ட வாசிப்பையே நாம் செய்ய வேண்டும். ஒருங்கிய நிரலில் உள்ள விடயம் தொடர்பாக மாகாணசபை நியதிச் சட்டங்களை உருவாக்காமல் இருந்தாலும், பாராளுமன்றத்தில் ஆக்கப்பட்ட சட்டத்தின் நிறைவேற்று அதிகாரம் மாகாணத்துக்கும் உண்டு என்றே நாங்கள் வாதாட வேண்டும். ஆனால் விசாரணைக்குழு அதிகாரங்களை அரசாங்கத்திடம் தாரைவார்க்கின்ற நிலைப்பாட்டை எடுத்துச் சுற்றுச்சூழல் அக்கறையுடன் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளைச் சட்டபூர்வமற்றதென்றும், அதிகாரமீறல் என்றும் தீர்ப்பெழுதியுள்ளது.

அதிகாரிகள் சுற்றறிக்கைகள் கீறிய கோடுகளைத் தாண்ட மாட்டார்கள். ஆனால், மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் அவ்வாறு இருக்க முடியாது. சுற்றுச்சூழல் தொடர்பாக மாகாண அரசுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்பதற்காகச் சூழலுக்குப் பொருத்தம் இல்லாத திட்டங்களை முன்னெடுக்கும்போதும், வளங்கள் சுரண்டப்படும்போதும் நாங்கள் வாய்மூடி மௌனமாக இருக்க முடியாது. இவை தொடர்பான ஒழுங்குபடுத்தல்களையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள முயலும்போது, விசாரணை அதிகாரிகளின் பார்வையில் அதிகார மீறல்களாகத் தெரிந்தாலும், ஒட்டுமொத்தச் சமூகத்தின் நன்மை கருதிச் செய்யப்படும்போது இவை இயற்கைநீதியின் பார்வையில் ஒருபோதும் குற்றமாகமாது.

தமிழ்பக்கம்: வடக்கு மாகாணசபை நியதிச் சட்டங்களை உருவாக்கியிருந்தால் இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா. அதை ஏன் செய்யவில்லை?

பொ.ஐங்கரநேசன்: இலங்கையின் ஏனைய மாகாணசபைகளுடன் ஒப்பிடும் போது வடக்கு மாகாணசபை வயதில் மிகக்குறைந்தது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தள்ளாடித் தள்ளாடி எழுந்து நிற்கிற வயதில் அது ஓடவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. யுத்தம் துறைசார்ந்த அறிஞர்கள் பலரை நாட்டைவிட்டு வெளியேற வைத்துள்ளது அல்லது கொன்று போட்டது. வடக்கில் சட்டவாக்கத்துறை உட்பட சகல துறைகளிலும் நிபுணத்துவப் பற்றாக்குறை நிலவுகின்றது. ஆனால் இவ்வளவு பின்னடைவுகளின் மத்தியிலும் வடக்கு மாகாணசபை இதுவரை 17 நியதிச்சட்டங்களை உருவாக்கியிருக்கிறது.

நான் விவசாய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே விவசாய அமைச்சுக்கு உட்பட்ட துறைகளுக்குத் தேவையான நியதிச்சட்டங்களைத் தயாரித்து நியதிச்சட்டக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டேன். இவற்றில் சுற்றுச்சூழல் நியதிச்சட்டமும் அடக்கம். நான் அமைச்சர் பதவியில் இருந்து விலகி ஒரு வருடம் கடந்துவிட்டபோதும் இது இன்னமும் நிறைவேற்றப்படாமலே இருக்கின்றது.

நியதிச்சட்டங்களை நிறைவேற்றுவதில் கட்சி அரசியலும் ஒரு பெரும் பின்னடைவாக இருக்கிறது. கூட்டுறவுத்துறை முற்றுமுழுதாக மாகாணசபைக்குரிய விடயம். கூட்டுறவுச் சங்கங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய நியதிச்சட்டத்தைத் தயாரித்து 2016 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலேயே நியதிச்சட்டக் குழுவிடம் ஒப்படைத்துவிட்டோம். நியதிச்சட்டக்குழு அதனைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்ட பின்னர் மாகாணசபையின் ஒப்புதலைப் பெறுவதற்காக அது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் பிழைகள் இருப்பதாகக் கூறி சபையில் வாசிப்புக்குச் சமர்ப்பிக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார். மற்றைய நியதிச்சட்டங்கள் விடயத்தில் நிகழ்ந்ததைப்போல சபையில் வாசிப்புக்கு உட்படுத்தும்போதே திருத்தங்களை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு அவர் விரும்பவில்லை.

கூட்டுறவுத்துறை ஆரம்பத்தில் முதலமைச்சரின் அமைச்சின் கீழேயே இருந்தது. பின்னர் வேலைப்பளு காரணமாக முதலமைச்சர் கூட்டுறவுத்துறையை என்னிடம் ஒப்படைத்தபோது சீ.வி.கே.சிவஞானம் அதனை விரும்பவில்லை. என்னிடம் கையளிக்க வேண்டாமென்று கடுமையாக எதிர்த்தார். ஐங்கரநேசனுடன் தனிப்பட்ட பகை எதுவும் இல்லையென்றும் ஆனால் கூட்டுறவுத்துறை ஐங்கரநேசன் வசம் செல்வதைக் கட்சி ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியே முதலமைச்சரிடம் தனது எதிர்ப்பைக் காட்டினார். தனது கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்தால் தான் தனது விருப்பப்படி முடிவுகளை எடுக்கத் தள்ளப்படுவேன் என்றும் எச்சரித்தார்.

தமிழ்பக்கம்: அரசியலில் ஈடுபடுபவர்கள் பிரச்சினைகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்வது வழமையான ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் உடனுக்குடன் அவற்றுக்கான பதில்களை வழங்கிவிடுவார்கள். ஆனால் உங்களைச்சுற்றிச் சர்ச்சைகள் எழுந்தபோதெல்லாம் நீங்கள் வாயே திறக்கவில்லை. ஏனிந்த மௌனம்?

பொ.ஐங்கரநேசன் : அரசியலுக்கு வரும்போது சர்ச்சைகளும் கூடவே சேர்ந்துவரும் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் நான் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே விமர்சனங்களுக்கு ஆளானேன். இந்த விமர்சனங்களுக்கு நான் உடனேயே எதிர்வினையாற்ற வேண்டும் என்று என்னுடைய நண்பர்களும் விரும்பியிருந்தார்கள். என்மீது குற்றம் சுமத்தியவர்கள், விமர்சனங்களைச் செய்தவர்கள் தவறான புரிதல்களின் அடிப்படையில் அவற்றைச் செய்திருந்தால் என்னுடைய பதில்களுக்கும் பயன் இருந்திருக்கும். ஆனால் இவற்றைச் செய்தவர்கள் திட்டமிட்டு உள்நோக்குடன் செயற்படுவதால் நான் என்ன பதிலை வழங்கினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அதனாலேயே சேறு பூசல்களுக்கெல்லாம் பதில் சொல்லிச் சொல்லி வாய்ச்சமரில் ஈடுபடுவதை நான் விரும்பவில்லை. அத்தோடு, சிலவற்றுக்கு நான் பதில் சொன்னால் சிலர் காயப்பட நேரிடும், சர்ச்சைகளை மேலும் மேலும் தோற்றுவிக்கும் என்பதாலும் மௌனமாக இருந்தேன். ஆனால் இப்பொழுது பதில் சொல்ல வேண்டிய தேவைகள் இருப்பதாகவே உணர்கிறேன்.

தமிழ்பக்கம்: சுன்னாகம் நிலத்தடி நீர் எண்ணெய் மாசு பிரச்சனையில் நொதேன் பவர் நிறுவனத்திற்கு சாதகமாக அறிக்கை தயாரித்து உண்மைகளை முடிமறைக்க முயன்றதாகவும், பிரபல அரசியல்வாதியொருவரை காப்பாற்ற முயற்சித்ததாகவும் உங்கள் மீது விமர்சனம் உள்ளதே?

பொ.ஐங்கரநேசன் : சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்திருந்த எண்ணெய் மாசை விட, இந்தப் பிரச்சினையில் கலக்கப்பட்ட அரசியல் மாசு அதிகம். நானோ, அல்லது இந்த பிரச்சினையை ஆராய்வதற்காக எங்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவோ எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கவில்லையென்றோ, எண்ணெய் மாசு இல்லையென்றோ சொல்லவில்லை. ஆய்வறிக்கையில் ஆபத்தான எண்ணெய் மாசுக்கள் இல்லையென்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிரச்சினையைக் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயற்பட்ட சில தரப்பினர், இதை திரிபுபடுத்தி எண்ணெய் கலக்கவில்லையென்று நாம் சொன்னதாக பரப்புரை செய்தார்கள்.

ஆய்வறிக்கையை நான் தயாரிக்கவில்லை. நிபுகுணர்குழுவே செய்தது. முறையான விஞ்ஞான ஆய்வுகள், முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டு செய்யப்படுவன அல்ல. நாம் நியமித்த நிபுணர்குழுவும் சுயாதீனமாக, எந்தவிதமான தலையீடுகளுமின்றியே ஆய்வுகளை செய்தது. எவரையும் காப்பாற்ற வேண்டும், அல்லது எவரையும் தண்டிக்க வேண்டுமென்ற நோக்கங்கள் எதுவும் ஆய்வுக்குழுவுக்கு இருக்கவில்லை.

தண்ணீரில் எண்ணெய் கலப்புப்பற்றி, ஆராய்வது மட்டுமே அதன் நோக்கம். நான் சொல்லியோ, எவர் சொல்லியோ ஆய்வின் முடிவை மாற்றியமைத்து உண்மைகளை மூடிமறைப்பதற்கு இவர்கள் ஆய்வுநெறி பிழைத்தவர்கள் அல்லர். ஜீவாதாரமான தண்ணீருக்கும், அதை அருந்தும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதற்கு இவர்கள் அறநெறி பழைத்தவர்களும் அல்லர். அரசியல்வாதி ஐங்கரநேசனிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த வேண்டுமென நினைத்தவர்கள், கடைசியில் இந்த மண்ணின் ஆய்வாளர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி விட்டார்கள்.

அரசியல்வாதியொருவரை நான் காப்பாற்ற முயற்சித்ததாகச் சொல்வதும் கற்பனையானது.

நொதேன் நிறுவனத்திற்கான அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவே கொழும்பில் இருந்து பெற்றுக் கொடுத்தார் என்று சிலர் கருதுகிறார்கள். எனக்கு அமைச்சர் பதவியை வழங்கியது தமிழரசுக்கட்சியென்றும் நான் தமிழரசுக் கட்சியில் .ஐக்கியமாகி விடுவேன் என்றும் சிலர் கருத்துகளைத் பரப்பியிருந்தார்கள். இந்த இரண்டு கருத்துகளுக்கும் முடிச்சுப் போட்டவர்களே சுன்னாகம் எண்ணெய் மாசுப் பிரச்சினையில் நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற முயற்சித்ததாக விமர்சித்தார்கள்.

மாவை சேனாதிராசா சுன்னாகத்தில் தனியார் மின்னுற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்குத் பரிந்துரை செய்தார் என்ற அளவில் முதலாவது கருத்தில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. ஆனால் அவர் பரிந்துரை செய்தது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நொதேண் பவர் நிறுவனத்துக்கு அல்ல. அதற்கு முன்னர் அங்கு இயங்கிய வேறொரு நிறுவனத்துக்கே பரிந்துரை செய்திருக்கிறார். அவரது பரிந்துரைக்கான கடிதத்தை மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இழந்ததுக்குப் பிறகு வேறொரு நோக்கத்தோடு தமிழ் ஊடகவியலாளர் ஒருவரிடம் காட்டியிருக்கிறார்.

இரண்டாவது கருத்தில் எள்ளளவும் உண்மையில்லை. தமிழரசுக்கட்சி அமைச்சர் பதவிக்கு என்னைப் பரிந்துரை செய்யவில்லை. முதலமைச்சரே சுயதெரிவாக எனக்கு அமைச்சுப் பதவியை வழங்கினார். தமிழரசுக்கட்சியில் நான் இணைவதாக இருந்திருந்தால் மாகாணசபையில் இவ்வளவு நெருக்கடிகளையும் நான் சந்தித்திருக்க மாட்டேன். தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு முதலமைச்சருக்கு என்னை ஆதரவாக இருக்க வேண்டாம் என்றும், தமிழரசுக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறும், அதற்கான ஏற்பாட்டைத் தான் செய்து தருவதாகவும் கூறினார். அவ்வாறு இணைந்தால்தான் எனக்கு அரசியல் எதிர்காலம் உண்டு என்றும் ஆலோசனைகூட வழங்கினார்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நாளன்று, அப்போது மாகாண அமைச்சராக இருந்த ஒருவர் என்னை அந்த அணியில் இணைந்து முதலமைச்சருக்கு எதிராகக் கையெழுத்திடுமாறும் அமைச்சராக நான் தொடரலாம் என்றும் தெரிவித்தார். நான் தடம் பிறழ்பவனாக இருந்தால் அப்போது எனக்கு இருந்த நெருக்கடிச் சூழலில் இவற்றுக்கெல்லாம் இசைவு தெரிவித்திருப்பேனே.

-தொடரும்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here